Times of Puducherry

இடைத்தேர்தலில் தேர்தல் விதிமுறைகளை கண்காணிக்க தேர்தல் துறை தவறிவிட்டது - சலீம் புகார்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
12 Oct 2026 • 12:14 PM
cpi-saleem-allegation-election-dept

புதுச்சேரிதட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் தேர்தல் விதிமுறைகளை கண்காணிக்க தேர்தல் துறை தவறிவிட்டதுயன புகார்கள் தெரிவித்தும் அதன் மீது தேர்தல் துறை நடவடிக்கை இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சலீம் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்த அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

தட்டாஞ்சாவடி சட்டமன்ற இடைத்தேர்தல் இடதுசாரி கட்சிகள் சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக போட்டியிட்டேன். தட்டாஞ்சாவடி தொகுதியின் இடைத்தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் வெளிப்படுத்தன்மையாகவும் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் துறை அறிவித்தது. தலைமை தேர்தல் அதிகாரி, இரண்டு துணை தேர்தல் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர், நூற்றுக்கும் மேற்பட்ட அலுவலர்கள், ஆயிரத்திற்கு மேற்பட்ட காவலர்கள், பறக்கும் படை, புகார்கள் பெறுவதற்கு தனி செல், தொலைபேசி எண்கள் என்று அமைக்கப்பட்டது.

ஆனால் தேர்தல் விதிமுறைகளை கண்காணிக்க தேர்தல் துறை தவறிவிட்டது. புகார்கள் தெரிவித்தும் அதன் மீது நடவடிக்கை இல்லை.
தேர்தல் நேரத்தில் தேர்தலுக்காக விநியோகம் செய்ய இருந்த தங்க நாணயம், பணம் ஆகியன கைப்பற்றப்பட்டது. கைப்பற்றப்பட்ட தங்கம், பணம் ஆகியவை பற்றி தேர்தல் துறை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. இதன் மூலம் இந்த விஷயத்தை மூடி மறைக்கப்படும் முயற்சியில் இருந்ததாக சந்தேகம் நிலவுகிறது.

தேர்தலில் போட்டியிட்ட மூன்று பிரதான கட்சி வேட்பாளர்கள் சார்பில் வாக்குக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டது. குறிப்பாக ஆளும் கட்சி வேட்பாளர் சார்பில் பணமழை பொழிந்து வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது.

இப்படிப்பட்ட முறைகேடுகளை தடுக்க ட்ரோன் கேமிராக்கள் பறக்க விடப்படும், பறக்கும் படை துணிந்து செயல்படும் என்று கூறிய தேர்தல் துறை ட்ரோன் கேமராவை பயன்படுத்தவில்லை. இது வலுவான சந்தேகத்திற்கு இடம் அளிக்கிறது. அதேபோல புகார்கள் மீது பறக்கும் படை சம்பவ இடத்திற்கு வந்த நேரடியாக பார்த்த பிறகும் கையும் களவுமாக பிடிக்கவில்லை.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேரடியாக தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து புகார் தெரிவிக்கும் போது, நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். ஆனால் துளி அளவு கூட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மாறாக வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்யப்படும் போது தேர்தல் துறை முற்றிலுமாக கண்டுகொள்ளவில்லை.

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வாக்கை விலை பேசி வாங்கும் முறை அறவே ஒழிக்கப்பட்டால்தான். உண்மையான தேர்தல் நடைபெறும். ஆகவே அக்டோபர்-6 தேதி நடைபெற்ற தட்டஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் உண்மையான தேர்தலும் இல்லை- இப்படிப்பட்ட முறையில் வெற்றிபெற்ற வேட்பாளருக்கு இது உண்மையான வெற்றியும் இல்லை.

தட்டாஞ்சாவடி தொகுதியில் மண்டிகிடந்த ஏராளமான மக்கள் பிரச்சனைகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெளிக்கொணர்ந்தது. மக்கள் மத்தியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு மிகுந்த மதிப்பு ஏற்பட்டது வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காமல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேர்தலை எதிர்கொண்டது.

மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாக்களித்த வாக்காளர்களுக்குக்கும், ஆதரவளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட் கட்சி, கடுமையாக பணியாற்றிய தோழர்களுக்கும், தேர்தல் முறையில் சீர்திருத்தம் செய்திடவும், தேர்தல் ஜனநாயகம் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், புறக்கணிக்கப்பட்ட தட்டாஞ்சாவடி தொகுதியில் மக்கள் பணியாற்றிடவும் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாற்றும் என்றும் உறுதி ஏற்கிறோம்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top