Times of Puducherry
பள்ளிகள், கல்லூரிகள், கோயில்கள், குடியிருப்புப் பகுதிகள் என எந்தவித கட்டுப்பாடுகளுமின்றி ரெஸ்டோ பார்கள் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது . அதன் விளைவாக வார இறுதியில் மட்டும் புதுச்சேரியை நோக்கிப் மது பிரியர்கள் வந்தனர் . தற்போது அண்டை மாநில மதுப் பிரியர்கள், வார நாட்களிலும் குவிந்து வருகின்றனர்.
இது ஒருபுறமிருக்க மதுப்பிரியர்களை ஈர்ப்பதற்காக, தங்கள் கடைகளுக்கு ஆண்களுடன் வரும் பெண்களுக்கு மது இலவசம் போன்ற சலுகைகளையும் அறிவிக்கின்றன சில ரெஸ்டோ பார்கள்.
புதுச்சேரி கலால் துறை விதிகளின்படி மதுபானக் கடைகள் மற்றும் விடுதிகள் தங்களது வளாகங்களில் வாடிக்கையாளர்களை மது அருந்தத் தூண்டும் வகையிலோ அல்லது மது விற்பனையை ஊக்குவிக்கும் வகையிலோ விளம்பரப் பலகைகள் வைப்பதற்கு தடை விதித்திருக்கிறது. மேலும், அவர்களைக் கவரும் விதமாக பரிசுப் பொருட்கள் மூலமாகவோ விளம்பரம் செய்யவும் கடுமையான தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், அதையும் மீறி, மதுபான சலுகைகளைக் குறிப்பிட்டு கடைகளின் வாசல்களிலும், பொது இடங்களிலும் பேனர்கள் வைக்கப்படுகின்றன. பொதுமக்கள் புகார்களின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகமும், கலால்துறையும் அவற்றை அகற்றுவதால், தற்போது ரெஸ்டோ பார் உரிமையாளர்கள் சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்ய ஆரம்பித்திருக்கின்றனர்.
ரெஸ்டோ பார்களில் இசைக்கப்படும் இசைகளுக்கு பெண்கள் நடனமாடும் வீடியோக்கள் வெளிப்படையாக, இன்ஸ்டாவில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. அப்படி புதுச்சேரி திருவள்ளுவர் சாலையில் செயல்படும் ஒரு ரெஸ்டோ பாரின் உரிமையாளர், மதுப்பிரியர்களை ஈர்க்க ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.
அந்த வீடியோவில், `எல் நினோ வெயிலுக்கு இளநீர் குடிக்கலாம்’, ஆனால் இரண்டுக்கு மேல் குடிக்க முடியாது. மோர் குடிக்கலாம். ஆனால் அதிகம் குடித்தால் வயிறு கெட்டுவிடும். அதனால் உங்களுக்கு அன்லிமிடெட் பீர் வேண்டுமா எங்களிடம் வாருங்கள்? ரூ.1,200… எத்தனை பீர் வேண்டுமானாலும் குடியுங்கள். ஆனால் இடையில் சிறுநீர் கழித்தால் அந்த சலுகை இல்லை’ என்று பேசியிருந்தார்.
இந்த விளம்பரத்தைப் பார்த்து அதிர்ந்து போன பொதுமக்கள், மதுப்பிரியர்களின் இந்த விளம்பரம் குறித்து கலால்துறைக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் புகாரளித்தனர். அதையடுத்து அந்தக் கடை மீது நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் குலோத்துங்கன் கலால்துறைக்கு உத்தரவிட்டார்.
அதனடிப்படையில் அந்தக் கடைக்கு சீல் வைத்த கலால்துறை, தாசில்தார் ராகேஷ் கண்ணா தலைமையில் கலால் சட்டம் மற்றும் 1970-ஆம் ஆண்டு விதிகளையும் மீறியதற்காக, கருவடி குப்பம் பகுதியில் இயங்கும் ‘ராஜராஜன் வைன்ஸ்’ (Rajarajan Wines) மற்றும் திருவள்ளுவர் சாலையில் இயங்கும்’ராணா ஃபுட் ஸ்டாப்’ (Rana Food Stop – Atoms Kitchen) ஆகியன ரெஸ்ட்டோபர்களுக்கு இன்று புதுச்சேரிகலால் துறை தாசில்தார் ராகேஷ் கண்ணா தலைமையில் போலீசார் முன்னிலையில் அதிரடியாக சீல் வைத்தார்கள்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.