Times of Puducherry

மதம் மாறியதைக் காரணம் காட்டி சமூகநீதி உரிமைகளைப் பறிப்பதா? - CPI(M)

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
16 Oct 2026 • 6:37 PM
social-injustice-for-religion-conversion

மதம் மாறியதைக் காரணம் காட்டி சமூகநீதி உரிமைகளைப் பறிப்பதா: இடஒதுக்கீட்டு உரிமைகளைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசு உடனடியாக சட்டத்திருத்தம் கொண்டுவர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்.

பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் மதம் மாறியதன் காரணமாக, அவர்களுடைய சமூகப் பின்தங்கிய நிலையைப் புறக்கணித்து இடஒதுக்கீட்டுப் பயன்களை மறுக்கும் வகையிலான உச்சநீதிமன்றத் தீர்ப்பு கவலையளிக்கிறது. சமூகநீதி என்பது மத அடையாளத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டியதல்ல; மாறாக, சமூக ஒடுக்குமுறை, வரலாற்று ரீதியான பின்தங்கிய நிலை, கல்வி மற்றும் பொருளாதார வாய்ப்புகளில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றின் அடிப்படையில் அணுகப்பட வேண்டியதாகும்.

மதம் மாறுவதால் ஒருவரின் சமூகப் பின்தங்கிய நிலை தானாகவே மாறிவிடுவதில்லை. சாதிய ஒடுக்குமுறையும் சமூகப் பாகுபாடுகளும் மத எல்லைகளைக் கடந்து பல்வேறு வடிவங்களில் தொடர்கின்றன. இந்த யதார்த்தத்தைப் புறக்கணித்து, மதமாற்றத்தை மட்டுமே
அடிப்படையாகக் கொண்டு இடஒதுக்கீட்டு உரிமைகளை மறுப்பது, சமூகநீதியின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு முரணானது.

தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்(MBC), சீர்மரபினர் (DNC) உள்ளிட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இஸ்லாத்தைத் தழுவிய பின்னரும், உரிய நிபந்தனைகளின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்(BCM) வகுப்புச் சான்றிதழ் பெறுவதற்கு வழிவகுக்கும் வகையில், 2024 மார்ச் மாதம் தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டது. இந்த அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து வழங்கிய தீர்ப்பை, தற்போது உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது மிகப்பெரிய சிக்கலை உருவாக்கியுள்ளது.

தமிழ்நாட்டில் 2007 ஆம் ஆண்டு பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்களுக்கு 3.5 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் உருவாக்கப்பட்டது. மதம் மாறியவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் வகையில், அந்தச் சட்டத்தில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை சட்டமன்றத்திலும் பல்வேறு தரப்புகளாலும் தொடர்ந்து முன்வைக்கப்பட்டுள்ளது.

மதச்சார்பின்மை, சமூகநீதி, சமத்துவம் ஆகிய அரசியலமைப்பின் அடிப்படைக் கோட்பாடுகளைப் பாதுகாப்பதில் தமிழ்நாடு அரசு உறுதியுடன் செயல்பட வேண்டும். மத அடையாளத்தின் அடிப்படையில் மக்களைப் பிரிப்பதும், சமூக ரீதியாகப் பின்தங்கிய மக்களிடையே உரிமைகளுக்கான போட்டியை உருவாக்குவதும் பிற்போக்கான அணுகுமுறையாகும். இடஒதுக்கீட்டின் நோக்கம் சமூக ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதுதான்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top