Times of Puducherry
நீர் நிர்வாகத்தில் வெளிப்படை தன்மை இல்லாமல் மூடி மறைக்கப்பட்டதால் விவசாயிகள் மிகப்பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளதாக தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுசெயலாளர் பிஆர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொது செயலாளர் பிஆர் பாண்டியன் வேதாரண்யம் பகுதியில் தாணிக்கோட்டகம், மணக்காடு, வாய்மேடு உள்ளிட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது;
மேட்டூர் அணை செப்டம்பர் 1ஆம் தேதி திறக்கப்பட்டது. இதுவரையிலும் 90% கிராமங்களுக்கும், விளைநிலங்களுக்கும் பாசன நீர் சென்றடையவில்லை. வெண்ணாறு பாசன பகுதியில் நிலத்தடி நீர் 90 சதவீத நிலங்களுக்கு கிடையாது. இதனால், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் வறண்டு பாலைவனமாக காட்சியளிக்கிறது. முள்ளியாறு பாசன கடைமடைப்பகுதியான வேதாரண்யம் பகுதி வறண்டு கிடக்கிறது. பாசன தட்டுப்பாடு காலங்களில் வெண்ணாறு பாசன பகுதிக்கு தான் முன்னுரிமை கொடுக்கப்படும். தற்போதைய நிலையில் உயர் அதிகாரிகள் அனுபவம் இல்லாததால் வெண்ணாறு பாசனப்பகுதி புறக்கணிக்கப்படுகிறது.
இதனால் பல கிராமங்களில் நேரடி விதைப்பு செய்து முளைப்பதற்கு வாய்ப்பு இல்லாத நிலை தொடர்கிறது. பல இடங்களில் மழையிலே முளைத்த பயிர்கள் கருக தொடங்கிவிட்டது. இனி மேட்டூர் அணையில் உள்ள தண்ணீரை கொண்டு விவசாயத்தை பாதுகாக்க முடியுமா? என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது. நீர் நிர்வாகத்தில் வெளிப்படை தன்மை இல்லாமல் மூடி மறைக்கப்பட்டதால் மிகப்பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளோம்.
எனவே, காவிரி டெல்டா மாவட்ட ஆட்சியர்கள், விவசாயிகளோடு கலந்து பேசி சாகுபடி பணியை விரைவுபடுத்தி முடிப்பதற்கான வகையில் தண்ணீரை பங்கிட்டு கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் இன்னும் பத்து தினங்களுக்கு கூட மேட்டூர் அணையில் இருக்கிற தண்ணீரை பாசனத்திற்கு விடுவிக்க முடியாது. எனவே, முதலமைச்சர் தனி கவனம் செலுத்தி, பாசன பகுதிகளுக்கு தண்ணீரை கொண்டு சென்று நேரடி விதைப்பு பயிர்கள் முளைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
குறுவையை முற்றிலும் இழந்திருக்கிற விவசாயிகள் வருவாய் இல்லாமல் பரிதவிக்கிறார்கள். தற்போது சம்பா சாகுபடிக்கு மூலதனம் இல்லாமல் மிகப்பெரும் சிரமத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். எனவே, உடனடியாக குறுவைக்கு காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கு அவசர கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்றார். இந்த நிகழ்வின்போது நாகப்பட்டினம் மாவட்ட செயலாளர் கருணை நாதன், மாவட்ட கவுரவ தலைவர் நடராஜன், மாவட்டத் துணைச் செயலாளர் ரவி உள்ளிட்ட ஒன்றிய நிர்வாகிகள், விவசாயிகள் உடன் இருந்தனர்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.