Times of Puducherry

நாகையில் ரூ.650 கோடி போதைப் பொருள்; தவெக நிர்வாகி உள்பட 4 பேருக்கு நவம்பர் 10 வரை நீதிமன்ற காவல்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
18 Oct 2026 • 2:18 PM
650-crore-drugs-seized-4-arresed-including-tvk-executive

நாகையில் ரூ.650 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேருக்கு சர்வதேச கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளதா? என மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அந்த 4 பேருக்கும் நவம்பர் 10 வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே பிரதாபராமபுரத்தில் ரூ.650 கோடி மதிப்பிலான 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில், தவெக மாவட்டச் செயற்குழு உறுப்பினராக இருந்தவரும், வழக்கறிஞருமான பூபாலன், சுகன், மணிகண்டன், சதீஷ் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
அவர்களை நாகை சுங்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் தொடர்ந்து 30 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர்.

நாகையில் ரூ.650 கோடி போதைப் பொருள்; தவெக நிர்வாகி உள்பட 4 பேருக்கு நவம்பர் 10 வரை நீதிமன்ற காவல்

இந்த வழக்கில் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் பணியாற்றும் போலீஸார் 2 பேரிடம் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. அதேபோல, கடந்த செப்டம்பர் மாதம் 2-வது வாரத்தில் காரைக்காலில் இருந்து ரூ.6.08 கோடி மதிப்புள்ள 7.605 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை கடத்த முயற்சித்த இலங்கையை சேர்ந்தவர் உட்பட 4 பேரை காரைக்கால் போலீஸார் கைது செய்தனர். இதனால் நாகை கடத்தல் வழக்குக்கும், காரைக்கால் கடத்தல் வழக்குக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

தற்போது சிக்கியுள்ள 135 கிலோ போதைப்பொருள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது? கடத்தலுக்கான திட்டம் தீட்டப்பட்டது எப்படி? இந்தக் கடத்தலில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருக்கிறதா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை 5 தகரப் பெட்டிகளில் வைத்து பாதுகாப்பாக சீல் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல, பூபாலனின் காரும் பறிமுதல் செய்யப்பட்டு நாகை சுங்கத்துறை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட தவெக நிர்வாகி பூபாலன் உட்பட நான்கு பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்களை நவம்பர் 10ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து நாகை கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, தவெக நிர்வாகி பூபாலன் நாகை மாவட்டச் செயலாளர் சுகுமாறனுக்கு நெருக்கமானவர். பூபாலன் மீது கடத்தல் சர்ச்சைகள் எழுந்த நிலையிலும் சுகுமாறன் கண்டுகொள்ளவில்லை. சுகுமாறனுக்குச் சில செலவுகளை பூபாலன் செய்து கொடுத்ததால் அவரது நடவடிக்கையைக் கண்டு கொள்ளவில்லை. சுகுமாரனையும் போலீசார் விசாரிக்க வேண்டும் என்கின்றனர் அப்பகுதியினர்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top