Times of Puducherry
கடலிலும், கரையிலும் பயணிக்கும் கடலோர பாதுகாப்பு பணிக்காக பயன்படுத்தப்படும் அதிவேக ஹோவர் கிராப்ட் கப்பல்கள் காரைக்கால் கடற்கரைக்கு வந்தது, மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் அதிநவீன கப்பல்களை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
காரைக்கால் கடற்கரைக்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட H561, H562 ஆகிய இரண்டு ஹோவர் கிராப்ட் கப்பல்கள் வந்தடைந்தன. கடலிலிருந்து அதிக சத்தத்துடனும், பலத்த காற்றை வெளியேற்றியபடியும் தரைப்பகுதிக்கு வந்த இந்தக் கப்பல்களை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
மத்திய அரசின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த ஹோவர் கிராப்ட் கப்பல்கள், கோவாவில் இருந்து தங்களது பயணத்தைத் தொடங்கி, கடலோரப் பகுதிகள் வழியாக கொச்சி, திருவனந்தபுரம், தூத்துக்குடி, மண்டபம் ஆகிய இடங்களைக் கடந்து காரைக்கால் கடற்கரையை வந்தடைந்துள்ளன.
மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய இந்த ஹோவர் கிராப்ட் கப்பல்கள், சாதாரண கப்பல்கள் செல்ல முடியாத ஆழம் குறைந்த கடல் பகுதிகள், கரையோரப் பகுதிகள் மற்றும் சதுப்பு நிலங்களிலும் பயணிக்கும் திறன் கொண்டவை. கடலோரப் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும் இந்தக் கப்பல்கள், கடலோரப் பகுதிகள் வழியாகத் தொடர்ந்து பயணித்து மேற்கு வங்க மாநிலம் ஹால்டியா பகுதிக்குச் செல்ல உள்ளன.
இன்று காரைக்கால் கடற்கரைக்கு வந்தடைந்த இந்த ஹோவர் கிராப்ட் கப்பல்கள், இரவு முழுவதும் கடற்கரைப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு, நாளை அங்கிருந்து அடுத்தகட்டப் பயணத்தைத் தொடங்க உள்ளன. வழக்கமான கப்பல்களிலிருந்து மாறுபட்ட வடிவமைப்புடன், கடலிலிருந்து தரைப்பகுதிக்கு வேகமாக வந்தடைந்த இந்த அதிநவீன ஹோவர் கிராப்ட் கப்பல்களைக் காண கடற்கரையில் திரண்ட பொதுமக்கள் ஆர்வம் காட்டினர்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.