Times of Puducherry

நான்கு மாதங்களில் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை பன்மடங்கு அதிகரிப்பு

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
13 Oct 2026 • 6:02 PM
groceries-food-price-hike-anbalagan-complains

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் அவர்கள் முதலமைச்சர் ரங்கசாமியை நேரில் சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரி மாநிலத்தில் ஜூன் மாதத்திலிருந்து கடந்த நான்கு மாதங்களில் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இந்த விலைவாசி உயர்வின் காரணமாக ஏழை எளிய மக்கள் கடும் துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

குறிப்பாக, கடந்த ஜூன் மாதத்தில் ரூ.1,100-க்கு விற்கப்பட்ட ஒரு மூட்டை அரிசியின் விலை இன்று ரூ.700 உயர்ந்து ரூ.1,800-க்கு விற்கப்படுகிறது. அதாவது ரூ.60-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ பொன்னி அரிசி இன்று ரூ.20 உயர்ந்து ரூ.80-க்கு விற்கப்படுகிறது.

ரூ.900-க்கு விற்கப்பட்ட ஒரு மூட்டை இட்லி அரிசி இன்று ரூ.300 உயர்ந்து ரூ.1,200-க்கு விற்கப்படுகிறது. அதாவது ரூ.35-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ இட்லி அரிசி ரூ.15 உயர்ந்து ரூ.50-க்கு விற்கப்படுகிறது. ரூ.120-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ துவரம்பருப்பு இன்று ரூ.40 உயர்ந்து ரூ.160-க்கு விற்கப்படுகிறது. ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் ரூ.130-ல் இருந்து ரூ.180-க்கும் விற்கப்படுகிறது. ரூ.120-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ உளுத்தம்பருப்பு இன்று ரூ.30 உயர்ந்து ரூ.150-க்கு விற்கப்படுகிறது. ரூ.180-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ பூண்டு இன்று 54.62% உயர்ந்து ரூ.340-க்கு விற்கப்படுகிறது.

அதேபோல், காய்கறி விலையும் இரட்டிப்பு மடங்காக உயர்ந்துள்ளது. வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு, இஞ்சி, எலுமிச்சை பழங்கள் உள்ளிட்டவை 30 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை விலை உயர்ந்துள்ளன. இதனால் புதுச்சேரியில் வசிக்கும் ஏழை எளிய மக்கள் இந்த விலைவாசி உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஏழை எளிய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு முதலமைச்சர் அவர்கள் விலைவாசியைக் கட்டுப்படுத்த துறை ரீதியான உயர் அதிகாரிகள் மற்றும் அனைத்து மொத்த வியாபாரிகளையும் அழைத்து விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top