Times of Puducherry
புதுச்சேரி மாநில மாணவர் மற்றும் பெற்றோர் நல சங்கத்தின் தலைவர் வை பாலா புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
மருத்துவ கலந்தாய்வு குழுவால் (MCC) முதுநிலை நீட் (PG NEET) கலந்தாய்வில் வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லூரியை புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு இணையாக அரசு கட்டண நிர்ணய குழுவின் கட்டணத்தில் சேர்க்க வேண்டும் .
புதுச்சேரி மாநில மாணவர் மற்றும் பெற்றோர் நலச்சங்கத்தின் சார்பாக, மருத்துவ கலந்தாய்வு குழுவால் (MCC) முதுநிலை நீட் (PG NEET) கலந்தாய்வில் வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லூரி சேர்க்கப்படாதது குறித்த முக்கியமான பிரச்சனையை தங்களின் மேலான கவனத்திற்கு தாழ்மையுடன் கொண்டு வருகிறோம்.
சமீபத்தில்,சென்னை உயர்நீதிமன்றத்தின் தலையீட்டைத் தொடர்ந்து, அரசு ஒதுக்கீட்டின் கீழ் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு (MBBS) வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லூரி வெற்றிகரமாகச் சேர்க்கப்பட்டது. மேலும் 95 இடங்கள் அரசால் நிர்ணயிக்கப்பட்ட வருடாந்திரக்கட்டணமான ரூ. 4,50,000-ல் நிரப்பப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இருப்பினும், முதுநிலை நீட் கலந்தாய்வில் வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லூரியைச் சேர்ப்பதில் மருத்துவ கலந்தாய்வு குழு (MCC) தாமதம் செய்துள்ளது. வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லூரி நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியாக இல்லாததால், கலந்தாய்வு செயல்முறைக்காக புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள மற்ற மருத்துவ கல்லூரிகளுக்கு இணையாக அதைக் கருதுவது கட்டாயமாகும்.
எனவே, தாங்கள் உடனடியாகத் தலையிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கீழ்க்கண்டவாறு உத்தரவிட வேண்டும் எனப்கேட்டுக்கொள்கிறோம். எவ்வித தாமதமுமின்றி புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாக முதுநிலை நீட் கலந்தாய்வில் வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லூரியைச் சேர்க்க வேண்டும்.
இளநிலை மருத்துவ இடங்களுக்கு வழங்கப்பட்ட அதே நிவாரணத்தின் அடிப்படையில், இந்த முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கட்டணங்கள் அரசு கட்டண நிர்ணயக் குழுவின் கட்டணங்களின்படி கண்டிப்பாக வசூலிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.மாணவர் சமுதாயத்தின் நலன் கருதி தங்களின் விரைவான மற்றும் சாதகமான நடவடிக்கையை எதிர்பார்க்கிறோம் என அந்த மனுவில் கூறியுள்ளார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.