Times of Puducherry

கடலூர் சிப்காட் விரிவாக்கத்தைக் கைவிடக் கோரி அக்.14-ல் முற்றுகைப் போராட்டம் - தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
12 Oct 2026 • 7:14 PM
sipcot-extension-withdraw-tn-agro-union-protest

கடலூர் அருகே சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்கத்திற்காக தியாகவல்லி, நொச்சிக்காடு உள்ளிட்ட 18 கிராமங்களில் நிலம் கையகப்படுத்தும் முடிவைக் கைவிட வலியுறுத்தி, அக்டோபர் 14 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவது எனத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் போராட்ட ஆயத்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

கடலூர் வட்டம் தியாகவல்லி ஊராட்சிக்குட்பட்ட நொச்சிக்காடு கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவருமான டி. ரவீந்திரன் தலைமை தாங்கினார்.

கடலூர் சிப்காட் விரிவாக்கத்தைக் கைவிடக் கோரி அக்.14-ல் முற்றுகைப் போராட்டம் - தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஜெ.ராஜேஷ் கண்ணன், ஒன்றியச் செயலாளர் எஸ்.தட்சணாமூர்த்தி, குறிஞ்சிப்பாடி ஒன்றியச் செயலாளர் எம்.பி.தண்டபாணி, கட்டுமானத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் வி.கிருஷ்ணமூர்த்தி, மீன்பிடித் தொழிலாளர் சங்க மாநிலத் துணைச் செயலாளர் வி.வைத்திலிங்கம், கிராமத்தின் சார்பில் நாராயணசாமி மற்றும் கிராம பொதுமக்கள் விவசாயிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கடலூர் அருகே சிப்காட் ரசாயன தொழிற்பேட்டை உள்ளது. இதில் 50 க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வரும் நிலையில் இதிலிருந்து வெளியேறும் ரசாயனம் தண்ணீர் மற்றும் காற்றில் கலந்து சுகாதார சீரழிவுகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலை இதன் அருகே சிப்காட் விரிவாக்கத்திற்காக விளைநிலங்களைக் கையகப்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த பகுதியில் வெட்டிவேர் சாகுபடி பெருமளவில் நடைபெற்று வருகிறது. அதே போல் முந்திரி, சவுக்கு, மற்றும் தோட்டக்கலை பயிர்களும் செய்து வருகின்றனர். இயற்கையாக நூற்றாண்டுகளுக்கு மேலாக பல்வேறு இடங்களில் மணல் குன்றுகளும் உள்ளன. இந்த மணல் குன்றுகள் இயற்கை சீற்றங்கள், கடல் பேரழிவுகளை எதிர்க்கும் ஆற்றல் கொண்டவை.

இந்த நிலையில் நிலம் கையகப்படுத்துவதால் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. எனவே, நிலம் கையகப்படுத்தும் முடிவைத் தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும், அரசாணை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி, விவசாயிகள், மீனவர்கள் மற்றும் 18 கிராம மக்களைத் திரட்டி அக்டோபர் 14 அன்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்துவது எனக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. நிலம் கையகப்படுத்தும முடிவை அரசு கைவிடும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்துவது என்றும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top