Times of Puducherry
மாணவ மாணவிகள் தங்கள் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வெளியே சென்றவுடன் வேலை தேடி அலையக்கூடாது. மற்றவர்களுக்கு வேலை கொடுப்பவராக நீங்கள் தங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும்: மாணவர்களுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் அட்வைஸ்.
புதுச்சேரி சமுதாயக் கல்லூரியின் 30வது ஆண்டு விழா மற்றும் புதிய கட்டிடத் திறப்பு விழா இன்று நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் K. கைலாஷ்நாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கட்டிடத்தை திறந்து வைத்தார். பல்கலைக்கழக துணைவேந்தர் பிரகாஷ் பாபு, சமுதாயக் கல்லூரியின் முதல்வர் அருணா, பேராசிரியர்கள், அலுவலர்கள் மாணவர்கள் விழாவில் பங்கேற்றனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவில் துணைநிலை ஆளுநர் K. கைலாஷ்நாதன் பேசியதாவது:
கல்வி நிறுவனத்தின் பெருமை அதன் பிரம்மாண்டமான கட்டிட அமைப்பில் இல்லை. அதில் படித்த மாணவர்கள், வாழ்க்கையில் எந்த அளவிற்கு உயர்ந்து இருக்கிறார்கள்; அவர்களுடைய குடும்பத்திற்கும் இந்த சமுதாயத்திற்கும் எப்படிப்பட்ட பங்களிப்பை செய்து இருக்கிறார்கள் என்பதில்தான் அடங்கி இருக்கிறது. அந்த வகையில் பெருமைக்கு உரிய கல்லூரியாகவே இந்த கல்லூரி இருந்து வருகிறது.
1955 இல் தொடங்கப்பட்ட இந்த சமுதாய கல்லூரிதான் இந்திய உயர்கல்வி வரலாற்றில் முதன் முதலாக தொடங்கப்பட்ட சமுதாயக் கல்லூரி என்பதில் அந்த பெருமை இன்னும் உயர்கிறது. இந்த சமுதாயக் கல்லூரி கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக புதுச்சேரியிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் வாழும் எளிய குடும்பங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு ஒரு நம்பிக்கை வாசலாக அமைந்து இருக்கிறது. ஆயிரக் கணக்கான இளைஞர்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த கல்லூரியில் படிக்கும் சுமார் 1200 மாணவர்களில் ஏறத்தாழ 78 சதவீதம் பேர் முதல் தலைமுறை பட்டதாரிகள் என்று கேள்விப்படும் போது நெகிழ்ச்சியாக இருக்கிறது.
இந்த எண்ணிக்கைக்குப் பின்னால் எத்தனை பெற்றோர்களின் கனவு இருக்கிறது. எத்தனை குடும்பங்களின் எதிர்பார்ப்பு இருக்கிறது. தங்கள் பிள்ளைகள் படித்து நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்ற பெற்றோர்களின் நம்பிக்கை இருக்கிறது. இதுதான் இந்த சமுதாயக் கல்லூரியின் மிகப்பெரிய பங்களிப்பு நாம் மறக்கக் கூடாது.
ஒரு குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரிகள் தங்களுக்காக மட்டும் படிப்பதில்லை. அவர்கள் தன்னுடைய குடும்பத்தின் எதிர்காலத்திற்காக, அடுத்த தலைமுறைக்கு நம்பிக்கை தருவதற்காக படிக்கிறார்கள். இங்கே வைக்கப்பட்டு இருக்கும் PHOTO EXHIBITION-ஐ பார்க்கும்போது இந்த கல்லூரி எத்தனை துறைகளில், எத்தனை விதமான, தொழில் சார்ந்த- DIPLOMA, PG-DIPLOMA படிப்புகளை தொடங்கி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது. 1997 முதல் 2005 வரையிலான காலகட்டத்தில் மட்டும் 77 DIPLOMA படிப்புகள்.
இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு ஏற்ற கல்வியை கொடுக்க இந்த கல்லூரி எடுத்த முயற்சிகளை நினைத்துப் பாருங்கள். இந்த கல்லூரியில் படித்தவர்கள் இன்று இந்தியாவில், வெளிநாடுகளில், AIIMS- NEW DELHI போன்ற மருத்துவ நிறுவனங்களில், CINEMA INDUSTRY, GOVT. OFFICES என்று உயர்ந்த நிலையில் இருக்கிறாரகள் என்பது உண்மையில் பெருமையாக இருக்கிறது.
நான் உங்களை கேட்டுக் கொள்வதெல்லாம்… படித்து முடித்து வேலை தேடுபவர்களாக அல்லாமல்… வேலை தருபவர்களாக நீங்கள் உயர வேண்டும். அதற்காக மத்திய அரசின் MAKE IN INDIA, SKILL INDIA. START-UP INDIA. MSME திட்டங்கள் உங்களுக்கு உதவியாக இருக்கும்.ஏனென்றால், இந்தியாவில் வெறும் 2.5 சதவீத வேலைவாய்ப்புகள் மட்டுமே அரசு துறைகளில் இருக்கிறது.
DEFENCE, RAILWAYS, BANKING, INSURANCE போன்ற துறைகளை சேர்த்தே சொல்கிறேன். மீதம் உள்ள் 97.5 சதவீத வேலைவாய்ப்புகள் தனியார் மற்றும் சுயதொழில் துறைகளால் தான் உருவாக்க முடியும் என்று ஒரு புள்ளி விவரம் சொல்கிறது. இந்த சமுதாயக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் கல்வியில் மட்டுமல்லாமல் விளையாட்டுத் துறையிலும் சாதனை படைத்து வருகிறார்கள் என்பது இரட்டை மகிழ்ச்சியை தருகிறது. சர்வதேச HOCKEY போட்டியில் வெற்றி பெற்ற கீர்த்திகா, சர்வதேச VOLLEYBALL போட்டிக்கு தேர்வான கமலேஷ், உலக பல்கலைக்கழக WEIGHTLIFTING CHAMPIONSHIP போட்டியில் பதக்கங்கள் வென்ற மினிமதி இவர்களைப் போல எத்தனையோ மாணவர்கள் KABADI, CRICKET, TEAKWANDO, SKATING போன்ற விளையாட்டுகளில் சாதனை படைத்து இருக்கிறார்கள். அவர்களையும் அவர்களை ஊக்கப்படுத்திய, பயிற்சி அளித்த ஆசிரியர்களையும் நான் மனதார பாராட்டுகிறேன். இந்த சாதனைகள் எல்லாம் மாணவர்களின் உழைப்பையும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பையும் காட்டுகின்றன.
ஒரு வரலாற்று உண்மையை இங்கே நான் பதிவு செய்ய விரும்புகிறேன். இந்த SEPTEMBER-OCTOBER மாதம் ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளிள் இந்தியா 21 தங்கம் 27 வெள்ளி 37 வெண்கலப் பதக்கங்கள் என்று மொத்தம் 85 பதக்கங்கள் வென்றது. 45 நாடுகள் கலந்து கொண்ட நிலையில், பதக்கப் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்தது. இதில் முக்கயமானது என்னவென்றால், பதக்கம் வென்ற- தடகள விளையாட்டு (ATHLETICS), கபடி (KABADI), மல்யுத்தம் (WRESTLING), குத்துச் சண்டை(Boxing), துப்பாக்கி சுடுதல் (Shooting), வில்வித்தை (ARCHERY) போன்றவற்றில் கிராமப் பகுதியில் இருந்து போனவர்கள்தான் பதக்கம் ஜெயித்து இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக, பெண்கள் அதிகம் சாதித்து இருக்கிறார்கள். கிராமப்புறங்களில், ஏராளமான திறமைகள் இருக்கின்றன.
சரியான வாய்ப்பும், பயிற்சியும், வழிகாட்டலும் இருந்தால் நம்முடைய மாணவர்கள் உயரத்தை அடைய முடியும் என்பதற்கு இது உதாரணம். நேற்றுதான், நமது முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளை நாம் கொண்டாடினோம். அவர் ஒரு விஞ்ஞானி மட்டுமல்ல. கோடிக்கணக்கான இளைஞர்களின் கனவுகளுக்கு உயிரூட்டிய ஒரு மகத்தான ஆளுமை. எளிய குடும்பத்தில் பிறந்து, தன்னுடைய அறிவாலும், உழைப்பாலும் இந்தியாவின் மிக உயர்ந்த அரசியல் அமைப்பு பதவியை அடைந்தவர். அவர் சொன்னதைப் போல உயர்ந்த இலக்குகளை நோக்கி கனவு காணுங்கள். நீங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் உங்கள் எதிர்காலத்தை தீர்மானிப்பது இல்லை. உங்களுடைய உழைப்பு, ஒழுக்கம், விடாமுயற்சி இவைகள் தான் உங்கள் முன்னேற்றத்தை தீர்மானிக்கும்.
இந்தியா இளைஞர்களின் நாடு. மக்கள் தொகையில் சுமார் 30 சதவீதம் பேர் இளைஞர்கள். அவர்களிடம் திறமை இருக்கிறது. ஆர்வம் இருக்கிறது. உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற கனவு இருக்கிறது. அதைதான் மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி YUVA SHAKTHI என்று சொல்லுகிறார். அவர் முன்னேடுத்த VIKSIT BHARAT2047- அதாவது இந்தியா சுதந்திரம் அடைந்த 100-வது ஆண்டில்- வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா உருவாக வேண்டும் என்ற லட்சியக் கனவோடு நான் பயணித்துக் கொண்டு இருக்கிறோம். அந்த, வளர்ச்சி அடைந்த இந்தியாவை தலைமையேற்று வழிநடத்தும் தகுதியும் திறமையும் பொறுப்பும் உங்களைப் போன்ற இளைஞர்களின் கையில்தான் இருக்கிறது. அதற்காக, நீங்கள் உயர்பதவிகளில்தான் இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. எந்த துறையில் இருந்தாலும் திறமையாகவும் அர்ப்பணிப்போடும் செயல்பட்டால் நாட்டின் வளர்ச்சியை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.
இன்று தொடங்கி வைக்கப்படும் இந்த கட்டிடம், மாணவர்களின் கல்வி கற்கும் சூழலை மேம்படுத்தும். தரமான கல்வியையும், உள்கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தித் தருவதில் கவனம் செலுத்தும் பல்கலைக்கழக துணைவேந்தரையும், நிர்வாகத்தையும் இந்த நேரத்தில் பாராட்டுகிறேன்.
ஏழை-எளிய மாணவர்கள் உயர்கல்வி பெற்று வேலைவாய்ப்பு பெற உதவ வேண்டும் என்பதுதான் சமுதாய கல்லூரிகள் தொடங்கப்படுவதன் அடிப்படை நோக்கம். இந்த சமுதாய கல்லூரியின் உயரிய நோக்கம் தொடர்ந்து பாதுகாக்கப்பட வேண்டும். இந்த கல்லூரியின் சாதனை பயணத்தில் பங்களித்த அனைவருக்கும் எனது பாராட்டுகள் என்றார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.