Times of Puducherry
தமிழ்நாட்டில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் அடுத்த 2027ம் ஆண்டு மே மாதத்தில் ஒரே நேரத்தில் நடத்துவதற்கு தமிழக அரசுமுடிவு செய்து இருக்கிறது.
தமிழ்நாட்டில் 28 மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட ஊராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த ஆண்டு (2025) ஜனவரி 5-ந் தேதியுடன் முடிவடைந்தது.
இதையடுத்து, அந்த உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்கத் தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களின் பதவிக்காலம் அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த 28 மாவட்டங்களில் தனி அலுவலர்களின் பதவிக்காலம் கடந்த 19-ந்தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து அவர்களின் பதவிக்காலத்தை அடுத்த ஆண்டு (2027) ஏப்ரல் 19-ந்தேதி வரை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆகிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் 5 ஆண்டு பதவிக்காலம் 2027-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் முடிவடைய உள்ளது.
மேலும் 46 ஊரக உள்ளாட்சி அமைப்புகளை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைத்து, விரிவாக்கப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சிஅமைப்புகளுக்கான அறிவிப்புகளை வெளியிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதனால் கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட ஊராட்சிகளின் எல்லைகளில் மாற்றங்கள் ஏற்படும். புதிய ஊரக உள்ளாட்சி அமைப்புகள் உருவாக்கப்பட்டதை தொடர்ந்து, 23 மாவட்டங்களில் வார்டு மறுவரை மற்றும் ஒதுக்கீட்டு பணிகளை முடிக்க வேண்டியுள்ளது.
இந்தப்பணிகள் நிறைவடையாமல் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாது என்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், 2024-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கு ஒன்றில், மறுசீரமைப்பு பணிகள் முடிந்த பின்னரே ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதாக அரசு கோர்ட்டில் உறுதியளித்துள்ளது.
இதற்கிடையே, ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களை மே மாதம் ஒரே நேரத்தில் நடத்த அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.