Times of Puducherry
திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசாமி திருக்கோவிலில் சாமிதரிசனம் செய்த பிறகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
தமிழகக் கோயில்களில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட கூடுதல் கட்டணமோ, அல்லது கட்டணமில்லா தரிசனத்திற்குப் பணமோ வசூலிக்கக்கூடாது என திட்டவட்டமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்ரீரங்கத்தில் உள்ள கட்டணமில்லா கழிவறையில் பணம் வசூலித்த நபர்மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைந்து மூன்று மாதகாலமே நிறைவடைந்துள்ள நிலையில், முந்தைய ஆட்சிக்கால திட்டங்கள் கைவிடப்பட்டதாக எழுந்துள்ள புகாருக்கு, தற்போதுதான் பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்துள்ளது. ஒரேநாளில் அனைத்து மாற்றங்களையும் கொண்டுவர முடியாது. முந்தைய ஆட்சியின் திட்டங்களை ஆய்வுசெய்து, எவை முக்கியமோ அவற்றுக்கு முன்னுரிமை அளித்து டெண்டர் விடப்பட்டு வருகிறது.
திருச்சியில் தற்பொழுது நடந்துவரும் மேம்பாலப் பணிகளை விரைவுபடுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது, இதற்கு திருச்சி மாநகராட்சி நல்ல ஒத்துழைப்பை வழங்கி வருகிறது. ஸ்ரீரங்கம் கோயில் கால்வாய்களில் தண்ணீர் தேங்கி சுகாதாரச்சீர்கேடு நிலவுவதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு, கோவில் கட்டுமானப்பணிகளின்போது கால்வாய்களுக்குள் விழுந்த பெரிய கற்களை அகற்றும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன, பருவமழை தொடங்கியுள்ளதால், சென்னையில் தேங்கும் தண்ணீரை அகற்ற ஊழியர்கள் இரவோடு இரவாக பணியாற்றி வருகின்றனர். திருச்சியிலும் சுகாதாரப் பணிகள் தொடர்ச்சியாக முடுக்கிவிடப்பட்டுள்ளன.
பண்டிகைகாலங்களில், விசேஷ நாட்களில் கோயில்களுக்கு அதிக அளவில் பக்தர்கள் வருவது வழக்கம், அவ்வாறு வரும் பக்தர்கள், கோயில் ஊழியர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். திருச்சி கிழக்குத் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடப்போவதாக வெளியாகும் தகவல், ஆளும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு (TVK) சவாலாக இருக்குமா? என்ற கேள்விக்கு, “அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரட்டும், அப்புறம் பார்க்கலாம்” என்று அமைச்சர் சுருக்கமாகப் பதிலளித்தார்.
மேலும், திருச்சியில் தவெக-வின் 3வது மாநாடு நடைபெறுவது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை என்றும் கூறினார்.திருவண்ணாமலை விவகாரம் குறித்த கேள்விக்கு, திருவண்ணாமலை கோயிலுக்குள் மாற்று மதத்தினர் நுழைந்தது குறித்த சர்ச்சைக்குப் பதிலளித்த அமைச்சர், “திருவண்ணாமலை கோயிலில் உரிய அனுமதி பெற்ற பிறகே மாற்றுமதத்தினர் உள்ளே வந்துள்ளனர். அதில் எந்த விதிமீறலும் இல்லை. தமிழக மண் மதச்சார்பற்ற சமூகநீதிக்கான மண், இங்கே எந்தக்காலத்திலும் மதத்தை வைத்து அரசியல் செய்யவேண்டிய கட்டாயம் இல்லை. முதலமைச்சர் எம்மதமும் சம்மதம் என்ற கொள்கையோடு அனைத்துக் கோயில்கள், பள்ளிவாசல்கள் மற்றும் சர்ச்சுகளுக்குச் செல்கிறார். நாங்களும் அதைப்பின்பற்றி அனைவரையும் சமமாகப் பார்க்கிறோம். ஒருசிலருக்கு மத அரசியலைத் தவிர வேறு எதுவும் தெரியாது என்பதால், அவர்கள் இதைப் பெரிதாக்குகிறார்கள் என்று காரசாரமாகப் பதிலளித்தார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.