Times of Puducherry
ரசாயன உரங்களின் தொடர்ச்சியான பயன்பாடு அதிகரித்து வருவதால் மண்வளம் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளதாகவும், விவசாயிகள் தொடர்ந்து உயிர் உரங்களைப் பயன்படுத்தி மண்ணின் நலத்தை மீண்டும் வளமாக்கி, நஞ்சில்லாத உணவை வழங்க இயலும் என்றும் மதுரை வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) ராணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: பயிர்களுக்கேற்ற உயிர் உரங்கள்:
அசோஸ்பைரில்லம்: நெற்பயிர், சோளம், கம்பு, கேழ்வரகு, பருத்தி, மிளகாய் போன்ற பயிர்களுக்குப் பயன்படுத்தப்பட்டு காற்றில் உள்ள தழைச்சத்தை நிலைப்படுத்த உதவுகிறது.
ரைசோபியம்: பயறுவகை பயிர்களுக்கும் நிலக்கடலைக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
பாஸ்போ பாக்டீரியா மற்றும் ஜிங்க் உயிர் உரம்: அனைத்து பயிர்களுக்கும் மணிச்சத்து மற்றும் ஜிங்க் நுண்சத்தைக் கரைத்து பயிருக்குக் கிடைக்கச் செய்யப் பயன்படுகின்றன.
பொட்டாஷ் பாக்டீரியா: சாம்பல் சத்தை நகர்த்திப் பயிருக்குக் கிடைக்கச் செய்கிறது.
தோட்டக்கலை மற்றும் மானாவாரி பயிர்களுக்கு மண்ணில் நல்ல ஈரம் இருக்கும்போது, விதைப்பதற்கு முன்பு அல்லது முதல் களை எடுத்து முடித்தவுடன் உயிர் உரங்களை இட வேண்டும். உயிர் உரங்களை இடுவதால் ரசாயன உரங்களின் பயன்பாட்டை 25 முதல் 30 சதவீதம் வரை குறைத்து, சாகுபடிச் செலவைக் குறைத்து அதிக மகசூலைப் பெற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.