Times of Puducherry
ஜிப்மர், உடற்கூறியல் துறை சார்பில், உலக உடற்கூறியல் தினம் முன்னிட்டு, முழு உடல் தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், புதுச்சேரி ராக் பீச்சில் விழிப்புணர்வு நடைப்பயணம் நடைபெற்றது.
ஜிப்மர் நிர்வாகக் கட்டடத்தில் இருந்து அதிகாலையில் தொடங்கிய இந்த நடைப்பயணம் ராக் பீச் வரை சென்றது. மருத்துவக் கல்வி, உடற்கூறியல் ஆராய்ச்சி மற்றும் எதிர்கால மருத்துவ நிபுணர்களின் பயிற்சியில் முழு உடல் தானத்தின் முக்கியத்துவத்தைப் பொதுமக்களிடம்எடுத்துரைப்பதே இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.
மருத்துவ அறிவியல் மற்றும் கல்வியின் வளர்ச்சிக்கு உடல் தானம் செய்பவர்களின் பங்களிப்பு இன்றியமையாதது என்பதைவலியுறுத்தும் வகையில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி அமைந்தது. அக்டோபர் 10 முதல் 15, 2026 வரை நடைபெறும் இவ்வார விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடைப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. முழு உடல் தானம் குறித்த பொதுமக்களின் விழிப்புணர்வை அதிகரிப்பதுடன், மாணவர்களின் கல்வி சார்ந்த ஈடுபாட்டை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன.
இதன் தொடர்ச்சியாக, அக்டோபர் 13 அன்று “உடற்கூறியலில் செயற்கை நுண்ணறிவு:சிறந்த கற்றல் உதவியா அல்லது ஆபத்தான குறுக்குவழியா?” என்ற தலைப்பில் விவாத நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அக்டோபர் 14 அன்று காணொளி மற்றும் ரீல்ஸ் போட்டி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிகள் மூலம் மருத்துவக் கல்வியில் செயற்கை நுண்ணறிவின் வளர்ந்து வரும் பங்கு, அதன் நன்மைகள், வரம்புகள் மற்றும் பொறுப்பான பயன்பாடு குறித்து மாணவர்கள் ஆராய்ந்து கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள வாய்ப்பு ஏற்படும்.
வார நிகழ்ச்சிகளின் நிறைவாக, அக்டோபர் 15 அன்று ஜிப்மர் சிற்றரங்கில் தொடர் மருத்துவக் கல்வி நிகழ்ச்சி (CME) நடைபெற உள்ளது. உடற்கூறியல் துறையில் அறிவைப் புதுப்பித்தல் மற்றும் திறன் மேம்பாட்டை ஊக்குவிப்பதே இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும்.
பொதுமக்கள் பங்கேற்பு, மருத்துவக் கல்வி மற்றும் புதிய தொழில்நுட்பங்களின் பொறுப்பான பயன்பாடு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் நிகழ்ச்சிகள் மூலம், மருத்துவ அறிவியல் வளர்ச்சியில் முழு உடல் தானத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கவும், எதிர்கால மருத்துவ நிபுணர்களின் கல்வி மற்றும் ஆராய்ச்சியை மேம்படுத்தவும் ஜிப்மர் தொடர்ந்து முயன்று வருகிறது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.