Times of Puducherry
தேவகோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 9 கோவில்களில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த 3 பேரை தேவகோட்டை தாலுகா காவல்துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்து கோவில் உண்டியல், குத்துவிளக்கு உள்ளிட்டப் பொருட்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை தாலுகா காவல் எல்லைக்குட்பட்ட கிருஷ்ணசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரர் கோவிலில் சமீபத்தில் கோவில் மணி, குத்துவிளக்கு மற்றும் பித்தளைக் குடம் ஆகியவை திருடு போயின. இது தொடர்பாகத் தேவகோட்டை தாலுகா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு (குற்ற எண்: 322/2026, பிரிவுகள்: 331(3), 305(a) BNS) செய்யப்பட்டு, தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
இவ்வழக்கு தொடர்பாக, தளக்காவயல் பகுதியைச் சேர்ந்த பாலாஜி (24), ஜெயராமன் (30) மற்றும் பாலகிருஷ்ணன் (37) ஆகிய 3 பேரைப் பிடித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், இவர்கள் தேவகோட்டை தாலுகா, வேலாயுதபட்டினம் மற்றும் திருவேகம்பத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 9 கோவில்களில் தொடர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
தேவகோட்டை தாலுகா எல்லை: உடப்பன்பட்டி கற்பக விநாயகர் கோவில், மேலகாவனவயல் ஜெக முத்துமாரியம்மன் கோவில், சாணாவயல் நல்ல முனீஸ்வரர் கோவில், வசந்தனி மங்கள காளியம்மன் மற்றும் கருப்பர் கோவில்.
வேலாயுதபட்டினம் எல்லை: கோட்டூர் குருத்துடைய அய்யனார் கோவில், கள்ளிக்குடி பட்டவர் திருக்கோவில், பாவணகோட்டை குற்றமற்ற அய்யனார் கோவில்.
திருவேகம்பத்தூர் எல்லை: பொன்னத்தி முத்துமாரியம்மன் கோவில்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கோவில்களில் திருடப்பட்ட உண்டியல், மணி, பித்தளைக் குடம், பூஜை பாத்திரங்கள் மற்றும் குத்துவிளக்குகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதுடன், கைது செய்யப்பட்ட 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.