Times of Puducherry
SIR குறித்து கேள்விகளுக்குப் பதில் இல்லையா? அதனால்தான் இளைஞர்களைக் கைது செய்கிறீர்களா? சனநாயகத்தின் குரல்வளையை நெரிப்பது ஏன் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பி உள்ளார்
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தமான SIR நடவடிக்கைகள் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, சென்னையின் பெசன்ட் நகரில் அமைதியான முறையில் போராடிய இளைஞர்களைக் காவல்துறையினர் கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
SIR நடவடிக்கைகள் தொடர்பாகத் தேர்தல் ஆணையத்திற்குள்ளேயே கருத்து வேறுபாடுகள் வெளிப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர், தேர்தல் ஆணையத்தின் சில முடிவுகள் மற்றும் நடைமுறைகள் குறித்து பலமுறை எழுத்துப்பூர்வமாக ஆட்சேபனைகளைப் பதிவு செய்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இத்தகைய சூழலில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து வெளிப்படைத்தன்மை கோருவது நியாயமான சனநாயகக் கோரிக்கையாகும்.
தேர்தல் நடைமுறை குறித்து கேள்வி எழுப்பிய இளைஞர்களிடம் விளக்கம் அளிப்பதற்குப் பதிலாக கைது நடவடிக்கையை மேற்கொண்டிருப்பது சனநாயக உரிமைகளுக்கு எதிரான அணுகுமுறையாகும். SIR தொடர்பாக எந்தத் தவறும் நடைபெறவில்லை என்ற நிலைப்பாடு இருந்தால், தொடர்புடைய ஆவணங்களையும் தரவுகளையும் பொதுவெளியில் வெளியிட்டு மக்களின் சந்தேகங்களுக்கு பதிலளிக்கத் தயக்கம் ஏன்?
தேர்தல் ஆணையத்திற்குள்ளேயே முக்கியமான நடவடிக்கைகள் குறித்து ஆட்சேபனைகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அந்தக் கேள்விகளுக்கு வெளிப்படையான விளக்கம் அளிப்பதற்குப் பதிலாக, அதைக் கேட்கும் இளைஞர்களைக் கைது செய்வது ஏன்?
அமைதியான முறையில் போராடிய இளைஞர்களைக் கைது செய்த காவல்துறையின் நடவடிக்கையையும், அவர்களின் சனநாயக உரிமையைப் பாதுகாக்கத் தவறிய தமிழக அரசின் அணுகுமுறையையும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
பெசன்ட் நகரில் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து இளைஞர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். SIR நடவடிக்கைகள் தொடர்பான ஆவணங்கள், தரவுகள் மற்றும் முடிவெடுப்பு நடைமுறைகளை முழுமையாகப் பொதுவெளியில் வெளியிட வேண்டும். தேர்தல் ஆணையத்திற்குள்ளேயே பதிவு செய்யப்பட்டுள்ள ஆட்சேபனைகள் குறித்து மக்களுக்கு வெளிப்படையான விளக்கம் அளிக்க வேண்டும்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.