Times of Puducherry
புதுச்சேரி பிரெஞ்சு நிறுவனத்தில் ‘தமிழ் காமிக்ஸ் மற்றும் காட்சிப் பண்பாடு’ குறித்த கருத்தரங்கம்.
புதுச்சேரி பிரெஞ்சு நிறுவனத்தில் (French Institute of Pondicherry) ‘தமிழ் காமிக்ஸும் காட்சிப் பண்பாடும்’ (Tamil Comics and Visual Cultures) என்ற தலைப்பிலான சிறப்புக் கலந்துரையாடல் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ் சித்திரக் கதைகளின் (Comics) வரலாற்றுச் சிறப்புகள், பதிப்புத்துறை சவால்கள் மற்றும் அதன் எதிர்கால சாத்தியக்கூறுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
எழுத்தாளரும் ஆய்வாளருமான கண்ணன் முத்துகிருஷ்ணன் இந்நிகழ்வை ஒருங்கிணைத்து வழிநடத்தினார். வகம் காமிக்ஸ் பதிப்பாளர் கலீல், தமிழ் சித்திரக் கதைகள் குறித்து முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்ட முனைவர் பிரபாவதி, சித்திரக் கதைக்கலைஞரும் ஆய்வாளருமான செந்தில் செல்வம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்றுத் தங்கள் கள அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
நிகழ்வில் முனைவர் பிரபாவதி பேசுகையில், “1950-களிலிருந்து தொடக்கக்காலச் சிறுவர் இதழ்கள் முதல் ‘முத்து காமிக்ஸ்’, ‘லயன் காமிக்ஸ்’ வரையிலான தமிழ் சித்திரக் கதைகள் சமூக-பண்பாட்டு மாற்றங்களைப் பிரதிபலிக்கும் முதன்மை ஆவணமாகத் திகழ்கின்றன. இவற்றை வெறும் பொழுதுபோக்காகக் கடந்து செல்லாமல், தீவிர இலக்கியப் படைப்புகளாகக் கருதி ஆய்வு செய்ய வேண்டும்” என்றார்.
வகம் காமிக்ஸ் பதிப்பாளர் கலீல் பேசுகையில், தற்போதைய டிஜிட்டல் சூழலில் அச்சுப் பதிப்பகத்தை நடத்திச் செல்வதில் உள்ள சவால்கள், சர்வதேசச் சித்திரக் கதைகளின் தமிழாக்கங்கள் மற்றும் புதிய தலைமுறைப் படைப்பாளர்களை உருவாக்குவது குறித்து விளக்கிப் பேசினார். அழிவின் விளிம்பில் உள்ள இத்துறையை அரசின் முயற்சியோடு காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
சித்திரக் கதைக்கலைஞர் செந்தில் செல்வம் பேசுகையில், காமிக்ஸ் பக்கங்களின் சட்டமைப்பு (Panel Layout) மற்றும் கதாபாத்திர வடிவமைப்பின் நுட்பங்களை விவரித்தார். மேலும், 1950-கள் முதல் பணியாற்றிய முன்னோடித் தமிழ் சித்திரக் கலைஞர்களின் பங்களிப்புகளை முறைப்படி ஆவணப்படுத்தவும், அரிதான பழைய காமிக்ஸ் இதழ்களைப் பாதுகாக்கவும் உடனடி நடவடிக்கைகள் தேவை என வலியுறுத்தினார். இந்நிகழ்வில் 1950 முதல் பிரசுரிக்கப்பட்ட அரிய காமிக்ஸ் நூல்களின் கண்காட்சி பார்வையர்கள் மற்றும் வாசகர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது. இந்நிகழ்வில் புதுச்சேரியைச் சேர்ந்த எழுத்தாளர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் காட்சிப் பதிவுக் கலைஞர்கள் பலர் கலந்துகொண்டனர்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.