Times of Puducherry

அமைச்சர் ரமேஷ் முன்னிலையில் மெழுகுவர்த்தியை கீழே தூக்கிப் போட்ட திருவெறும்பூர் த. வெ.க எம்.எல்.ஏ

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
5 Oct 2026 • 3:51 PM
candle-lighting-issue-bw-cong and tvk

வளைகாப்பு நிகழ்ச்சியில் குத்து விளக்கேற்ற தன்னிடம் மெழுகுவர்த்தி வழங்காமல் காங்கிரஸ் எம்பியிடம் வழங்கியதால் கோபப்பட்டு மெழுகுவர்த்தியை கீழே தூக்கிப் போட்ட திருவெறும்பூர் த. வெ.க எம்எல்ஏவின் செயலால் திருச்சி அரசு விழாவில் பரபரப்பு நிலவியது.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தில் இன்று சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எம் எல் ஏக்கள் நவல்பட்டு விஜி, விக்ணேஷ், கதிரவன், காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் கிறிஸ்டோபர் திலக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் குத்துவிளக்கு ஏற்றப்பட்டது. முதலில் அமைச்சர் ரமேஷ் குத்து விளக்கு ஏற்றினார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பிரத்திக் தயாள் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். பின்னர் எம்எல்ஏக்கள் கதிரவன், விக்ணேஷ் ஆகியோர் குத்து விளக்கை ஏற்றினர்.

அடுத்து குத்து விளக்கு ஏற்ற திருவெறும்பூர் எம்எல்ஏ விஜயகுமார் என்கிற நவல்பட்டு விஜி முன்னே வந்தார். ஆனால் மெழுகுவர்த்தியை அங்கிருந்தவர்கள் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் கிறிஸ்டோபர் திலக்கிடம் கொடுத்தனர். இதனால் கோபமடைந்த நவல்பட்டு விஜி, காங்கிரஸ் எம் பியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது எம்பி அந்த மெழுகுவர்த்தியை விஜியிடம் தந்த பொழுது அதை வாங்கி கீழே விழ வைத்தார். உடனடியாக அமைச்சர் ரமேஷ் தலையிட்டு அவரை சமாதானப்படுத்தினார் பின்னர் அவர் குத்துவிளக்கு ஏற்றினார். காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியில் பங்கு தந்தாலும் த.வெ.கவினர் அவர்களுக்கு உரிய மரியாதை தருவதில்லை என கூறப்படுகிறது.

https://www.facebook.com/share/v/1FaxSrQfnF/

இந்த நிலையில் குத்து விளக்கு ஏற்றுவதிலேயே த.வெ.க எம்.எல்.ஏவிற்கும் காங்கிரஸ் கட்சியின் எம்.பிக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் கூட்டணிக்குள் உள்ள அதிருப்தியை வெளிப்படுத்தியது எனலாம். முன்னதாக, சமுதாய வளைகாப்பு விழாவில் குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்வில் முன்னாள் அமைச்சர் வளர்மதி உள்பட முக்கிய பெண்கள் பலர் இருந்தும் ஆண்கள் மட்டுமே குத்துவிளக்கு ஏற்றியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top