Times of Puducherry

காவிரி துலா ஸ்நானம்: திருப்பராய்த்துறையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
18 Oct 2026 • 6:02 PM
on-thula-day-thousands-of-devotees-bathed-kaveri-river

திருச்சி, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை முதலான மாவட்டங்களில் ஐப்பசி மாதம் சூரியோதயத்தில் செய்யும் புனித ஸ்நானத்தை துலா காவிரி ஸ்நானம் என்றே அழைப்பார்கள்.

இந்தப் பூவுலகில், அறுபத்தாறு கோடி தீர்த்தங்கள் உள்ளன எனச் சொல்கிறது புராணம். துலாமாதமான ஐப்பசியில் உலகிலுள்ள அறுபத்தாறு கோடி தீர்த்தங்களும் காவிரியில் சங்கமமாகின்றன என்பது ஐதீகம். அந்த வகையில்,திருச்சிக்கு அருகில், அகண்ட காவிரியின் தென்கரையில் திருப்பராய்த்துறையும் அங்கு தாருகாவனேசுவரர் கோயிலும் அமைந்துள்ளன. இந்த ஆன்மீகத் தலம் காவிரி துலா ஸ்நானத்திற்குப் புகழ்பெற்ற ஒன்றாகும்.

காவிரி துலா ஸ்நானம்: திருப்பராய்த்துறையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல்

இதனை முன்னிட்டு துலா மாதமான ஐப்பசி முதல் நாளான இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வழிபட்டனர்.
காவிரி தேவியை வணங்கி துதிப்பவர்கள் சொர்க்க லோகம் செல்லும் பாக்கியத்தைப் பெறுகிறார்கள். தன்னில் நீராடுபவர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி வளமான வாழ்வு தருபவள் என்கிறது காவிரி புராணம்.

காவிரி துலா ஸ்நானம்: திருப்பராய்த்துறையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல்

நதி தேவதைகளும், தேவர்களும், மானிடர்களும் துலா மாதத்தில் காவிரியில் நீராடி தங்களிடம் உள்ள பாபங்களைப் போக்கிக்கொண்டதும், அந்தக் கறைகள் அனைத்தையும் காவேரி போக்கிக்கொள்ள திருமங்கலக்குடி திருத்தலத்திலும், மாயூரத்தில் (மயிலாடுதுறை) உத்தர வாகினியாக (தெற்கிலிருந்து வடக்கு நோக்கிப் பாய்வது) இருந்து காவிரி போக்கிக்கொள்கிறாள் என்பது ஐதீகம்.

ஸ்ரீரங்கம் திருத்தலத்தில் அருள்புரியும் ரங்கநாதருக்கு ஐப்பசியில் தங்கக்குடங்களில் ஸ்ரீரங்கத்தின் தென்பகுதியில் உள்ள அம்மா மண்டபம் காவிரி நதிக்கரைப் படித்துறையிலிருந்து புனிதத் தீர்த்தத்தை சேகரித்து யானை மீது எடுத்து வந்து அபிஷேகம் செய்வர். மற்ற மாதங்களில் ஸ்ரீரங்கத்தின் வடக்கில் உள்ள கொள்ளிடத்தில் இருந்து வெள்ளிக் குடங்களில் தீர்த்தம் கொண்டுவந்து அபிஷேகம் செய்வார்கள்.

காவேரியில் துலா ஸ்நானம் செய்து ஸ்ரீரங்கநாதரை வழிபட்டதன் பலனாக சந்தனு மகாராஜா பீஷ்மரை புத்திரனாக அடைந்தார். அர்ச்சுனன், துலா ஸ்நானம் செய்து ஸ்ரீரங்கநாதப் பெருமாளை துதித்து சுபத்ராவை மணம் புரிந்தான் என்று புராணம் கூறுகிறது. அசுரர்களை அழித்ததால் மகாவிஷ்ணுவிற்கு பற்றிய “வீரஹத்தி’ தோஷம் போக்க, காவேரியில் ஐப்பசி மாதம் நாக சதுர்த்தியன்று துலா ஸ்நானம் செய்து, தோஷம் நீங்கப்பெற்றார் என்று துலாக் காவேரி மகாத்மியம் கூறுகிறது.

ஐப்பசி முதல் தேதி திருச்சிக்கு அருகிலுள்ள திருப்பராய்த்துறையிலும், இரண்டாவது நீராடலை ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையிலும்,
கடைசி தேதியன்று மயிலாடுதுறை நந்திக் கட்டத்திலும் முழுக்குப் போட வேண்டும் என்பது ஐதீகம்.

தலைக்காவேரி, ராமபுரம், ஸ்ரீரங்கம், திருப்பராய்த்துறை, திருவானைக்காவல், சப்தஸ்தானம், திருவையாறு, புஷ்பாரண்யம், திருச்சாய்க்காடு, திருவெண்காடு, மயிலாடுதுறை, கும்பகோணம், திருவிடைமருதூர் முதலிய காவேரி நீர்த்துறைகள் துலா மாதத்தில் நீராட சிறந்தவையாகக் கருதப்படுகின்றன.

“துலா மாதத்தில் காவிரியில் நீராடினால் உன்னுடைய பாவங்கள் நீங்கும்” என மகாவிஷ்ணு அருளியதாக நம்பும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள், ஐப்பசி முதல்நாளான இன்று காவிரி நதியில் புனித நீராடி வழிபடுவது வழக்கம். அந்த வகையில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் புனித நீராடினர் திருப்பராய்த்துறை காவிரி படித்துறையில்.

சூரிய பகவான் கன்னி ராசியில் இருந்து விடைபெற்று, துலாம் ராசியில் பயணிக்கும் இந்த ஐப்பசி மாதம் முழுவதுமே காவிரியில் நீராடுவது அளவற்ற புண்ணியங்களைத் தரும் என்று இந்து தர்ம சாஸ்திரங்கள் கூறும் நம்பிக்கையின் அடிப்படையில், திருப்பராய்த்துறை, மயிலாடுதுறையில் துலா கட்டம் / நந்திக் கட்டம், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், திருவாணைக்காவல், தலைக்காவேரி (காவிரி உற்பத்தியாகும் இடம்) ஆகிய ஆன்மீகத் தலங்களிலும் புனித நீராடி வழிபட்டனர்.

சூரியோதய நேரத்தில் திருச்சி திருப்பராய்த்துறையில் கூடிய பல்லாயிரக்கணக்கான மக்கள் காவிரியில் நீராடி, காவிரித் தாய்க்குப் பூஜையும், முன்னோர்களுக்குத் தர்ப்பணமும் பிதுர் பூஜைகளும் செய்துவிட்டு, மீண்டும் நீராடி முடித்த பின் ஏழைகளுக்கு அன்னதானமும் வஸ்திரத் தானமும் வழங்கினார்கள்.

துலா ஸ்நானம் செய்வதால் ஆயுள், ஆரோக்கியம், தேஜஸ், கல்வி, சௌபாக்கியம் மற்றும் மனவிருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top