Times of Puducherry
ஊழல் பணத்தில் அரசியல் செய்பவர்கள் மத்தியில் சாமானியர் தேர்தலை எதிர்கொள்ள முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது என நேரு எம்எல்ஏ தெரிவித்தார். இது குறித்த அவர் செய்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புதுச்சேரி மாநில சட்டமன்ற தேர்தல்களில் இனி ஒரு சாமானியன் சட்டமன்ற உறுப்பினராக ஆக முடியாத நிலைமை ஏற்பட்டு இருக்கிறது. பணம் படைத்தவர்கள் மட்டுமே எதிர்வரும் காலங்களில் தேர்தலில் நின்று வெற்றி பெற முடியும் என்ற நிலையை கடந்த கால தேர்தல் முடிவுகள் மூலம் நிருபணமாகியுள்ளது.
கடந்த 2026 சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் ஒரு ஓட்டுக்கு மூன்று ஆயிரம் முதல் ஐயாயிரம் வரை கொடுத்துதான் வெற்றி பெற்று வந்து இருக்கிறார்கள் என்ற அவலநிலை புதுச்சேரியில் அரங்கேறியுள்ளது.
அதேநேரத்தில் பலஆயிரம் கோடி சொத்து மதிப்பு உடைய வெளிமாநில கார்ப்பரேட் நிர்வாகத்தின் பெரும் முதலாளிகளும், கந்துவட்டி தொழில் செய்து பெரும் பணம் சம்பாதித்தவர்களும், எந்த தொழில் செய்து இவ்வளவு பணம் சம்பாதித்தார்கள் என்று கூறமுடியாத திடீர் பெரும் பணக்காரர்கள் பெரும்பாலானோர் தற்போது சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளனர்.
மக்களுக்கான எந்தவொரு சேவையிலும் ஈடுபடாதவர்களும், மக்களின் அடிப்படை தேவைகளை பற்றி எதையும் சிந்திக்காதவர்களும், மக்கள் பிரச்சனைக்காக பொதுவெளியில் போராடாதவர்கள் திடீரென்று குறிப்பிட்ட தொகுதியை தேர்ந்தெடுத்து அவர்களின் பெரும் பணத்தை கொண்டு வள்ளல்கள் போல் இலவச பொருட்களை வாரி கொடுத்து ஓட்டு போடும் மக்களிடம் பணத்தாசையை காட்டி மூளைசலவை செய்வதுடன் மக்களின் மூளையை மழுங்கடித்து மக்கள் சேவையில் ஈடுபடாமலேயே பணத்தை வைத்து தேர்தலில் வெற்றி பெற்று இருக்கிறார்கள்.
இதனால் காலங்காலமாக அந்தந்த தொகுதியில் சேவையாற்றிய அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்பினர் மற்றும் பொதுசேவகர்கள் யாரும் இவர்களின் பணத்திற்கு முன்னால் ஈடுகொடுக்க முடியாமல் தேர்தலில் தோற்கடிக்கப்படுகிறார்கள். இது புதுச்சேரி தேர்தல் அரசியலில் ஒரு ஆபத்தான பாதையை உருவாக்கியுள்ளது.
இதற்கு முத்தாய்பு வைத்தது போல் தற்போது நடந்த முடிந்த தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் அரங்கேறியுள்ளது. இந்த தொகுதியின் என்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் பற்றி கூறியாகவேண்டும். இவரின் தந்தை பொதுப்பணித்துறை தலைமை பொறியாளராக பணியாற்றிய காலத்தில் ஊழல் செய்து சம்பாதித்த பணத்தில் குடும்பத்தார் பெயரில் சொத்துகுவிப்பில் ஈடுபட்ட குற்றத்தினால் சிபிஐயால் தொடரப்பட்ட வழக்கில் குற்றம் நிருபிக்கப்பட்டு தண்டனை கிடைத்தது. அதன்படி அப்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்த இவரின் பதவி பறிக்கப்பட்டது. அதன்பின் அந்த வழக்கில் ஜாமீன் பெற்று தற்போது 2026 வரை 8 ஆண்டுகள் சுதந்திரமாக சுற்றி வந்து கொண்டிருந்தார்.
இதற்கிடையில் 2021 சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் என்ஆர் இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று இருந்தார். கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த தொகுதியில் என்ஆருக்கு பதில் யாரும் வந்து மக்கள் பணி செய்யவில்லை. இந்த தொகுதி கேட்பாரற்று இருந்தது. தற்போது இந்த தொகுதியில் என்ஆர் காங்கிரஸ் வேட்பாளராக நின்று பல பொய் வாக்குறுதிகளையும், பெரும் பணத்தையும் செலவழித்து வெற்றி பெற்று இருப்பவர் கடந்த 8 ஆண்டுகளாக இந்த தொகுதியை ஏறெடுத்து கூட பார்க்காமல் இருந்தார்.
NR – BJP கூட்டணியை பயன்படுத்தி தன் மேல் உள்ள சிபிஐ வழக்கை நீர்த்து போக செய்து விடுதலை பெற்று இருப்பதுடன் லஞ்ச ஊழலின் மூலம் சேர்த்த சொத்து என்று முடக்கப்பட்ட பல நூறு கோடி ரூபாய் சொத்தும் தற்போது விடுவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த வழக்கில் மாண்புமிகு நீதிமன்றம் சிபிஐ இந்த குற்றம் நிருபிக்க தவறிஇருக்கிறது என்று கூறியுள்ளதே தவிர இவர்கள் குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பில் கூறவில்லை. அதேநேரத்தில் இந்த வழக்கை சிபிஐ மேல்முறையீடு செய்யாமல் இருப்பது மர்மமாக உள்ளது.
கடந்த 8 ஆண்டுகளாக இந்த தொகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சனை, மின்தடை பிரச்சனை, கழிவுநீர் பிரச்சனை, குண்டும் குழியுமான சாலை, குப்பை மண்டிய வாய்க்கால் போன்ற எந்த பிரச்சனையையும் கண்டுகொள்ளாத இவருக்கு ஊழல் வழக்கில் தனக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்ததும் மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக ஆகவேண்டும் என்ற பதவிவெறியால் இந்த இடைத்தேர்தலை பயன்படுத்தி கொண்டு தன் லஞ்ச, ஊழல் பணத்தை தண்ணீராக வாரி இறைத்து வாக்காளர்களின் ஒவ்வொரு ஓட்டுக்கும் பத்தாயிரத்திற்கு மேல் கொடுத்து ஓட்டுகளை விலைக்கு வாங்கி வெற்றி பெற்று இருக்கிறார்.
இப்படி ஊழல் செய்து சம்பாதித்த பணத்தை பயன்படுத்தி வேட்பாளர்களாக தேர்தலில் நிற்பவர்கள் மத்தியில் சேவை செய்யகூடிய சாமானியர்கள் எப்படி தேர்தலில் நின்று வெற்றி பெறமுடியும் என்ற கேள்வி எழுகிறது. இப்படிப்பட்டவர்கள் மத்தியில் எப்படி ஒரு நியாயமான தேர்தல் நடைபெறும். இது ஜனநாயக விரோத செயல். ஊழல் செய்த பணத்தை செலவும் செய்யும் வேட்பாளர்களிடம் பணத்தை பெற்று மக்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுப்பது என்பது அவர்களே அவர்களது தலையில் மண்ணை அள்ளி கொட்டிகொள்வதற்கு சமமாகும்.
கடந்தகாலத்தில் சில வேட்பாளர்கள் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு அரசியலில் ஈடுபட்டு வேட்பாளராக களமிறங்கி குடும்ப சொத்தை விற்றும், வாழ்நாள் முழுவதும் உழைத்து சம்பாதித்த பணத்தை செலவழித்தும், கடன் பெற்றும் தேர்தலில் நின்று மற்றவர்களுக்கு ஈடாக செலவு செய்தார்கள். அதில் சிலர் சட்டமன்ற உறுப்பினரானார்கள். அவர்களில் பலர் தோல்வியை தழுவினார்கள். அவர்களில ஒரு சிலர் கடன் பெற்று செலவு செய்த பணத்திற்கு வட்டி கட்டமுடியாமல் கடனாளியாகி தற்கொலை செய்து கொண்டனர்.
அதேபோல் கடந்த 2021 தேர்தலில் வெற்றி பெற்ற பல சட்டமன்ற உறுப்பினர்களின் நிலைமை பற்றி கூற வேண்டி உள்ளது. கடந்த ஐந்து வருடம் அவர்கள் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய போது அன்றாட செலவுக்கே கஷ்டப்பட்டார்கள். மேலும் நல்ல முகூர்த்த காலங்களில் தொகுதியில் உள்ளவர்களின் திருமணம் போன்ற குடும்ப விழாக்களுக்கு சென்று மொய் வைக்க கூட பணம் இல்லாமல் திண்டாடியதை கண்கூடாக காணமுடிந்தது. அவர்களில் பலர் ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்தனர். அப்படிப்பட்டவர்களுக்கு கூட ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் ஏதும் உதவ முன்வரவில்லை. குடும்ப சொத்தை விற்றும், கடன் வாங்கி செலவு செய்து வட்டி கட்ட முடியாத நிலையில் இருந்த இவர்கள் மக்களிடையே நன்மதிப்பை பெற்றிருந்தும் நடந்து முடிந்த 2026 பொதுதேர்தலில் போட்டியிடாமலே ஒதுங்கி கொண்டனர் என்ற பரிதாபமான நிலைதான் அவர்களுக்கு ஏற்பட்டது.
ஆனால் லஞ்ச ஊழல் மற்றும் குறுக்கு வழியில் சம்பாதித்த பணத்தை கொண்டு தேர்தலில் நின்று வெற்றி பெறும் திடீர் பணக்காரர்கள் மேலும் ஊழல் செய்து பணத்தை சம்பாதிக்கதான் செய்கிறார்களே தவிர மக்கள் எதிர்பார்க்கும் சுகாதாரமான குடிநீர், தடையில்லா மின்சாரம், தரமான சாலை வசதி, விபத்தில்லா சாலை மேம்பாடு, கழிவுநீர் மேம்பாடு, திடக்கழிவு மேம்பாடு, உயிர்காக்கும் சிறந்த மருத்துவ சேவை போன்ற மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய எப்படி முன்வருவார்கள்? அவர்களால் அதற்கான நேரத்தை எப்படி ஒதுக்க முடியும்? என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும். இதற்குமேலாவது இப்படிப்பட்டவர்களை அடையாளம் கண்டு மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.