Times of Puducherry

அதிமுக மூத்த தலைவர்கள் எஸ்.பி.வேலுமணி இல்லத்தில் திடீர் ஆலோசனை

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
12 Oct 2026 • 8:11 PM
admk-senior-velumani-meeting-public-commotion

சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இல்லத்தில் சி.வி.சண்முகம், தங்கமணி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். சமீபத்தில் நடைபெற்ற இடைத் தேர்தல்களில் இரண்டு தொகுதிகளையும் அதிமுக பறிகொடுத்ததைத் தொடர்ந்து, கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மற்றும் தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து இவர்கள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்

அதிமுகவில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், தங்கமணி உள்ளிட்டோர் சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள எஸ்.பி. வேலுமணி இல்லத்தில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடத்திய திடீர் ஆலோசனைக் கூட்டம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி கட்சியின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றது முதல் அதிமுக பல்வேறு தொடர் தோல்விகளைச் சந்தித்து வருகிறது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தொடங்கி, சமீபத்தில் நடந்துமுடிந்த 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரை இச்சரிவு தொடர்ந்தது. 2026 சட்டமன்றத் தேர்தலில் கட்சி மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டதைத் தொடர்ந்து, அக்கட்சியின் 20-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் வெளிப்படையாகப் போர்க்கொடி தூக்கினர். சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆளும் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்த அவர்கள், பின்னர் நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகளை அடுத்து எடப்பாடி பழனிசாமி தலைமையின் கீழ் செயல்படத் தொடங்கினர். இருப்பினும், எஸ்.பி. வேலுமணியின் மாவட்டச் செயலாளர் பொறுப்பு பறிக்கப்பட்டு துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது போன்ற விவகாரங்கள் அவருக்குத் திருப்தியைத் தரவில்லை. இதற்கிடையே, சி.வி. சண்முகம் மற்றும் இரண்டு விஜயபாஸ்கர்கள் தனித்து இயங்கி வந்த நிலையில், அந்த இரண்டு விஜயபாஸ்கர்களும் அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு காலியிடங்களுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் அதிமுகவிற்குப் பெரும் சோதனையாக அமைந்தன. முன்பு அதிமுக சார்பில் வெற்றிபெற்று பின்னர் விலகிச் சென்று தவெகவில் போட்டியிட்ட அதே வேட்பாளர்கள் தற்போதைய இடைத்தேர்தலிலும் வெற்றிபெற்றனர். குறிப்பாக, அதிமுகவின் வலுவான கோட்டையாகக் கருதப்படும் கொங்கு மண்டலமான தாராபுரத்திலும், மதுராந்தகத்திலும் அதிமுக மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டது அக்கட்சியினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வரும் அக்டோபர் 17ஆம் தேதி அதிமுகவின் நிறுவன நாள் கொண்டாட்டங்களுக்கான பேச்சாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டதில், எஸ்.பி. வேலுமணியின் பெயர் இடம்பெற்றிருந்த போதிலும், சி.வி. சண்முகத்தின் பெயர் விடுபட்டது உட்கட்சி மோதலை வெளிச்சம் போட்டுக் காட்டியது. இந்தச் சூழலில் விரைவில் அதிமுக பொதுக்குழு கூட்டப்பட உள்ளதாகவும், அதில் கட்சியின் பொதுச் செயலாளரை மாற்ற வேண்டும் என்ற தீர்மானம் கொண்டுவரப்படலாம் எனவும் தகவல்கள் பரவி வருகின்றன.

இந்தச் சூழலில்தான் எஸ்.பி. வேலுமணி வீட்டில் இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. அதிமுகவில் அதிருப்தி அணி மீண்டும் வலுபெறத் தொடங்கியுள்ளதா, அல்லது இந்தச் சந்திப்புகள் மூலமாகத் தலைமைக்கு எதிராக அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமா என்ற கேள்விகள் அரசியல் அரங்கில் தீவிர விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top