Times of Puducherry

சுங்கச்சாவடிகளில் நடப்பது, கட்டண வசூலா? கட்டாய வழிப்பறியா?   வேல்முருகன் கேள்வி

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
8 Oct 2026 • 3:17 PM
toll-gate-fees-violation-condemns-velmurugan

தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் என்ற பெயரில் பகல்கொள்ளை நடப்பதை எதிர்த்துத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி பல ஆண்டுகளாக மக்கள் மன்றத்திலும், சட்டமன்றத்திலும் சமரசமின்றிப் போர்க்குரல் எழுப்பி வருகிறது.

உளுந்தூர்பேட்டை, விக்கிரவாண்டி உள்ளிட்ட சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்டு, கைதும் சிறைவாசமும் கண்டு, மக்களுக்காகக் களத்தில் நின்ற இயக்கம் தமிழக வாழ்வுரிமைக் கட்சி.

சட்டமன்றத்தில் விக்கிரவாண்டி உள்ளிட்ட சுங்கச்சாவடிகளின் அத்துமீறல்களைப் புட்டுப்புட்டு வைத்து, “காலாவதியான சுங்கச்சாவடிகளை இழுத்து மூடு” என்று நாம் முழங்கியபோது செவிசாய்க்காத ஒன்றிய பாஜக அரசுக்கு, இப்போது சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை சம்மட்டி அடி கொடுத்துக் கேள்வி எழுப்பியுள்ளது.

சாலைகள் குண்டும் குழியுமாகக் கிடக்கின்றன. பாலங்கள் பாழடைந்து கிடக்கின்றன. ஆனால் கட்டண வசூல் மட்டும் தங்குதடையின்றி நடப்பது ஏன்? உங்களை எவனும் கேள்வி கேட்க முடியாது என்ற கொழுப்பிலா இப்படிச் செயல்படுகிறீர்கள்? என்று நீதிமன்றம் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒன்றிய அரசை நோக்கிக் கேள்வி எழுப்பியிருக்கிறது.

நீதிமன்றம் கன்னத்தில் அறைந்தாற்போல் எழுப்பியுள்ள இந்தக் கேள்விகளைத்தான், தமிழக வாழ்வுரிமைக் கட்சி பல ஆண்டுகளாகக் கேட்டு வருகிறது. இப்போது ஒன்றிய அரசிடம் நாங்கள் நேரடியாகக் கேட்கிறோம்.

போட்ட முதலை வட்டியும் முதலுமாகப் பல மடங்கு எடுத்து ஏப்பம் விட்ட பிறகும், சுங்கச்சாவடி என்ற பெயரில் இன்னும் எதற்காக மக்கள் பாக்கெட்டில் கையை விடுகிறீர்கள்? இது வழிப்பறி கொள்ளை இல்லையா?

குண்டும் குழியுமான மரணப் பொறிகளில் மக்களை உயிரைப் பறிப்பதற்குப் பெயர்தான் சேவையா? கட்டணம் மட்டும் முழுசாக வேண்டும், சாலைப் பாதுகாப்பு எக்கேடு கெட்டால் என்ன என்கிற திமிரா? அல்லது கேட்க நாதியில்லை என்ற அகம்பாவமா?

ஒப்பந்தக் காலம் முடிந்துவிட்டது என்று மாநில அரசே பட்டவர்த்தனமாக அறிவித்த சுங்கச்சாவடிகளை, இன்னும் யாருடைய கமிஷனுக்காக, எந்தத் தனியார் கார்ப்பரேட்டின் இலாபத்திற்காக அனுமதியளித்து இயக்கிக் கொண்டிருக்கிறீர்கள்?

2023-ஆம் ஆண்டு விதியைக் காட்டி வசூலை நீட்டிக்கிறோம் என்று புளுகுகிறீர்களே, எடக்குமடக்காகத் திருத்தப்பட்ட அந்த இருட்டு விதிகளையும் ரகசிய ஒப்பந்தங்களையும் மக்கள் மன்றத்தில் வெளியிட உங்களுக்குத் துணிவு இருக்கிறதா?

60 கிலோமீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி என்ற விதியை உங்கள் சொந்தக் காலடியிலேயே போட்டு மிதித்துவிட்டு, ஊருக்கு ஊர் சுங்கச்சாவடி வைத்து மக்களிடம் ரத்தம் உறிஞ்சுவது எந்த வகையில் நியாயம்?

ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசும் பூச்சாண்டி காட்டி ஒருவரையொருவர் கைகாட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். தமிழ்நாட்டில் இயங்கும் ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் இதுவரை கொள்ளையடிக்கப்பட்ட தொகை எவ்வளவு? இன்னும் எத்தனை காலத்திற்கு இந்த அராஜக வசூல் தொடரும்? என்பதை உள்ளடக்கிய வெள்ளை அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும்.

சாலைகளில் மக்கள் பயணிப்பதற்காக, எந்த வகையிலும் மக்களிடம் வரி வசூல் செய்யக்கூடாது என்பதுதான் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிலைப்பாடு. மக்களின் நிலைப்பாடும் அதுதான்.

ஆகவே, காலாவதியான அத்தனை சுங்கச்சாவடிகளையும் உடனடியாக உடைத்தெறிந்து மூட வேண்டும். மக்கள் மீது திணிக்கப்படும் அநியாயக் கட்டணக் கொள்ளையை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையேல், நீதிமன்றக் கண்டனத்தோடு மக்கள் மன்றத்தின் கடுமையான போராட்டங்களையும் ஒன்றிய அரசு சந்திக்க நேரிடும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் எச்சரிக்கிறேன்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top