Times of Puducherry
வரும் தேர்தலில் இந்திய பிரதமராக ராகுல் காந்தி 100% பொறுப்பேற்பார் என்பது நாட்டின் ஒட்டுமொத்த உணர்வாக உள்ளது என தெலுங்கானா எம்பி மல்லு ரவி திருச்சியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இது குறித்த விபரம் வருமாறு:
நாட்டின் ஜனநாயக அமைப்புகளையும், குடிமக்களின் வாக்குரிமையையும் பாதுகாக்கும் நோக்கத்துடன் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நாடு முழுவதும் ‘வாக்கைக் காப்போம், நாட்டைக் காப்போம்’ என்ற தீவிர பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு, திருச்சி மெயின்கார்டு கேட் பகுதியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில், பிரச்சாரப் பொறுப்பாளர்களான தெலுங்கானா மாநில நாடாளுமன்ற உறுப்பினர் மல்லு ரவி மற்றும் முன்னாள் எம்பி திருநாவுக்கரசர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மல்லு ரவி எம்பி பேசுகையில்:
தமிழகத்தில் அமைந்துள்ள புதிய கூட்டணி அரசில் காங்கிரஸ் கட்சி பங்கேற்றுள்ளதற்கு தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் முன்னோடியாக திகழ்ந்த பெருந்தலைவர் காமராஜரின் ஆட்சிப் பாதையை பின்பற்றி, ஏழை எளிய மக்களின் நலன்களுக்காக இந்த அரசு பாடுபட வேண்டும்.
பாஜக தலைமையிலான மத்திய அரசு, சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற முறையை தவறாக பயன்படுத்தி தேர்தலில் வெற்றி பெற்று வருகிறது. 2018-ல் மத்திய பிரதேச தேர்தலில் 18 லட்சத்திற்கும் அதிகமான போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதை ராகுல் காந்தி ஆதாரத்துடன் சுட்டிக்காட்டி நீக்கிய பின்னரே, அங்கு காங்கிரஸ் வெற்றி பெற முடிந்தது.
தலைமைத் தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுக்கும் குழுவில் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் இந்திய தலைமை நீதிபதி ஆகியோர் இடம் பெற்றிருந்த முறையை பாஜக அரசு திடீரென மாற்றியது. தலைமை நீதிபதியை நீக்கிவிட்டு, பிரதமரால் நியமிக்கப்படும் மத்திய அமைச்சரை சேர்த்ததன் மூலம் தேர்தல் ஆணையத்தை தனது கட்டுப்பாட்டில் பாஜக கொண்டு வந்துள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், மற்ற இரு ஆணையர்களின் ஆலோசனைகளையும் கேட்காமல் தன்னிச்சையாக முடிவுகளை எடுத்து பாஜகவிற்கு சாதகமாக செயல்படுகிறார் என்று சமீபத்திய செய்திகள் மூலம் அம்பலமாகியுள்ளது.
இந்த SIR நடவடிக்கை மூலம் நாடு முழுவதும் இதுவரை சுமார் 13 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை விரைவில் 20 கோடியாக உயரக்கூடும். குறிப்பாக பட்டியல் இனத்தவர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் பெயர்களே அதிகளவில் நீக்கப்படுகின்றன. இதன் மூலம், வாக்குரிமை உள்ளவர்கள் மற்றும் வாக்குரிமை அற்றவர்கள் என இரு வேறு பிரிவினரை நரேந்திர மோடி உருவாக்கி வருகிறார்.
இந்த விவகாரத்தை கண்டித்து ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் போராட்டம் நடத்தியபோது காவல் துறையால் தவறாக நடத்தப்பட்டனர். உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான மனு அளிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் இப்போராட்டம் காங்கிரஸ் கட்சிக்கானது அல்ல; இந்திய நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கானது.
தவறுதலாக செயல்படும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாக பதவி விலக வேண்டும். அவர் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த விவகாரத்தை கிராமப் புறங்கள் வரை கொண்டு செல்லும் வகையில், அனைத்து மண்டலங்களிலும் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு விளக்க கூட்டங்கள் நடத்தப்படும்.
அடுத்த பிரதமராக ராகுல் காந்தி நிச்சயமாகப் பொறுப்பேற்பார். இது ஒட்டுமொத்த இந்திய மக்களின் உணர்வாக உள்ளது. ராகுல் காந்தி 4,000 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரம் பாரத் ஜோடோ யாத்திரையை மேற்கொண்டார். அதனை தொடர்ந்து பாரத் ஜோடோ நியாய யாத்திரையையும் நடத்தினார். கடந்த 8 ஆண்டுகளாக மக்களுக்காக தொடர்ந்து உண்மையாகப் போராடி வருகிறார்.
அவர் காங்கிரஸ் கட்சிக்காக மட்டும் போராடவில்லை; மக்களின் உரிமைகளுக்காகப் போராடி வருகிறார். எனவே, காங்கிரஸ் கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள பலரும் ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்று விரும்புகின்றனர்.
காவிரி நீர் விவகாரம் என்பது ஒரு மாநில அளவிலான உணர்வுபூர்வமான பிரச்சனை. அகில இந்திய அளவில் செயல்படும் தலைவராக, அந்த விவகாரத்தை முழுமையாக படித்து புரிந்துகொண்ட பிறகு கருத்து தெரிவிப்பேன் என தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின்போது மாமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் மாவட்ட தலைவர் ரெக்ஸ் உள்பட முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.