Times of Puducherry
தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரைச் செயலாளராக இருந்து வரும் நாஞ்சில் சம்பத், திடீரென தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். இதனால் அவர் தவெகவில் இருந்து விரைவில் விலகக்கூடும் என விமர்சனங்கள் எழுந்துள்ளது.
தமிழக அரசியல் களத்தில் இவரைத் தெரியாத ஆளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைவரிடமும் பரிட்சயமாக இருப்பவர் நாஞ்சில் சம்பத். 1993 ஆம் ஆண்டு வைகோ மதிமுகவை தொடங்கிய போது திமுகவிலிருந்து பிரிந்து வைகோவுடன் சென்ற அவர், வைகோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2011 ஆம் ஆண்டு மதிமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். ஜெயலலிதா அவருக்கு கொள்கை பரப்பு துணை செயலாளர் பதவியும் வழங்கினார்.
அதிமுக பிளவுபட்டபோது டிடிவி தினகரனுடன் இணைந்து அமமுகவில் பயணித்து வந்த அவர், தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடல் கட்சியிலிருந்து வெளியேறி திராவிட இயக்க பேச்சாளராக வலம் வந்தார். திமுக சார்பில் நடத்தப்படும் பொதுக்கூட்டங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு திமுகவிற்கு ஆதரவாக பேசி வந்தார். இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அங்கு நாஞ்சில் சம்பத்திற்கு தவெக பரப்புரை செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து தவெக தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.
இந்த நிலையில் இன்று தனது எக்ஸ் பக்கத்தில் நாஞ்சில் சம்பத், “போனால் போகட்டும் போடா.. இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா.. என்னுடைய பகலை யவரும் இருட்டாக்க முடியாது.. என்னுடைய வெளிச்சத்தை யாரும் அணைக்க முடியாது.. என்னுடைய காற்றை யாரும் வழிமறிக்க முடியாது..” என பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் பேசு பொருளாகி வருகிறது.
நாஞ்சில் சம்பத் ஏற்கனவே மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அவரது மகன் துரை வைகோவை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்து வருகிறார். வைகோ மற்றும் துரை வைகோ இருவரும் தவெக கூட்டணியில் இணைந்திருப்பதால் நாஞ்சில் சம்பத் ஓரம் கட்டப்படுகிறார் என்கிற பேச்சு எழுந்துள்ளது. எனவே தவெக மீதான அதிருப்தியை நாஞ்சில் இந்த பதிவு மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார் என்று சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.