Times of Puducherry
சாத்தான்குளத்தில் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையில் இருந்த இந்தி எழுத்துக்கள் அழிக்கப்பட்டு, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தமிழக மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த வழிகாட்டி பலகையில், ஊர்களின் பெயர்கள் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளுடன் இந்தியிலும் பொறிக்கப்பட்டிருந்ததால் சர்ச்சை எழுந்தது. இரு மொழி கொள்கைக்காக போராடிய தமிழ்நாட்டில் இந்தி மொழியை அனுமதிப்பதா எனக் கூறி எதிர்க்கட்சிகள் தமிழ்நாடு அரசுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.
குறிப்பாக முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது X பக்கத்தில், “இதுவரை ஒன்றிய அரசின் இந்தி திணிப்பை தான் தமிழ்நாடு எதிர்கொண்டு வந்தது, ஆனால் தற்போது மாநில அரசும் அதே பணியை செய்வதுதான் அவர்கள் சொன்ன மாற்றம் போல, எல்லாவற்றிலும் ஆழம் பார்த்துவிட்டு எதிர்ப்பு கிளம்பியதும் U-Turn அடிக்கும் தவெக அரசின் மற்றுமொரு முயற்சியா?” இது என விமர்சித்து இருந்தார்.
வட மாநில சமூக வலைதள பிரபலங்களுக்காக ரீல்ஸ் ஆட்சி நடத்தும் தவெக அரசு இதன் ஆபத்தை உணர்ந்து உடனடியாக தனது அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும், இருமொழிக் கொள்கை தான் தமிழ்நாட்டின் உயிர்க் கொள்கை, அதில் வெளியிட விளையாட வேண்டாம் என்றும் மு.க.ஸ்டாலின் எச்சரித்து இருந்தார். இந்த நிலையில் இந்தியில் பெயர் பலகை அமைக்கப்பட்ட விவகாரத்தில் நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர் தற்காலிக பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் – நாசரேத் மாநில நெடுஞ்சாலையில் (SH-93) புதிதாக வைக்கப்பட்ட வழிகாட்டிப் பலகையில் தமிழ் மற்றும் ஆங்கிலத்துடன், இந்தி மொழியிலும் ஊர்ப் பெயர்கள் எழுதப்பட்டிருந்தது தெரியவந்தவுடன் இந்தி எழுத்துக்கள் உடனடியாக நீக்கப்பட்டன.
தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கைக்கு எதிராக மாநில நெடுஞ்சாலைத் துறையின் வழிகாட்டிப் பலகையில் இந்தி இடம்பெறக் காரணமாய் இருந்த நெடுஞ்சாலைத்துறை உதவிக் கோட்டப் பொறியாளர் மற்றும் உதவிப் பொறியாளர் ஆகியோர் உடனடியாகத் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், துறைரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கைக்கு எதிராகச் செயல்படும் அரசு அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” எனக் கூறப்பட்டுள்ளது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.