Times of Puducherry
காட்டுமன்னார்கோவில் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ முருகுமாறன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அதிமுகவில் கோடிகளில் தவழ்பவர்களுக்கே மரியாதை என்றும், தலைமை சரியில்லை என்றும் அவர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் இன்னாள் எம்.எல்.ஏ-க்கள் தொடர்ந்து அதிமுகவில் இருந்து விலகி பிற இயக்கங்களில் இணைவது வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில் காட்டுமன்னார்கோவில் முன்னாள் எம்.எல்.ஏவான முருகுமாறன் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தனது X வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மிகுந்த மனவலியோடு விடுவித்து கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு நல்ல தலைவர் தான் தலைமையேற்றுள்ள இயக்கத்தின் அனைத்து தொண்டர்களையும் தாயன்பு கொண்டு அரவணைக்க வேண்டும். தலைவருக்கு துன்பம் என்றால் தொண்டர்கள் கண்ணீர் சிந்த வேண்டும். தொண்டர்களுக்கு துன்பம், துயரம் என்றால் தலைவரின் கரங்கள் கண்ணீர் துடைக்க வேண்டும். மாண்புமிகு அம்மா அவர்கள் மறைவிற்கு பின் மாற்று இயக்கத்தில் இருந்து கோடிகள் என்னை பலமுறை முத்தமிட்ட போது அவற்றை புறந்தள்ளி கொள்கை வழி நின்று கழகத்தின் மாண்பை காத்த உண்மையை தொண்டன் நான்.
“மதியாதார் வாசல் மிதியாதே” என்ற முதுமொழியை நெஞ்சில் நிறுத்துகிறேன். மாணவன் பருவம் முதல் நகமும் சதையுமாக உடலும் உயிருமாக பயணித்து பணியாற்றிய இப்பேரியக்கத்தில் இருந்து விலகி கொள்ள வேண்டிய சூழ்நிலையை தலைமை எனக்கு ஏற்படுத்திய நிலையை எண்ணி மனம் வலிக்கின்றது. “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னை வளர்த்த கட்சி” “நான் வளர்த்த கட்சி” என்ற நினைவுகள் என்றும் என் மனதில் நிலைத்து நிற்கும்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி அம்மா இவர்கள் கட்டிக் காத்த கழகம் இன்று தடம் மாறி இடம் மாறி செல்கின்றது. அன்று தேர்தல் களத்தில் வேட்பாளர்கள் தேர்வில், கழகத்திற்காக என்ன செய்தீர்கள் ? எத்தனை முறை சிறை சென்றீர்கள் ? உங்கள் வெற்றி வாய்ப்பு பற்றி சொல்லுங்கள் ? என்று கேள்வி கேட்ட தலைவர்கள் பயணித்த கழகம் இன்று எத்தனை கோடிகள் உள்ளது ? இத்தனை கோடிகள் வேண்டும் என்று கேட்கும் நிலைமைக்கு சென்று விட்டது. கொள்கை வழி நடந்த தலைவர்கள் கட்டிக்காத்த கழகம் இன்று கொள்கையை இழந்து கோடிகளில் தவழ்கின்றது.
கோடிகள் இருந்தாலே யார்வேண்டுமானாலும் வேட்பாளர்கள் ஆகலாம் கழகத்தின் மாவட்ட கழக செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகளாக ஆகலாம் என்ற நிலையில் இன்று கழகம் உள்ளது. உண்மையாக உழைத்தவர்கள் துரோகத்தால் வீழ்த்தப்படுகிறார்கள். எளியவர்களை, வரியவர்களை அரசியல் களத்தில் நிறுத்தி இந்தியாவில் மூன்றாவது பெரியக்கமாக உருவாக்கி புரட்சித் தலைவி அம்மா அவர்கள் நம்மிடையே ஒப்படைத்தார். இன்று கோடிகளை கொண்டவர்களே வேட்பாளர்கள் என தேர்வு செய்ததால் தமிழகத்தில் மூன்றாவது கட்சியாக கடை கோடியில் நமது கழகம் உள்ளது. ஒரு போரியக்கத்தின் தலைவர் எப்பொழுதும் தவறான முடிவின் பின்னே செல்கின்றார்” எனக் கூறியுள்ளார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.