Times of Puducherry
புதுச்சேரி மணக்குள விநாயகர் தொழில்நுட்பக் கல்லூரியில் காவல்துறையுடன் இணைந்து தொழில்நுட்பப் புதுமைப் போட்டி நடந்தது.
புதுச்சேரி கலிதீர்த்தாள்குப்பத்தில் உள்ள மணக்குள விநாயகர் தொழில்நுட்பக் கல்லூரி, புதுச்சேரி காவல்துறையுடன் இணைந்து, “புதுச்சேரி காவல்துறை ஹேக்கத்தான் 2026” என்ற தொழில்நுட்பப் புதுமைப் படைப்புப் போட்டியை நடத்தியது. “ஹேக் ஃபார் எ காஸ் (Hack 4 a Cause)” என்ற தலைப்பில்நடைபெற்ற இந்நிகழ்ச்சி, காவல்துறையின் சவால்களுக்குப் புதுமையான தொழில்நுட்பத் தீர்வுகளை உருவாக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் மாணவர்களை ஊக்குவித்தது, கேசவன், கருத்தரங்க துவக்க விழாவை கல்லூரி முதல்வர் முனைவர். எஸ்.மலர் கண்ணன் தொடங்கி வைத்து வரவேற்புரை ஆற்றினார்.
கருத்தரங்கத்தில், மணக்குள விநாயகர் கல்வி குழுமத் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் எம்.தனசேகரன், செயலாளர் டாக்டர். நாராயணசாமி பொருளாளர் டி.ராஜராஜன் மற்றும் இணை செயலாளர் வேலாயுதம் ஆகியோர் தலைமை தாங்கினர். வேலைவாய்ப்பு துறை முனைவர்.எம்.ஜெயக்குமார், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு துறை டீன் முனைவர்.ஆர்.வள்ளி ஆகியோர் பங்கேற்றனர்.
சிறப்பு விருந்தினர்களாக இணையவழிக் குற்றப்பிரிவு முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் எஸ். ராகவ், சட்டம் ஒழுங்கு முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் ஆர். கலைவாணன், ஐ.பி.எஸ்.; போதைப்பொருள் தடுப்புப் பணிக்குழு முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் கே. தீபிகா, போக்குவரத்துப் பிரிவு முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் டி. திவ்யா, இணையவழிக் குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளர் ஸ்ருதி எஸ். யரகட்டி, ஐ.பி.எஸ். ஆகியோர் பங்கேற்றனர்.
செயற்கை நுண்ணறிவு உதவியுடன் துறைசார் முன்மொழிவுகளை கொண்டு முந்தைய ஆவணங்களைத் தேடிப் பெறுவதற்கானபுவியியல் தகவல்களின் அடிப்படையில் குற்றத் தகவல்களைப் பகுப்பாய்வு செய்து முடிவெடுக்க உதவும் அமைப்பு, நவீன வாகன நிறுத்த மேலாண்மை, போக்குவரத்து விதிமுறை அமலாக்கம், மற்றும் பொதுமக்கள் புகாரளிக்கும் அமைப்பு, போதை மருந்துகள் மற்றும் மனநிலையைப் பாதிக்கும் பொருட்களின் பயன்பாட்டைக் களப் பரிசோதனையில் கண்டறியும் கையடக்க அமைப்பு ஆகிய நான்கு பிரிவுகளில் போட்டி நடைபெற்றது.
குறைந்தபட்சம் ஒரு மாணவி உட்பட ஐந்து மாணவர்களைக் கொண்ட அணிகள், ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடன் தொழில்நுட்ப முன்மாதிரிகளை உருவாக்கிச் சமர்ப்பித்தன. பொதுமக்களின் பாதுகாப்புக்கான நடைமுறைத் தீர்வுகளை உருவாக்கும் நோக்கில் மாணவர்களையும் காவல்துறை வல்லுநர்களையும் இந்நிகழ்ச்சி ஒருங்கிணைத்தது.
புதுமைத்தன்மை, காவல்துறைப் பயன்பாட்டிற்கான பொருத்தம், தொழில்நுட்பச் சாத்தியக்கூறு, செயல்திறன், விரிவாக்கத் திறன், பாதுகாப்பு, சமூகப் பயன் மற்றும் விளக்கக்காட்சி ஆகியவற்றின் அடிப்படையில் மாணவர்களின் படைப்புகள் மதிப்பீடு செய்யப்பட்டன.முதல் தலைப்பு செயற்கை நுண்ணறிவு உதவியுடன் துறைசார் முன்மொழிவுகளை நிர்வகித்தல் மற்றும் முந்தைய ஆவணங்களைத் தேடிப் பெறும் அமைப்புக்கான போட்டியில், ஒசூர் இன்னோவேட் இன்ஜினியரிங் புராடக்ட் நிறுவனத்தின் தொழில்நுட்பத் தலைமைப் பொறியாளர் டாக்டர் டி. ராஜேஷ் நடுவராகச் செயல்பட்டார்.
இப்பிரிவில் ஸ்ரீ மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி முதலிடத்தையும், மணக்குள விநாயகர் தொழில்நுட்பக் கல்லூரி இரண்டாமிடத்தையும், ராக் கல்லூரி மூன்றாமிடத்தையும் பெற்றன. இரண்டாவது தலைப்பான புவியியல் தகவல்களின் அடிப்படையில் குற்றத் தகவல்களைப் பகுப்பாய்வு செய்து முடிவெடுக்க உதவும் அமைப்புக்கான போட்டியில், புதுச்சேரி அடல் இன்குபேஷன் சென்டர்-பாண்டிச்சேரி பொறியியல் கல்லூரி அறக்கட்டளையின் (AIC-PECF) தலைமைச் செயல் அதிகாரி வி. விஷ்ணு வரதன் நடுவராகச் செயல்பட்டார். இப்பிரிவில் ஸ்ரீ மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி முதலிடத்தையும், புதுச்சேரி பல்கலைக்கழகம் இரண்டாமிடத்தையும் பெற்றன.
மூன்றாவது தலைப்பான நவீன வாகன நிறுத்த மேலாண்மை, போக்குவரத்து விதிமுறை அமலாக்கம் மற்றும் பொதுமக்கள் புகாரளிக்கும் அமைப்புக்கான போட்டியில், மதுரை ஜேஎஸ்-ஐபி டிசைன் சொல்யூஷன் நிறுவனத்தின் அறிவுசார் சொத்துரிமை வழிகாட்டி டாக்டர் ஜெயக்குமார் நடுவராகச் செயல்பட்டார். இப்பிரிவில் மணக்குள விநாயகர் தொழில்நுட்பக் கல்லூரி முதலிடத்தையும், கிறிஸ்ட் கல்லூரி இரண்டாமிடத்தையும், ஸ்ரீ மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி மூன்றாமிடத்தையும் பெற்றன.
நான்காவது தலைப்பான போதை மருந்துகள் மற்றும் மனநிலையைப் பாதிக்கும் பொருட்களின் பயன்பாட்டைக் களப் பரிசோதனையில் கண்டறியும் கையடக்க அமைப்புக்கான போட்டியில், கோயம்புத்தூர் பிஏபி ஹார்டுவேர் அண்ட் சாப்ட்வேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமைத் தொழில்நுட்ப அதிகாரி திரு. விஜயானந்த் தேவதாஸ் நடுவராகச் செயல்பட்டார். இப்பிரிவில் மணக்குள விநாயகர் தொழில்நுட்பக் கல்லூரியைச் சேர்ந்த அணிகள் முதலிடத்தையும் இரண்டாமிடத்தையும் பெற்றன.
நிகழ்ச்சியின் நிறைவு விழாவில், காவல்துறைச் சவால்களுக்குப் புதுமையான தொழில்நுட்பத் தீர்வுகளை உருவாக்கி வெற்றி பெற்ற அணிகளுக்குச் சிறப்பு விருந்தினர்கள் பரிசுகளை வழங்கிப் பாராட்டினர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு துறை டீன் முனைவர்.ஆர்.வள்ளி, வேலைவாய்ப்பு துறை டீன் முனைவர்.எம்.ஜெயக்குமார், அனைத்து துறைத் தலைவர்கள் (HODs), பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.