Times of Puducherry
7 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்லுயிர் படிமங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என புவியியல் மற்றும் சுரங்கத்துறை உறுதியளித்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகாவில் அமைந்துள்ளது ராயப்புதுப்பாக்கம் கிராமம். இங்குள்ள குளத்தின்படிக்கற்களாக ஷெல் லைம் ஸ்டோன் எனப்படும் சுண்ணாம்புக்கற்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த கற்களில் கடல்வாழ்உயிரினங்களின் தொல்லுயிர் படிமங்கள் காணப்படுகின்றன.
இவை 7 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டவையாகும். இப்பகுதி கடலால் சூழப்பட்டு இருந்தது என்பதற்கான சான்றாக இவை விளங்குகின்றன. புவியியல், அறிவியல் முக்கியத்துவம் வாய்ந்தவையாகவும் கருதப்படுகிறது.
இதுதொடர்பாக விழுப்புரத்தை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன், கடந்த ஆகஸ்டு மாத இறுதியில் தமிழக முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனுஅனுப்பியிருந்தார். அதில்,தொல்லுயிர் படிமங்கள் நிறைந்த கற்களை பாதுகாக்க வேண்டும். உள்நாட்டு, வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் பயன்பெறும் வகையில்ராயப் புதுப்பாக்கத்தில் தொல்லுயிர் பூங்கா ஒன்று அமைக்கவேண்டும் என கோரிக்கைவிடுத்திருந்தார்.
இம்மனு விழுப்புரம் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக ஆய்வு செய்தமாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறைதுணை இயக்குனர் அலுவலகம் அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது:
ராயப்புதுப்பாக்கத்தில் புலத்தணிக்கை மேற்கொண்டபோது மனுவில் குறிப்பிட்டுள்ளவாறு தொல்லுயிர் படிமங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனை பாதுகாக்கும் வகையில் தொல்லுயிர் பூங்கா அமைத்திட விரைவில் நடவடிக்கை மேற்கொண்டு அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை அரசு உடனடியாக தொடங்க வேண்டும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.