Times of Puducherry

தள்ளுபடி செய்யப்பட்ட மாணவர்களின் கல்விக் கடனை திரும்பச் செலுத்தக் கோரி நோட்டீஸ் அனுப்புவதா - சிவா கண்டனம்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
8 Oct 2026 • 3:05 PM
dmk siva-condemns-nrc-for-repayment-of- waived fee

புதுச்சேரி அரசின் பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டுக் கழகத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட கல்விக்கடனை வட்டியுடன் திருப்பிச் செலுத்தக் கூறி ரகசியமாகப் பெற்றோர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளதை கண்டித்துள்ள திமுக அமைப்பாளர் இரா. சிவா, மாணவர்களுக்கு அனுப்பப்பட்ட நோட்டீசை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது: –

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையின மக்களின் பொருளாதார மற்றும் கல்வி நிலையை மேம்படுத்துவதற்காக புதுச்சேரி அரசு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மேம்பாட்டுக் கழகம் துவங்கப்பட்டது. இலாப நோக்கமற்ற அரசு நிறுவனமாக பதியப்பட்டுள்ள இந்நிறுவனத்தில் சுயதொழில் துவங்க, சிறுவணிகங்களை மேம்படுத்த குறைந்த வட்டி விகிதத்தில் நிதியுதவிகள் மற்றும் கல்விக் கடன்கள் வழங்கப்பட்டன. இப்படி வழங்கப்படும் நிதியுதவி மற்றும் கடன்களுக்கு தேவையான நிதி ஆதாரம் ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் தேசிய நிதிக்கழகங்கள் வாயிலாக சுழற்சி முறையில் பெறப்படுகிறது. அப்படி பெறப்படும் நிதியை மாநில அரசாங்கம் தகுந்த நேரத்தில் திருப்பிக் கொடுத்து நிதி ஆதாரத்தை பெற்று வந்தால் மட்டுமே கழகம் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையின மக்களின் பொருளாதார மற்றும் கல்வி நிலையை மேம்படுத்த முடியும். மேலும் கல்விக் கடன்கள் மாநில அரசால் ரத்து செய்யப்படும் என்று அறிவித்தால் கூட அதற்கான அசல் மற்றும் வட்டியை அரசு கழகத்திற்கு செலுத்த வேண்டும். அப்போது தான் மேம்பாட்டு கழகத்திற்கு நிதி தடையின்றி கிடைக்கும்.

அந்த வகையில் 2021ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற முதல்வர் ரங்கசாமி அவர்கள் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் முன்வைத்து கோரிக்கையை ஏற்று பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டுக் கழகத்தில் பல்வேறு நிலைகளில் கல்விக் கடன் பெற்ற 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்து, அதற்கான ரூ. 15 கோடி கடன் மற்றும் வட்டித் தொகையை தேசிய நிதிக் கழகத்திற்கு அரசு செலுத்தும் என்று கூறி அரசாணையும் வெளியிடப்பட்டது. இதனால் கல்விக்கடன் பெற்றவர்கள், அவர்களுக்கு ஜாமீன் போட்டவர்கள் எல்லாம் நிம்மதி அடைந்தனர்.

இந்நிலையில் 2013–14ம் ஆண்டு மாணவர்கள் வாங்கிய கல்விக் கடனைத் வட்டியுடன் கணக்கிட்டு 15 நாட்களுக்குள் கட்ட வேண்டும் என்று மேம்பாட்டுக் கழகம் நோட்டீஸ் அனுப்பி இருப்பது பெற்றோர்களுக்கு பெரும் மன உளைச்சலையும், பொருளாதார நெருக்கடியையும் ஏறுபடுத்தி உள்ளது. இது அச்சமூக மக்களுக்கு புதுச்சேரி அரசு இழைத்துள்ள மிகப் பெரிய அநீதியாகும். எந்த அளவுக்கு இந்த பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் அரசு பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் அலட்சியம் காட்டுகிறது என்பதையே இச்சம்பவம் சுட்டிக்காட்டுகிறது.

சட்டமன்றத்தில் ஒரு கொள்கை முடிவாக அறிவிக்கப்பட்டு, மக்கள் மத்தியில் நற்பெயர் வாங்குவதற்காக விளம்பரம் தேடிக் கொண்ட முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அரசு, அதற்கு தேவையான நிதி ஒதுக்கீட்டை செய்யாமல் தவறியது ஏன்?, முதல்வரின் அறிவிப்புக்கு துறை சார்ந்த கழகங்கள் மதிப்பு அளிக்கவில்லையா?, அல்லது மக்களை ஏமாற்றுவதற்காக சட்டமன்றத்தில் வாக்குறுதி அளிக்கப்பட்டதா? என்ற கேள்வி தற்போது நோட்டீசை கண்டு எழுகிறது.

படித்த இளைஞர்களுக்கு உதவித் தொகை கொடுப்பதாகச் சொன்னதை செய்யாமல் அரசு ஏமாற்றுவதை எண்ணியும், படிப்பு முடிந்து இன்னும் முறையான வேலைவாயப்பு கிடைக்காமலும், தங்களது வாழ்வாதாரத்தைத் தேடிக் கொண்டிருக்கும் ஏழை மாணவர்களின் தலையில் தள்ளுபடி செய்த கடனை மீண்டும் வட்டியோடு கட்டுமாறு நோட்டீஸ் அனுப்பி அவர்கள் மீது சுமையைத் திணிப்பது எந்த விதத்தில் நியாயம்?. இத்தகைய நடவடிக்கைகள் மாணவர்களின் எதிர்காலத்தையும், அவர்களது குடும்பங்களின் வாழ்வாதாரத்தையும் மிக கடுமையாக பாதிக்கும் என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டாமா?.

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின மாணவர்களை ஏமாற்ற நினைக்கும் இந்த இரட்டை வேடப் போக்கை புதுச்சேரி அரசு உடனடியாக கைவிட வேண்டும். மாணவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அனைத்து நோட்டீஸ்களையும் திரும்பப் பெற வேண்டும். முதல்வர் சட்டமன்றத்தில் அறிவித்தபடி பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மேம்பாட்டுக் கழகத்திற்கு தேவையான நிதியை அரசே நேரடியாகச் செலுத்தி, மாணவர்களின் கல்விக் கடன்களை முழுமையாக ரத்து செய்ய உரிய அரசாணையை உடனே வெளியிட வேண்டும். இல்லையேல் பாதிக்கப்பட்ட மாணவர்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்த வேண்டி இருக்கும் என்பதை இந்த அரசுக்கு எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறேன்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top