Times of Puducherry
திமுக மாநில துணை அமைப்பாளரும், உப்பளம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அனிபால் கென்னடி கூறியதாவது:
புதுச்சேரியில் நேற்று முன்தினம் பெய்த ஒரு நாள் மழைக்கே பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கிவிட்டது. என்னுடைய உப்பளம் தொகுதியிலும் இதே நிலைதான். குறிப்பாக எனது தொகுதியின் நகர்ப்புற பகுதிகளில் நிலைமை மோசமாக இருக்கிறது. பொதுப்பணித்துறை, மின்துறை, நகராட்சி என பல்வேறு அரசு துறையைச் சேர்ந்தவர்கள் பள்ளங்களை தோண்டிவிட்டு மூடாமல் சென்றுவிடுகின்றனர்.
அல்லது சரியான முறையில் மூடப்படாமல், பள்ளத்தில் தண்ணீர் தேங்கி உள்ளே வாங்கி இருக்கிறது. இதில் வாகனம் ஓட்டும் மக்கள் தெரியாமல் விழுந்து அடிபடுகின்றனர். அத்துடன் சிறிய வாய்க்கால், உப்பனாறு வாய்க்கால் மற்றும் பெரியவாய்க்காலை தூர்வாராமல் இருக்கிறார்கள். மழை வருவதற்கு முன்பு இதை சரி செய்தால்தான் சாலைகளில் ஓடும் வெள்ள நீர் வடிந்து இந்த வாய்க்கால்கள் வழியாக கடலைச் சென்றடையும்.
அதையும் ஆளும் என்ஆர்-பாஜ அரசு செய்யாமல் இருக்கிறது. நல்லது செய்வார்கள் என்பதற்காகத்தான் இந்த அரசுக்கு மக்கள் வாக்களித்துள்ளனர். அதை செய்யாமல் இருக்கும் இந்த அரசுக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், உப்பளம் தொகுதியின் கடலோர பகுதிகளில் லைட் அவுஸ் வரை கடல் அரிப்பைத் தடுக்கவும், அங்குள்ள வீடுகளை பாதுகாக்கவும் கல் கொட்ட வேண்டும் என்று அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. மழைக் காலத்தில் கடல் அரிப்பால் மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு அரசு உடனடியாக செயல்பட்டு கற்களை கொட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
மழைக்காலம் தொடங்கிய பிறகும் இது குறித்து கவனம் இல்லாமல் இருப்பது இந்த அரசின் செயலற்ற தன்மையைக் காட்டுகிறது. உடனடியாக நடவடிக்கை எடுக்கத் தவறினால், திமுக சார்பில் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்த வேண்டிய சூழல் ஏற்படும் என்பதை இந்த அரசுக்கு எச்சரிக்கையாக தெரிவித்துக்கொள்கிறேன்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.