Times of Puducherry
கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே உள்ள சிறுநெசலூர் கிராமத்தில் பெரிய ஏரியில் மீன்பிடித் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இத்திருவிழாவை முன்னிட்டு கிராமப் பொதுமக்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் முன்னிலையில், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மஞ்சுளா வேல்முருகன் பச்சைக்கொடி காட்டி மீன்பிடித் திருவிழாவைத் தொடங்கி வைத்தார்.
இதில் சிறுநெசலூர் மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, ஏரியில் இறங்கி பல்வேறு வகையான நாட்டு ரக மீன்களைப் பிடித்துச் சென்றனர். குறிப்பாக, கெண்டை, கெளுத்தி, விரால் உள்ளிட்ட மீன்கள் கிடைத்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
கிராம மக்களின் பாரம்பரியத்தையும் ஒற்றுமையையும் பறைசாற்றும் வகையில் நடைபெற்ற இந்த மீன்பிடித் திருவிழாவில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒன்றுகூடிய கிராம மக்கள், மீன்பிடித்தலை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். இதனால் சிறுநெசலூர் பெரிய ஏரி திருவிழாக் கோலம் பூண்டது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.