Times of Puducherry

புதுச்சேரி துறைமுகத்தின் மேம்பாட்டிற்காக சாகர்மாலா 2.0 திட்ட நிதி ஒதுக்கீடு செய்ய மல்லாடி கிருஷ்ணாராவ் கோரிக்கை

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
13 Oct 2026 • 7:15 PM
fund-release-plea-made-by-Malladi-for-coastal-deveopment

புதுச்சேரி துறைமுகத்தின் மேம்பாட்டிற்காக சாகர்மாலா 2.0 திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள பணிகள் மற்றும் புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழி துறை அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவாலிடம் புதுச்சேரி துறைமுகத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

உள்ளுர் பொருளாதாரம் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளை மேம்படுத்த மத்திய அரசு ரூ.100 கோடி நிதி உதவி அளிக்கவும் அமைச்சர் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

புதுச்சேரி துறைமுகத்தின் மேம்பாட்டிற்காக சாகர்மாலா 2.0 திட்ட நிதி ஒதுக்கீடு செய்ய மல்லாடி கிருஷ்ணாராவ் கோரிக்கை

மும்பையில் 2-நாட்கள் (அக்-12,13) நடைபெற்ற கடல்சார் மாநில மேம்பாட்டு கவுன்சிலின் கூட்டத்தில் புதுச்சேரி அரசு சார்பில் துறைமுகத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், இயக்குனர் மோகன்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் கலந்துகொண்ட மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழி துறை அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால் அவர்களிடம் புதுச்சேரி துறைமுகத்துறை தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் அவர்கள் அளித்தார். அந்த மனுவில்:

கடந்த 2015-ஆம் ஆண்டு சாகர்மாலா திட்டம் தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து, புதுச்சேரி துறைமுகத்தை மூன்று கட்டங்களாக மேம்படுத்துவதற்காக, 2017–18-ஆம் ஆண்டில் சென்னை ஐஐடி மூலம் விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்கப்பட்டது. இதற்காக மொத்தம் ரூ.304.80 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டது. இதில் முதற்கட்டப் பணிகளுக்காக ரூ.44 கோடியை மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

இதன் பயனாக, புதுச்சேரி துறைமுகத்தில் சரக்குப் பெட்டகங்களைக் கையாளும் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. சிறிய கப்பல்கள் கட்டுதல், பழுதுபார்த்தல் மற்றும் மறுசீரமைத்தல் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தூர்வாரப்பட்ட மணலைப் பயன்படுத்தி புதுச்சேரி நகரின் கடற்கரைகள் சீரமைக்கப்பட்டதால், கடற்கரை சுற்றுலாவும் மேம்பட்டுள்ளது. சுற்றுலாப் படகு சேவைகள் மற்றும் ஸ்கூபா டைவிங் எனப்படும் கடலுக்கடியில் மூழ்கி பார்வையிடும் நடவடிக்கைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதன் தொடர்ச்சியாக, கடந்த 2025 ஜூன் மாதத்தில் புதுச்சேரி துறைமுகத்தில் சுற்றுலா சொகுசுக் கப்பல் சேவைகளும் தொடங்கப்பட்டன. மீன்பிடித் துறைமுகப் பகுதியிலிருந்து அரியாங்குப்பம் பாலம் வரை கடல் மற்றும் நீர்வழிப் பாதையைத் தூர்வாருதல்.

தற்போது 3.5 மீட்டர் ஆழம் கொண்ட கப்பல்களை மட்டுமே கையாளும் நிலையில், 6 மீட்டர் ஆழம் கொண்ட சரக்குக் கப்பல்களையும் அனுமதிக்கும் வகையில், கடலுக்கடியில் உள்ள தற்போதைய சுரங்கக் கட்டமைப்பை அகற்றுதல். துறைமுகத்தின் வருடாந்திர பராமரிப்பு தூர்வாரும் செலவைக் குறைப்பதற்கான ஆய்வு மேற்கொள்ளுதல்.

சாகர்மாலா 2.0 திட்டம் மற்றும் 2047-ஆம் ஆண்டுக்கான கடல்சார் அமிர்த கால தொலைநோக்குத் திட்டத்தின் நோக்கங்களுக்கு ஏற்ப, மேற்கண்ட பணிகளுக்கான முன்னுரிமை அடிப்படையிலான புதுப்பிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கைகளை மத்திய அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி புதுச்சேரி துறைமுகத் துறை சமர்ப்பிக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் பிற பிராந்தியங்களான காரைக்கால், மாஹே மற்றும் ஏனாமில் தற்பொழுது சுற்றுலா திட்டங்கள் சிறந்த முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், உள்ளுர் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கடல்சார் நடவடிக்கைகளை மேம்படுத்தி சொகுசு கப்பல் சுற்றுலா மற்றும் நீர்விளையாட்டுகளை மேம்படுத்த ரூ.100 கோடி அளிக்க அமைச்சர் அவர்கள் மத்திய அமைச்சரைக் கேட்டுக்கொண்டார்.

மனுவை பெற்றுக்கொண்ட மத்திய அமைச்சர் அவர்கள் புதுச்சேரிக்கு தேவையான நிதி மற்றும் சலுகைகளை செய்து தரப்படும் எனவும் உறுதி அளித்தார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top