Times of Puducherry

சிறப்பு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதோருக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்க கோரிக்கை

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
18 Oct 2026 • 2:43 PM
demand-for-weightage-marks-to-failed-special-tet

சிறப்பு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு அனுபவ அடிப்படையில் வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்க வேண்டும் என தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, அமைப்பின் மாநிலப் பொருளாளர் சே.நீலகண்டன், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது:
பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கான சிறப்பு தகுதித் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், இந்தத் தேர்வு ஆசிரியர்களின் நினைவாற்றலை மட்டுமே சோதிப்பதாக உள்ளது.

கற்பித்தல் அனுபவத்துக்கு எவ்வித முக்கியத்துவமும் அளிக்கப்படவில்லை. அனுபவம் வாய்ந்த ஓர் ஆசிரியர், அவருடைய கற்பித்தல் அனுபவத்தின் மூலம் ஒரு வெற்றிகரமான மாணவரை உருவாக்குவது, பிரச்சினைக்குரிய மாணவரை நல்வழிப்படுத்துவது, திறனுள்ள மாணவர்களை முன்னேற வைப்பது போன்றவற்றில் திறமையானவராக இருப்பது தான் முக்கியமான தகுதி.

தமிழ்நாட்டில் ஜூலை 2026-ல் நடைபெற்ற சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு (Special TET) முடிவுகளில், மொத்தமாக 2,17,519 ஆசிரியர்கள் தேர்வு எழுதியதில் 1,08,326 ஆசிரியர்கள் தேர்ச்சி பெறவில்லை.

எனவே, ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1, தாள்-2-ல் தகுதி பெறாத ஆசிரியர்களுக்கு, அவர்கள் பணியாற்றிய அனுபவத்தின் அடிப்படையில், 2 ஆண்டுகளுக்கு ஒரு மதிப்பெண் என்ற அளவில் வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கி, அவர்களை தகுதிபெற்றவர்களாக அறிவிக்க வேண்டும். அதேபோல, பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆசிரியர்களுக்கு இடஒதுக்கீடு அடிப்படையில் தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயிப்பது சரியானது கிடையாது.

அனைத்து பிரிவு ஆசிரியர்களுக்கும் தேர்ச்சி மதிப்பெண்ணை 60 ஆக நிர்ணயம் செய்து தமிழக அரசு அறிவிக்க வேண்டும். மேற்கண்டவாறு நீலகண்டன் விடுத்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top