Times of Puducherry
தமிழ்நாட்டிற்குரிய காவிரி நீரைப் பெறுவதில் அரசுக்கு விருப்பம் இல்லையா என்றும் நீர்வளத்துறை செயலாளராக வடமாநிலத்தவரை நியமிக்க வேண்டிய அவசியம் என்ன என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழ்நாட்டின் நதிநீர் உரிமைகளோடும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தோடும் தொடர்புடைய காவிரி தொழில்நுட்பக் குழுமம் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான நீர்ப்பிரிவின் துணைத்தலைவர் பதவியை நிரப்புவதில் தமிழ்நாடு அரசு காட்டி வரும் தாமதத்திற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
காவிரி தொழில்நுட்பக் குழுமத்தின் துணைத்தலைவராகப் பணியாற்றிய செல்வராஜ் அவர்கள் கடந்த 28.06.2026 அன்று பதவியிலிருந்து விலகிய நிலையில், அந்தப் பொறுப்பு காலியானது. இதையடுத்து, அப்பதவியை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில், தமிழ்நாடு நீர்வளத்துறை கடந்த 09.10.2026 அன்று வெளியிட்ட அரசாணை எண் 71 மூலம், காவிரி தொழில்நுட்பக் குழுமம் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான நீர்ப்பிரிவின் துணைத்தலைவர் பதவியை நிரப்புவதற்கான அரசின் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அந்தப் பொறுப்புக்கு தற்போது பணியில் உள்ள நீர்வளத்துறை தலைமைப் பொறியாளரை நியமிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாணை வெளியிடப்பட்டு 17 நாட்கள் கடந்தும், துணைத்தலைவரின் பெயரை அரசு இதுவரை அறிவிக்காதது ஏன்?
அரசாணை பிறப்பிப்பதோடு நிர்வாகத்தின் கடமை முடிந்துவிடுகிறதா? நியமனத்திற்கான அனுமதி வழங்கப்பட்ட பின்னரும் அப்பொறுப்பை நிரப்புவதில் மேலும் தாமதம் செய்வதன் நோக்கம் என்ன?
காவிரி தொழில்நுட்பக் குழுமம் தமிழ்நாட்டின் மாநிலங்களுக்கு இடையேயான நீர்விவகாரங்களில் தொழில்நுட்ப மற்றும் சட்டரீதியான ஆலோசனைகளை வழங்கும் முக்கிய அமைப்பாக செயல்பட்டு வருகிறது. காவிரி உள்ளிட்ட நீர்விவகாரங்களில் தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை வலுப்படுத்துவதற்குத் தேவையான தொழில்நுட்பத் தரவுகள் மற்றும் ஆவணங்களைத் தயாரிப்பது உள்ளிட்ட பணிகளில் இவ்வமைப்பின் பங்கு முக்கியமானது.
அப்படியிருக்க, இவ்வளவு முக்கியமான அமைப்பின் துணைத்தலைவர் பதவியை நிரப்புவதற்கான அரசாணை வெளியிடப்பட்ட பின்னரும் நியமனத்தை நிறைவு செய்யாமல் இருப்பது ஏன்? அரசாணை வெளியிட்ட பிறகும் ஒருவரை நியமிக்க முடியாத அளவுக்கு தமிழ்நாட்டின் நீருரிமை விவகாரங்கள் அரசுக்கு முக்கியத்துவம் இல்லாதவையா? அரசாணை இருக்கிறது. அனுமதி இருக்கிறது. கூடுதல் நிதிச்சுமையும் இல்லை. அப்படியென்றால் தாமதம் ஏன்?
நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் அவர்களும், நீர்வளத்துறைச் செயலாளர் பிரசாந்த் எம். வட்நரே அவர்களும், அரசாணை எண் 71 வெளியிடப்பட்ட பிறகும் துணைத்தலைவர் நியமனத்தை நிறைவு செய்யாததற்கான காரணம் என்ன? என்பதை தமிழ்நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும். தமிழ்நாட்டின் நீராதாரத் தேவையை உணர்ந்து தெரிந்த, தமிழ்நாட்டில் உள்ளவர்களை நீர்வளத்துறை செயலாளராக நியமிக்காமல், வட மாநிலத்தவரை நியமிக்க வேண்டிய அவசியம் ஏன் வந்தது?
தமிழ்நாட்டின் நதிநீர் உரிமை என்பது ஒரு சாதாரண நிர்வாகப் பிரச்சினை அல்ல. அது விவசாயிகளின் வாழ்வாதாரம், குடிநீர்ப் பாதுகாப்பு மற்றும் மாநிலத்தின் நீர்வள எதிர்காலத்துடன் தொடர்புடைய முக்கியமான பிரச்சினையாகும்.
எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, அரசாணை எண் 71-ன் அடிப்படையில் தகுதியான தலைமைப் பொறியாளரை காவிரி தொழில்நுட்பக் குழுமம் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான நீர்ப்பிரிவின் துணைத்தலைவராக காலதாமதமின்றி நியமிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.