Times of Puducherry
அரசு பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் வெற்றி பயணம் விரிவாக்கத் திட்டம் தொடங்கப்பட்டுள்ள நிலையில், எந்தெந்த பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணிக்க முடியும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
கடந்த திமுக ஆட்சியில் பெண்களுக்கு அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாத பயணத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது தவெக, இந்தத் திட்டம் மேலும் விரிவாக்கம் செய்யப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் இந்த பயணத் திட்டத்தை விரிவுபடுத்தப்பட்டு, “வெற்றிப் பயணம்” என்கிற பெயரில் அக்டோபர் 2 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த நிலையில் எந்த பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்க முடியும் என்று தமிழக அரசு அளித்துள்ள விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
இதுவரை தமிழ்நாட்டில் உள்ள ஏழு போக்குவரத்து கழகங்களில் மாநகர், நகர்ப்புற சாதாரணப் பேருந்துகள் மற்றும் மலைப்பகுதிகளில் 40 கிலோ மீட்டர் வரை மட்டுமே மகளிர் கட்டணமின்றி பயணம் செய்து வந்தனர். இந்தத் திட்டத்தை விரிவாக்கம் செய்து, அக் 2 முதல், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களால் இயக்கப்படும் மாநகர, நகர பகுதிகளில் இயங்கும் எக்ஸ்பிரஸ் (Express), LSS, டீலக்ஸ் அரசுப் பேருந்துகள் (Deluxe), புறநகர் சாதாரண பேருந்துகள் (Mofussil Ordinary) மற்றும் 40 கிலோமீட்டருக்கு மேற்பட்ட மலைப்பகுதி சாதாரண பேருந்துகள் (Ghat Ordinary) ஆகியவற்றிற்கும் விரிவுபடுத்தப்பட்டு மொத்தமாக 12,695 பேருந்துகளில் மகளிர் கட்டணம் இல்லாமல் பயணம் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் 7 அரசு போக்குவரத்து கழகங்களில் 12,695 பேருந்துகள் வெற்றிப் பயணத் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு 1,68,500 நடைகள் இயக்கப்படும். இதன் மூலம் நாளொன்றுக்கு 84.32 லட்சம் மகளிர்கள் பயன்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தால் தமிழ்நாடு முழுவதும் மகளிருக்கு, எளிதில் அணுக கூடிய பொது போக்குவரத்து வசதி பெருமளவில் கிடைக்கும். மாணவிகள் தொலைதூரத்தில் உள்ள கல்லூரிகளுக்கு செல்லவும், மகளிர் மட்டும் திருநர்கள் தங்கள் பணியிடங்களுக்கு செல்லவும், மருத்துவம் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு கட்டணமின்றி பேருந்துகளில் பயணிக்க இயலும்.
மாநிலத்தில் செங்கல்பட்டு, திருப்பூர் மாவட்டங்களில் தற்போது தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை கருத்தில் கொண்டு தேர்தல் நடைமுறைகள் நிறைவடையும்வரை இரண்டு மாவட்டங்களிலும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.