Times of Puducherry
‘பாண்டி மெலாஞ்ச் 2027’ லோகோ அறிமுக விழா புதுச்சேரி காந்தி திடலில் இன்று (அக் 16) நடைபெற்றது. அதிகாரப்பூர்வ இலச்சினை மற்றும் நிகழ்ச்சியின் அடையாள சின்னத்தை முதல்வர் என். ரங்கசாமி வெளியிட்டார்.
புதுச்சேரி சுற்றுலா துறையும் டெக் ஷாட் நிறுவனமும் வழங்கும் ‘பாண்டி மெலாஞ்ச் 2027’ நிகழ்வுகளுக்கான அறிமுக விழாவில்மாண்புமிகு புதுச்சேரி சுற்றுலா மற்றும் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ், ‘பாண்டி மெலாஞ்ச் 2027’ நிகழ்வுகளை அறிமுகப்படுத்தும் சிறப்புக் காணொளியை வெளியிட்டார். பண்பாடு, படைப்பாற்றல், கொண்டாட்டம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட ‘பாண்டி மெலாஞ்ச்’, கலை, இசை, ஆடை அலங்காரம், உணவு, நல்வாழ்வு, மரபு மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஒருங்கிணைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, 2027 ஜனவரி மாதத்தில் கல்வி, ஆன்மிகம் மற்றும் மருத்துவ மாநாடுகளை நடத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களை ஒருங்கிணைக்கும் இந்த மாநாடுகளைத் தொடர்ந்து, பிப்ரவரி மாதத்தில் இசை நிகழ்ச்சி, சர்வதேச நடன நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளன.
லோகோவை வெளியிட்டுப் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, வெளி மாநில மக்களை ஈர்க்கும் மாநிலமாக பாண்டிச்சேரி இருக்கிறது. கலை நிகழ்வுகள் மூலமாக பல மாநில மக்களும் வந்து செல்லும் வகையில் புதுச்சேரி மாநில மக்களின் சுற்றுலாவை வளர்க்கும் வகையிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை உயரும். இந்நிகழ்ச்சி புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்ததார். அறிமுக நிகழ்வின்போது பல்வேறு கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.