Times of Puducherry

காங்கிரசாக இருந்தாலும், பாஜகவாக இருந்தாலும் தமிழ்நாட்டின் சுயமரியாதையையும் மாநில உரிமையையும் சீர்குலைப்பதில் இருவருக்கும் பெரிய வேறுபாடில்லை

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
11 Oct 2026 • 6:35 PM
bjp-congress-both-does-injustice-to-tamilnadu

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் காங்கிரசு பாஜகவிற்கு, தமிழ்நாட்டின் மாணவர்களுக்குப் பாடம் நடத்தத் தகுதி என்ன இருக்கிறது என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சென்னை தீவுத்திடலில் கட்சி ரீதியாக ஏற்பாடு செய்யப்பட்ட ‘மாணவர்கள் குரல்’ நிகழ்ச்சியில் தமிழ்நாட்டு மாணவர்களோடு உரையாடியுள்ளார். 1976 இல் நெருக்கடி நிலையைப் பயன்படுத்தி, மாநிலப் பட்டியலில் இருந்த கல்வியைப் பொதுப்பட்டியலுக்குத் தூக்கிச் சென்று மாநிலங்களின் கல்வி அதிகாரத்தைப் பறித்தது அன்றைய இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரசு அரசு.

காங்கிரசாக இருந்தாலும், பாஜகவாக இருந்தாலும் தமிழ்நாட்டின் சுயமரியாதையையும் மாநில உரிமையையும் சீர்குலைப்பதில் இருவருக்கும் பெரிய வேறுபாடில்லை

நாட்டு மக்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான சமத்துவக் கல்வி முறையை உருவாக்காமல், பத்துக்கும் மேற்பட்ட ஏற்றத்தாழ்வான கல்வி முறைகளைத் திணித்து அடித்தட்டு மக்களின் கல்வி வாய்ப்புகளைச் சிதைத்ததும் இதே ஆட்சியாளர்கள்தான்.

2010 இல் காங்கிரசு தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் தான் ‘நீட்’ நுழைவுத் தேர்வுக்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டு, அதன் நச்சு விதை ஊன்றப்பட்டது. காங்கிரசு விதைத்த அந்த நச்சு மரத்திற்குத்தான், இன்று பாஜக உரம்போட்டுத் தமிழ்நாட்டு ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை அடியோடு சிதைத்துக் கொண்டிருக்கிறது.

கல்வி உரிமையைப் பறித்து, நீட் நுழைவுத் தேர்வைத் தமிழ்நாட்டின் மீது திணித்த காங்கிரசு, இன்று மாணவர்களுக்கு ஆதரவாக வேடமிட்டு மேடையேறுவது அப்பட்டமான சந்தர்ப்பவாதம் இல்லையா? வரலாற்றில் செய்த வரலாற்றுப் பிழைக்குத் தமிழ்நாட்டு மாணவர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்கக் காங்கிரசு தலைமைக்குத் துணிவுண்டா? கல்வி உரிமையில் மட்டுமல்ல. தமிழ்நாட்டின் வாழ்வாதாரங்களையும் இயற்கை வளங்களையும் சீரழித்த வரலாறும் இவர்களுடையதுதான்.

காவிரி ஆற்றுநீர் உரிமை, முல்லைப் பெரியாறு அணை உரிமை, பாலாற்று உரிமை ஆகியவற்றில் தமிழ்நாட்டின் நியாயமான உரிமைகளைத் தொடர்ந்து வஞ்சித்துப் பல்வேறு குளறுபடிகளைச் செய்தவர்கள் இவர்கள் தான். காவிரி டெல்டாவை பாலைவனமாக்கத் துடித்த மீத்தேன் மற்றும் ஈத்தேன் திட்டங்களுக்குக் கையெழுத்திட்டுத் தொடக்கி வைத்தவர்கள் இவர்கள்.

உலக அளவில் பல்வேறு மாநிலங்களில் கைவிடப்பட்ட அணு உலைத் திட்டத்தைத் தமிழ்நாட்டின் கூடங்குளத்தில் மக்களின் எதிர்ப்பையும் மீறி நிறுவியவர்கள் இவர்கள். தேனி மதுரை எல்லையில் மேற்குத் தொடர்ச்சி மலையின் சூழலியலைச் சீரழிக்கும் நியூட்ரினோ ஆய்வகத் திட்டத்தைக் கொண்டு வந்தவர்கள் இவர்கள்.

கன்னியாகுமரியில் ஐ.ஆர்.இ.எல் (IREL) மூலம் அணுக்கனிமச் சுரங்கம் அமைத்துத் தமிழ்நாட்டின் கடற்கரை வளங்களைச் சூறையாட வழிவகுத்தவர்கள் இவர்கள். காட்டுப்பள்ளியில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பையும், தமிழகத்திற்கே உரித்தான கடல் பரப்பையும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தாரைவார்த்துக் கொடுத்தவர்கள் இவர்கள்.

கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளை இலாபத்திற்காகத் தமிழ்நாட்டின் கனிம வளங்களை அள்ளிக் கொடுத்துக் கபளீகரம் செய்தவர்கள் இவர்கள். நெய்வேலியில் என்.எல்.சி (NLC) நிறுவனத்தைக் கொண்டுவந்து மக்களின் வாழ்வை வளப்படுத்துகிறோம் என்று கூறிவிட்டு, நிலம் கொடுத்த அந்த மண்ணின் பூர்வகுடி மக்களின் வாழ்வாதாரத்தையே அடியோடு சீரழித்தவர்கள் இவர்கள்.

அது மட்டுமல்ல, ஈழத்திலே பல இலட்சக்கணக்கான நமது தொப்புள் கொடி உறவுகள் இனப்படுகொலை செய்யப்படுவதற்கும் துணை போனவர்கள் இவர்கள்தான்.

சென்னை தீவுத்திடல் என்பது வணிகக் கண்காட்சிகளுக்கும் அரசு சார்ந்த நிகழ்வுகளுக்கும் பயன்படும் இடம். அரசியல் பொதுக்கூட்டங்களுக்கு நீதிமன்ற நெறிமுறைகளும் கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ள சூழலில், காங்கிரசு கட்சியின் இந்த மாணவர் கூட்டத்திற்குத் தீவுத்திடலைத் தாரைவார்த்தது எப்படி?

இதே தீவுத்திடலில் கூட்டமோ மாநாடோ நடத்தத் தமிழ்நாட்டின் மண்ணுரிமை பேசும் மாநிலக் கட்சிகளோ, இதர இயக்கங்களோ அனுமதி கோரினால் காவல்துறை அனுமதிக்குமா? அல்லது உடனடியாகச் சட்டம் ஒழுங்கு காரணங்களைக் காட்டி நிராகரிக்குமா?

தேசியக் கட்சிகளுக்கு என்றால் சிவப்புக் கம்பளம். மாநிலக் கட்சிகளுக்கு என்றால் கட்டுப்பாடுகளும் தடைகளுமா? இந்த பாரபட்சத்திற்குத் தமிழக அரசும் காவல்துறையும் தரும் பதில் என்ன? காங்கிரசாக இருந்தாலும், பாஜகவாக இருந்தாலும் தமிழ்நாட்டின் சுயமரியாதையையும் மாநில உரிமையையும் சீர்குலைப்பதில் இருவருக்கும் பெரிய வேறுபாடில்லை.

தமிழ்நாட்டு மாணவர்கள் தங்கள் உரிமைகளை மீட்டெடுக்கத் தெரிந்தவர்கள். டெல்லி தலைவர்களிடம் பாடம் படிக்க வேண்டிய அவசியமோ, அரசியல் சான்றிதழ் பெற வேண்டிய பலவீனமோ தமிழ்நாட்டு மாணவர்களுக்குக் கிடையாது. தமிழ்நாட்டின் உரிமைகளையும் கூட்டாட்சித் தத்துவத்தின் வழிகாட்டுதல்களையும் சிதைக்கும் காங்கிரசும் பாஜகவும் இழைத்த வரலாற்றுத் துரோகங்களை, தமிழ்நாட்டு மண்ணும் மக்களும் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top