Times of Puducherry
தமிழக அரசின் வெற்றிப் பயணம் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளையும் உடனே இணைத்திட வலியுறுத்தி அக்டோபர் 22-ல் அனைத்து பேருந்து நிலையங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என மாற்றுத்திறனாளிகள் சங்கம் முடிவு செய்துள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநிலத் தலைவர் வில்சன் மற்றும் பொதுச் செயலாளர் ஜான்சி ராணி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்:
தமிழக அரசின் வெற்றிப் பயணம் பேருந்துகளில் துணையாளர் ஒருவருடன் மாற்றுத்திறனாளிகளையும் கட்டணமின்றி இலவசமாக பயணம் செய்ய அனுமதித்திட கேட்டு இம்மாதம் 22-ல் அனைத்து பேருந்து நிலையங்களிலும் கண்டன இயக்கம் நடத்திட ‘தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் TARATDAC’ மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி இச்சங்கத்தின் மாநில தலைவர் தோ.வில்சன் பொதுச் செயலாளர் பா.ஜான்சிராணி தெரிவித்துள்ளதாவது:
எமது அமைப்பின் கோரிக்கையை ஏற்று கடந்த ஆகஸ்ட் 31-ல் தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான மானியகோரிக்கையின் போது உரையாற்றிய தமிழக சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி அவர்கள் தமிழக அரசின் வெற்றிப் பயணம் திட்டத்தில் கட்டணமின்றி இலவசமாக பயணம் செய்ய பெண்கள் மற்றும் திருநர்களுடன் மாற்றுத்திறனாளிகளையும் உள்ளடக்கி விரிவுபடுத்தப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அறிவிப்பு செய்திருந்தார்.
மாற்றுத்திறனாளிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை ஏற்படுத்தியது. இது இந்நிலையில் அக்டோபர் 2-ல் இத்திட்டம் நடைமுறைக்கு வந்தபோது அதில் மாற்றுத்திறனாளிகள் இணைக்கப்படாமல் விடுபட்டு இருந்தது மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. அரசின் அறிவிப்பின்படி, வெற்றிப் பயண பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்ய சென்ற மாற்றுத்திறனாளிகள் அப்பேருந்துகளில் ஏறிய போது அவர்களுக்கு அதிர்ச்சியே காத்திருந்தது. வெற்றிப் பயண பேருந்துகளில் அவர்கள் கட்டணமின்றி பயணம் செய்ய அனுமதிக்கப்படாதது மட்டுமின்றி, அவர்கள் அவமானப்படுத்தப்பட்டு அப்பேருந்துகளிலிருந்து இறக்கிவிடவும் பட்டனர். இதனால் பல இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கும், பேருந்து நடத்துனர்களுக்கும் இடையே தகராறும் ஏற்பட்டுள்ளது.
எனவே, தமிழக அரசு சட்டப்பேரவையில் அறிவித்தபடி அரசின் வெற்றிப்பயணம் பேருந்துகளில் துணையாளர் ஒருவருடன் மாற்றுத்திறனாளிகளையும் கட்டணமின்றி பயணித்திட அனுமதிக்குமாறு வலியுறுத்தி இம்மாதம் 22-ல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பேருந்து நிலையங்களிலும் பெருந்திரள் கண்டன இயக்கம் நடத்திட எமது தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.