Times of Puducherry
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம் ஆதிச்சனூர் வசந்தகிருஷ்ணாபுரம் பகுதிக்கு உட்பட்ட இடங்களில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மூலம் அகழ்வாராய்ச்சி பணிகள் அகழாய்வு இயக்குநர் பொ. கோ. லோகநாதன், உதவி இயக்குநர் பரத் ஆகியோர் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்விடத்தை இன்று திருக்கோவலூர் சட்டமன்ற உறுப்பினர் பழனிச்சாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது அகழ்வாராட்சியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை தற்காலிகமாக வைத்து பாதுகாப்பதற்கு ஒரு கட்டிடத்தை தேர்வு செய்து தருவதாகவும் விரைவில் அகழ் வைப்பகம் வைப்பதற்கான நிரந்தர அருங்காட்சியகம் ஏற்படுத்துவதற்கு தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்து நிறைவேற்றி தருவதாகவும் கூறினார்.
உடன் வந்திருந்த கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் சிங்கார உதியன் கூறியதாவது. இதுவரை அகழ்வாராய்ச்சியில் இரும்புக்காலம் மற்றும் தொடக்க வரலாற்று காலத்தைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட கல்வட்டங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இக்கல்வட்டங்களின் மையப் பகுதியில் கற்பதுக்கையுடன் கூடிய ஈமப்பேழைகள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றின் உட்புறம் மற்றும் வெளிப்புறங்களில் ஈமப் பொருட்களான மட்பாண்டங்கள் இரும்பினால் செய்யப்பட்ட கருவிகள் மற்றும் அதிக அளவிலான சங்கு அணிகலன்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த இரும்புக்கால புதைப்பிடத்தில், குறிப்பாக முழுமையான சங்குகளை இரும்பு கம்பிகள் அல்லது நாண் மூலம் கோர்க்கப்பட்டு மூடு கற்களின் மேற்பரப்பில் அலங்காரமாக வைக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இது இந்திய அளவில் முதலாவது கண்டறியப்பட்டது ஆகும்.
இன்னும் திறக்கப்படாமல் இருக்கும் 31 மீட்டர் வட்டமுள்ள இடத்தை முழுமையாக ஆராய்ச்சி செய்யும்போது ஆச்சரியமூட்டும் பல விஷயங்கள் தெரிய வரலாம் என கருதப்படுகிறது, இந்த தொல்லியல் பகுதி 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என்றார். உடன் ஆய்வு நடுவத்தின் பொறுப்பாளர்கள் நல்நூலகர் மு.அன்பழகன், மு. கலியபெருமாள், பா . கார்த்திகேயன், ஆகியோர் உடன் இருந்தனர்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.