Times of Puducherry
‘புதுச்சேரியில் புகையிலை இல்லா இளைஞர் நலன் பிரச்சாரம் 4.0’ தொடக்க நிகழ்வில் மருத்துவ, செவிலியர் மாணவர்களின் விழிப்புணர்வு பேரணியை முதலமைச்சர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.
புதுச்சேரியைப் புகையிலை இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதே அரசின் எண்ணம்: அதற்கு விழிப்புணர்வு அவசியம் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி அரசு சுகாதாரத்துறை, தேசிய சுகாதார இயக்கம் மற்றும் தேசிய புகையிலை கட்டுப்பாட்டுத் திட்டம் சார்பில் புதுச்சேரியில் புகையிலை இல்லா இளைஞர் நலன் பிரச்சாரம் 4.0-ஐ தொடங்கியுள்ளன. இந்தப் பிரச்சாரம் அக்டோபர் 28ஆம் தேதி முதல் டிசம்பர் 26-ஆம் தேதி வரை 60 நாட்கள் நடைபெறுகிறது. இதன் மூலம் இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்களிடையே புகையிலை பயன்பாட்டைக் குறைப்பதுடன், புகையிலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.
இந்த விழிப்புணர்வு பிரச்சார பேரணி கதிர்காமம் இந்திராகாந்தி மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் சட்டமன்ற உறுப்பினர் அழகானந்தம், சுகாதாரத்துறை இயக்குநர் செவ்வேல் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் இருந்தனர். பேரணியில் 200-க்கும் மேற்பட்ட சுகாதாரத்துறை மற்றும் மருத்துவக் கல்வி நிறுவனங்களின் அதிகாரிகள், மருத்துவர்கள், செவிலியர் மாணவர்கள் கலந்துகொண்டு பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சியில், புகையிலையினால் ஏற்படும் நுரையீரல் புற்றுநோய், வாய் மற்றும் தொண்டைப் புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, புதுச்சேரி மாநிலத்தில் புகையிலை பழக்கம் இல்லாத ஒரு மாநிலமாக மாற்ற வேண்டும் என்பது மத்திய அரசு மற்றும் நம்முடைய எண்ணமாகும். இந்திய அளவில் புகையிலை வழக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 32 கிராமங்கள் காசநோய் இல்லாத கிராமங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் 42 கிராமங்களை காசநோய் இல்லாத கிராமங்களாக மாற்ற அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
புகையிலை பழக்கம் என்பது பல நோய்களையும், குறிப்பாக காசநோய் வருவதற்கும் ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. மேலும், புகையிலை பழக்கம் உள்ளவர்களுக்கு வேறு சில நோய்கள் வருவதையும் நாம் காண்கிறோம்.
எனவே, புகையிலை மற்றும் போதைப்பொருள் பழக்கத்தை இளைஞர்களும் மாணவர்களும் முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும் என்றும், தங்களின் உடலைத் தாங்களே காத்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.