Times of Puducherry

திருச்சி அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் செலுத்திய விவகாரம் - தாய், குழந்தைக்கு ரூ.40 லட்சம் இழப்பீடு- நீதிமன்றம்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
16 Oct 2026 • 10:39 AM
hiv-infected-blood-being-infused-to-a-pregnant-women-during-delivery-compensated

பிரசவத்தின்போது, திருச்சி அரசு மகாத்மாக காந்தி நினைவு மருத்துவமனையில் ரத்தம் ஏற்றப்பட்டத்தில் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும், குழந்தைக்குமான இழப்பீடு ரூ.40 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என அரசுத்தரப்பு நீதிமன்றத்தில் ஒப்புதல் தெரிவித்ததை அடுத்து ரூ.40 லட்சம் வழங்க உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இது குறித்த விபரம் வருமாறு :

திருச்சியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், பிரசவத்துக்காக திருச்சி அரசு மகாத்மாக காந்தி நினைவு மருத்துவமனையில் கடந்த 2022-ஆம் ஆண்டு அக்டோபர் 22-ஆம் தேதி சேர்ந்தார். அவருக்கு அறுவை சிகிச்சையின் போது இரத்தம் குறைவாக இருப்பதால் அவருக்கு உடனடியாக அரசு ரத்த வங்கி மூலம் வேறு ஒருவரின் ரத்தம் செலுத்தப்பட்டது. பின்னர் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

திருச்சி அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் செலுத்திய விவகாரம் - தாய், குழந்தைக்கு ரூ.40 லட்சம் இழப்பீடு- நீதிமன்றம்

இதனைத் தொடர்ந்து பெண்ணுக்கும், அவரது குழந்தைக்கும் நடத்தப்பட்ட ரத்தப் பரிசோதனையில் எச்ஐவி தொற்று இருப்பது தெரியவந்தது. அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவருக்கு ரத்தப் பரிசோதனை செய்ததில் எச்ஐவி தொற்று இல்லை என்று இருந்தது. பின்னர் ரத்தம் குறைவு காரணமாக வேறு ஒருவரின் ரத்தம் ஏற்றப்பட்டபோது அதில் தவறு நடந்திருக்கலாம் என கண்டறியப்பட்டு ஆராய்ந்ததில் எச்ஐவி தொற்று உள்ள நபரிடம் இருந்து ரத்தம் ஏற்றப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.

இதையடுத்து ரூ.20 லட்சம் இழப்பீடு கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பாதிக்கப்பட்ட பெண் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரருக்கு செலுத்தப்பட்ட ரத்தத்தை தானமாக வழங்கியவரிடம் ரத்த தானம் செய்யப்பட்டபோது மேற்கொண்ட பரிசோதனையில் அவருக்கு எச்ஐவி தொற்று இருப்பது கண்டறியப்படவில்லை. அந்த ரத்தத்தால் மனுதாரரும் அவரது குழந்தையும் எச்ஐவி தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் ரத்தத்தில் ‘விண்டோ பீரியட்’ காலத்தில் இருக்கும் தொற்றுகளைக் கண்டறியும் அறிவியல் முறைகளோ அல்லது அமைப்போ இல்லை. இந்நிலையில் இழப்பீட்டு தொகையை தாமாக முன்வந்து உயர்த்துவது தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு கூடுதல் அரசு வழக்கறிஞர் பரதன், கூடுதல் அரசு வழக்கறிஞர் பார்த்தீபன் ஆகியோருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து மனுதாரருக்கும், அவரது குழந்தைக்கும் சேர்த்து மொத்தமாக 40 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அரசு சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதி, ஏற்கெனவே வழங்கிய ரூ.2.50 லட்சம் போக மீதமுள்ள ரூ.37.50 லட்சத்தில் ரூ.17.50 லட்சத்தை 2 வாரத்திலும், ரூ.20 லட்சத்தை 4 வாரத்திலும் வழங்கவும், இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும், அவரது குழந்தைக்கும் கூடுதல் இழப்பீடு வழங்க அரசு சார்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் மற்றும் அவருக்கு உதவியவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளை நீதிமன்றம் பாராட்டுகிறது எனக்குறிப்பிட்டு மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டார் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி சரவணன்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top