Times of Puducherry

பா.ம.க. உள்ளே வந்தால் நாங்கள் வெளியே செல்வோம் இதுவே எங்கள் பிரகடனம் - திருமாவளவன்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
12 Oct 2026 • 12:51 PM
pmk-leader-clarifies-his-stand-with-the-governance

திண்டிவனம், பா.ஜனதா, பா.ம.க. இடம்பெறும் கூட்டணியில் வி.சி.க. இருக்காது என்று திண்டிவனம் பொதுக்கூட்டத்தில் திருமாவளவன் பேசினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்ணுரிமை நாள் கூட்டம் மற்றும் தமிழ் தேசிய எழுச்சிமாநாட்டின் தீர்மான விளக்க பொதுக்கூட்டம் திண்டிவனத்தில் நடந்தது.

பொதுக் கூட்டத்தில் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி.கலந்துகொண்டு தமிழ் தேசிய மாநாட்டு தீர்மானங்களை விளக்கி சிறப்புரையாற்றினார்.

தொல்.திருமாவளவன் பேசியதாவது:

விடுதலை சிறுத்தைகள் கட்சி, கொள்கை, கோட்பாடுகளில் உறுதியாக நின்று, நேர்மையாக இருந்து, மக்கள் பணியாற்றியதன் விளைவாகத்தான், இன்றைக்கு அமைச்சரவையில் இடம்பெறக்கூடிய ஒரு கட்சியாக, தமிழகத்திலே மாநிலக்கட்சி என்ற அங்கீகாரம் பெற்ற ஒரு கட்சியாக வளர்ந்திருக்கிறோம். இந்த புரிதலோடுதான் நாம் அடுத்த கட்டத்தை நோக்கிநகர வேண்டும் தி.மு.க. கூட்டணியில் இருந்தவரையில் அந்த கூட்டணியிலிருந்து நம்மை வெளியேற்றுவதற்காக, இதே சாதியவாத கும்பலும், மதவாத கும்பலும், நம் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாமல் நம்மை இழிவுப்படுத்தி வசைபாடினார்கள்.

இப்படி இழிவுப்படுத்தினால், ஆத்திரமடைந்து, கோபப்பட்டு திருமாவளவன் கூட்டணியை வெளியே வருவான், தி.மு.க.
கூட்டணியை சிதறடித்துவிடலாம் என்று கணக்குபோட்டார்கள். காலம் இன்றைக்கு போட்டகணக்கு, நாம் போட்ட கணக்கு இல்லை,
நமக்கு எந்தகால்குலேஷனும் கிடையாது.

காலம் சிலநேரங்களில் கணக்கு போடும். அது எப்படி போடும்? தமிழ்நாட்டில் ஒருகூட்டணி அரசு உருவாகும். அதற்கான காலம் கனியும் என்று திரும்பத்திரும்ப திருமாவளவன் சொல்லிக் கொண்டிருந்தான், காலம் கனிந்தது. கூட்டணி அரசு உருவானது. விடுதலை சிறுத்தைகள் கட்சி அமைச்சரவையிலே இடம்பெற்றுவிட்டது.நாங்களாக இதை உருவாக்கவில்லை, திட்டமிடவில்லை. தூது அனுப்பவில்லை, பேரம்பேசவில்லை, பழம் தழுவி பாலிலே விழுந்த கதையாக கூட்டணி அரசு உருவாகி சிறுத்தைகளின் மடியிலே வந்து விழுந்தது. 25ஆண்டுகளுக்கு முன்பே ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்று பேசியவன் திருமாவளவன்.

2016-ம் ஆண்டிலேயே கூட்டணி அரசு தமிழகத்தில் தேவை என்பதை வலியுறுத்தியவன் திருமாவளவன் காலம் இப்படிமாறி வருகிறபோது, அதற்கேற்ப கூட்டணியை தக்கவைத்துக் கொள்கிற முயற்சியை தி.மு.க. மேற்கொள்ளவில்லை என்பதுதான் நம்முடைய விமாசனம்.
இப்போது 2-வது இடத்திற்கு வந்ததே மாபெரும் வெற்றி என்று பேசுகிற நிலை. நான் கேட்கிறேன் 2-வது இடமே போதுமா? சின்ன கட்சி பெரிய கட்சி என்பதல்ல, வெற்றி அதற்கான கணக்கு கூட்டணி கணக்கு ஆட்சியை கைப்பற்றுவதற்கான வெற்றியாக இருக்க வேண்டும். அவசரப்பட்டு முடிவு எடுக்கவில்லை ஒரு ஆண்ட கட்சி, முதலிடத்தில் வந்த கட்சி இரண்டாவது இடத்திற்கு வந்திருப்பதை பெருமை பேசுகிறது என்று சொன்னால், அவர்கள் என்ன உளவியலுக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்பதை தயவுகூர்ந்து எண்ணிப்பார்க்க வேண்டும். நாங்கள் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கவில்லை. நாங்கள் எல்லாவற்றையும் சீர்தூக்கி பார்த்துதான் முடிவெடுக்கிறோம்.

மதுராந்தகத்தில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று பா.ம.க. சொல்லிவிடடது. ஆனால், பேசுகிற அத்தனை பேரும் ‘பா.ம.க.தான்
த.வெ.க.வுக்கு ஓட்டு போட்டுவிட்டது’ என்று சொல்கிறார்கள். எப்படி இது நிகழும்? யார் வாக்குச்சாவடி வாரியாக வாக்குகளை எடுத்து பூர்த்தி செய்தது? ஆய்வு செய்தது? ஆய்வு செய்தீர்களா?.

பா.ம.க.வும் பாஜனதாவும் இருக்கிற அணியில் இருக்க மாட்டோம் என்று 15 ஆண்டுகளாக திரும்பத் திரும்ப விடுதலைச் சிறுத்தைகள்
சொல்லி வருகிறோம். ஏற்கனவே பா.ம.கவை மட்டும் சொல்லிக் கொண்டிருந்தோம், அதன் பிறகு பாஜனதா. பா.ம.க. ஆகிய இரு
கட்சிகளும் ஒரே தோதல் அரசியல் உத்திகளை கையாளுகி சாதியவாதம், மதவாதம். இதை நாங்கள் ஏற்க மறுக்கிறோம். எனவே இனி எந்த காலத்திலும் அவர்கள் இடம்பெறுகிற அணியில்கூட இருக்க மாட்டோம்.

எந்த சூழலிலும் திருமாவளவனுக்கு தமிழ்நாட்டு அரசியலில் ஒரு முக்கியத்துவம் கிடைத்துவிடக்கூடாது என கருதுகிறார்கள். என் உயிரின் உயிரான விடுதலை சிறுத்தைகள் லட்சக்கணக்கானோர் தமிழகத்தில் எழுச்சியோடு களத்தில் இருக்கிறார்கள்.

உளுந்தூர்பேட்டை மாநாட்டுக்கு முன்னால் விடுதலை சிறுத்தைகளின் கூடாரமே காலி, எல்லாம் விஜய் பின்னால் போயிட்டாங்க என்றார்கள்.
உளவியல் ரீதியாக தாக்குதல் அந்த விஜய் உளுந்தூர் பேட்டை மாநாடு முடிந்த ஒரு மணி நேரத்தில் என்னை தொடர்பு கொண்டு, “சார்
மிரட்டிட்டீங்க சார், பயர் சார்” என்றார். இதை பெருமைக்காக நான் சொல்லவில்லை.

எந்த விஜய்யைவைத்து என்னை நீங்கள் இழிவுப்படுத்த நினைக்கிறீர்களோ, உளவியல் ரீதியாக என்னை தாக்குதல் நடத்தி சோர்ந்து போகச் செய்ய முயற்சிக்கிறீர்களோ, அதே விஜய் தனித்து தின்று 108 இடங்களில் வெற்றிபெற்றார். உளுந்தூர்பேட்டை மாநாட்டுக்கு பிறகு ஒருவரும் வாயை திறக்கவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர் வன்னி அரசு பேசியதாவது:

தமிழகத்தில் த.வெ.க. கூட்டணியில் பா.ம.க. வந்தால் வி.சி.க.வின் நிலை என்ன? என்று பலர் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். கடந்த 10
ஆண்டுகளாக அதற்கு பதில் சொல்லி பதில் சொல்லி வாயும் வலித்துவிட்டது. கேட்டு கேட்டு காதும் வலிக்கிறது. ஒரே வழிதான். சாதிய மதவாத பா.ம.க. மதவாத பாஜனதாவோடு, விடுதலை சிறுத்தைகள் ஒருபோதும்கூட்டணி இல்லை என்று முழங்கியவர் நம்முடைய தலைவர் திருமாவளவன். இப்பொழுதும் சொல்கிறேன். ஒருபோதும் அதற்கான வாய்ப்பில்லை. பா.ம.க. உள்ளே வந்தால் நாங்கள் வெளியே செல்வோம் என்பதுதான்அதனுடைய பிரகடனம் எங்களுக்கு பதவி முக்கிய மல்ல.

நம்முடைய தலைவர் எதை கட்டளையிடுகிறாரோ அந்த வேலையை செய்வதற்குத்தான் ஒரு அடிமட்ட தொண்டராக இருந்து இந்த இடத்திலே களமாடுகிறோம் என கூறினார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top