Times of Puducherry
புதுச்சேரி அரசு அறிவித்துள்ள கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கான குறைந்தபட்ச கூலி விவரங்களில், மாதத்திற்கு 8 மணி நேர வேலை அடிப்படையில் ரூ. 11,131 முதல் ரூ. 11,695 வரை தற்கால வாழ்க்கைச் செலவினங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகவும் உள்ளது. இதை புதுவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என புதுச்சேரி திமுக மாநில மகளிர் அணி அமைப்பாளர் காயத்ரி ஸ்ரீகாந்த் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இது ஏற்புடையதல்லாத வகையிலும் உள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார்
தொழிலாளர் துறையின் மூலம் பகிரப்பட்ட தரவுகளின் அடிப்படையில், மேலாளர் போன்ற பொதுப் பிரிவு பதவிகளுக்கு ரூ.11,695 என்றும், தூய்மைப் பணியாளர்கள், உதவியாளர்கள் போன்றோருக்கு ரூ.11,131 என்றும் மாத ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்றைய காலகட்டத்தில் விண்ணைத் முட்டும் விலைவாசி உயர்வைச் சமாளிக்க இந்தத் தொகை எந்த வகையிலும் போதுமானதல்ல. அன்றாட உணவுப் பொருட்கள், காய்கறிகள், சமையல் எரிவாயு, பிள்ளைகள் பள்ளி, உயர்கல்வி மற்றும் பெட்ரோல் விலை போன்ற அடிப்படைச் செலவுகள் பல மடங்கு அதிகரித்துவிட்ட நிலையில், ஒரு மாதத்திற்கு வெறும் பதினோரு ஆயிரம் ரூபாய் சம்பாதிப்பதைக் கொண்டு ஒரு குடும்பம் கண்ணியமான வாழ்க்கையை நடத்துவது என்பது கற்பனை செய்ய முடியாத கடினமான செயலாகும். ஆண்களுக்கே இந்த சம்பளம் என்றால், புதுச்சேரி உழைக்கும் பெண்களின் நிலை படுமோசமானதாக உள்ளது.
அடிப்படை வாழ்க்கைச் செலவு, வீடு வாடகை, மருத்துவச் செலவுகள் மற்றும் குழந்தைகளின் கல்விச் செலவுகள் தாறுமாறாக ஏறிவரும் இத்தகைய சூழலில், அரசு நிர்ணயித்துள்ள இந்த குறைந்தபட்ச ஊதிய வரம்பு மிகவும் காலாவதியானதாகத் தோன்றுகிறது. உழைக்கும் மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கும் துளியும் நியாயம் சேர்க்காத இந்தத் தொகை, உழைப்புச்சுரண்டலுக்கு மறைமுகமாக வழிவகுப்பதாகவே உள்ளது. எனவே, வாழ்க்கைச் செலவு மற்றும் பணவீக்கத்திற்கு ஏற்ப கூலி விகிதங்களை உடனடியாக மறுபரிசீலனை செய்து உயர்த்தினால் மட்டுமே தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் உயரும்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.