Times of Puducherry
தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதியில் போட்டியும் தேர்தல் களமும் மிக கடுமையாக இருப்பதால் முதலமைச்சர் விஜய் தெரு தெருவாக சென்று பிரச்சாரம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் விமர்சித்துள்ளார்.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சலீமை ஆதரித்து, குறிஞ்சி நகர் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் சண்முகம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்:
நடைபெற்ற இந்தியா கூட்டணி கட்சிக் கூட்டத்தில், பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, தலைமை தேர்தல் ஆணையரை உடனடியாக பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும், என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, இதற்கான நடவடிக்கையை மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
எஸ்.ஐ.ஆர் பணியில் குளறுபடிகள் நடந்து முடிந்த நிலையில், தற்போது பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் திருத்த பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும், எஸ்.ஐ.ஆர் பணியின் போது நீக்கப்பட்ட 13 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்களுக்கு மீண்டும் வாக்குரிமை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்திய அவர் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்ற நீதிபதி அடங்கிய குழுவால் தலைமை தேர்தல் ஆணையர் நியமிக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
நடந்து முடிந்த சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் அறிவிக்கப்பட்ட தேர்தல் பிரச்சாரத்திலே விஜய் கலந்து கொள்ளவில்லை அதற்கு மாறாக அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. ஆனால் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியும் தேர்தல் களமும் கடுமையாக இருப்பதால், முதல்வர் விஜய் தெருத்தெருவாக சென்று பிரச்சாரம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதாக விமர்சித்தார்.தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்றம் கூட செல்லாமல் ராஜினாமா செய்ததால் மக்கள் தவேக வேட்பாளர்கள் மீது கடுமையான கோபத்தில் இருப்பதால் அவர்கள் செல்லும் இடமெல்லாம் அவர்களை விரட்டி அடிக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த இடைத்தேர்தல் தேவையில்லாத ஒன்று தமிழக வெற்றி கழகத்தால் திணிக்கப்பட்ட தேர்தல் என்று குற்றம் சாட்டினார்.
எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்தால் அந்த தொகுதி வளர்ச்சிகள் இருக்காது என்று கூறுகிறார்கள் இதனை முதலமைச்சர் விஜய் தான் தெளிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பொதுத்தேர்தலிலும் பணம் பட்டுவாடா செய்யப்பட்டது இடைத் தேர்தல் என்பதால் அதைவிட அதிகமாக பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. புதுச்சேரி தட்டஞ்சாவடி மற்றும் தமிழகம் மதுராந்தகம் தாராபுரத்திலும் பண விநியோகம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது பணம் பட்டுவாடாவை தடுக்க வேண்டிய தேர்தல் ஆணையம் நேர்மையுடன் செயல்பட்டு நியாயமாக தேர்தலை நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.