Times of Puducherry
ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் N. ஆனந்த் MLA அவர்கள் தலைமையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் கோயம்புத்தூர் கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற “வெற்றித் தமிழகம் – தொலைநோக்கு ஆவணம்” செயல்திட்ட முன்னெடுப்பு மற்றும் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடுகள் தொடர்பான இரண்டாவது மண்டல மாநாட்டில் கலந்து கொண்டார்.
இம்மாநாட்டில் கோயம்புத்தூர், தருமபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், கரூர் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய 11 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஊரக வளர்ச்சிப் பணிகள், “வெற்றித் தமிழகம் – தொலைநோக்கு ஆவணம்” செயல்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் மற்றும் வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் அவர்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் தமிழ்நாடு கிராம மேம்பாடு, மாற்றம் மற்றும் மறுமலர்ச்சி முன்னெடுப்பு (TN-VETRI) திட்டத்தின் வாயிலாக கிராமப்புறங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் திட்டமிடப்பட்ட பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், VB-GRAM (G) திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகள் கிராமப்புற மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும், அடிப்படை வசதிகளை வலுப்படுத்துவதற்கும் பயனளிக்கும் வகையில் சிறப்பாகச் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, சம்பந்தப்பட்ட 11 மாவட்டங்களிலும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முழுமையாக மேற்கொள்ள வேண்டும் என்றும், தாழ்வான பகுதிகள், நீர்நிலைகள், கால்வாய்கள் மற்றும் மழைநீர் வடிகால்களைத் தொடர்ந்து கண்காணித்து, மழைநீர் சீராக வெளியேறுவதற்குத் தேவையான பராமரிப்பு மற்றும் தூர்வாரும் பணிகளை மேற்கொண்டு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
டெங்கு உள்ளிட்ட தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்கும் வகையில் கொசு உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிந்து அகற்றுதல், சுற்றுப்புறத் தூய்மையைப் பேணுதல் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
மழைக்காலங்களில் சாலைகள் சேதமடைவதைத் தடுக்கும் வகையில் சாலைப் பராமரிப்புப் பணிகளை உரிய முறையில் மேற்கொள்ளவும், சேதமடைந்த சாலைகளை உடனடியாகச் சீரமைக்கவும் அறிவுறுத்தினார். அதேபோல், பொதுமக்களுக்குப் பாதுகாப்பான மற்றும் தரமான குடிநீர் தடையின்றிக் கிடைப்பதை உறுதி செய்வதுடன், குடிநீர் விநியோகம் தொடர்பான புகார்களுக்கு உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் என்றும் தெரிவித்தார்.
பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கைகள் மற்றும் புகார்களுக்கு காலதாமதமின்றித் தீர்வு காண்பதுடன், அரசின் நலத்திட்டங்கள் உரிய பயனாளிகளைச் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், அரசுத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் வெளிப்படைத்தன்மை, பணிகளின் தரம் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் வலியுறுத்தினார்.
வடகிழக்குப் பருவமழையால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்கும் வகையில், அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும், அவசரகால நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்வதற்குத் தேவையான ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்து வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். பொதுமக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து, மழைக்காலங்களில் ஏற்படும் பாதிப்புகளுக்கு உடனடியாகத் தீர்வு காணும் வகையில் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்புடன் செயல்பட வேண்டும் என அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.