Times of Puducherry

உலகின் மிகப்பெரிய சிவலிங்கமான கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஷ்வரருக்கு 1975 கிலோ அரிசி கொண்டு அன்னாபிஷேகம்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
25 Oct 2026 • 6:04 PM
annabishekem-observed-in-bragadeshwara-temple-with-1975kg-boild-rice-tangore

உலகிலேயே மிகப்பெரிய சிவலிங்கம் என, போற்றப்படும், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரருக்கு, ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு இன்று அன்னாபிஷேகம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சிவ வழிபாடு செய்தனர்.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ளது, கங்கைகொண்ட சோழபுரம். 11ம் நூற்றாண்டு முதல், 14ம் நூற்றாண்டு வரை, கடல் கடந்து பரந்து விரிந்திருந்த, சோழ பேரரசின் தலைநகராக விளங்கியது.

உலகின் மிகப்பெரிய சிவலிங்கமான கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஷ்வரருக்கு 1975 கிலோ அரிசி கொண்டு அன்னாபிஷேகம்

தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டிய, மாமன்னன் ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழன், தனது ஆட்சி காலத்தில் (கி.பி. 1012-1044), கங்கை கரை வரை படையெடுத்து சென்று, வடபுலத்து மன்னர்களை வெற்றி கொண்டதன் அடையாளமாக, கங்கைகொண்ட சோழபுரம் என்ற புதிய நகரை உருவாக்கி, அங்கு தஞ்சாவூர் பெரிய கோயில் வடிவமைப்புடன் கூடிய, பிரகதீஸ்வரர் கோவிலை கட்டினார்.

இக்கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள, 13.5 அடி உயரமும், 60 அடி சுற்றளவும் கொண்ட, சிவலிங்கம் தான், உலகிலேயே மிகப்பெரிய சிவலிங்கம் என, போற்றி வணங்கப்படுகிறது. வேறு எந்த கோவிலிலும் இல்லாத வகையில், கங்கைகொண்ட சோழபுரம் கோவில் கருவறை சுவரில் பதிக்கப்பட்டுள்ள சந்திரகாந்த கல், வெயில் காலத்தில் குளிர்ச்சியையும், மழை மற்றும் குளிர் காலத்தில் இதமான வெப்பத்தையும் வெளியிட்டு கொண்டிருக்கிறது.

ஐ.நா., சபையின், “யுனெஸ்கோ அமைப்பால், உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வரும் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில், தொன்றுதொட்டு ஐப்பசி மாத பவுர்ணமி நாளில் அன்னாபிஷேகம் நடைபெறும். அதன்படி, இன்று 1975 கிலோ  அரிசியை கொண்டு, கோவில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில், சாதம் வடிக்கப்பட்டது.

காலை, 10:00 மணிக்கு துவங்கி, பிரமாண்டமான பாய்லர்களில் வடிக்கப்பட்ட சாதம் முழுவதும், பிரகதீஸ்வரருக்கு சாத்தப்பட்டது. சுவாமிக்கு மலர் மற்றும் பழங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை செய்யப்பட்டது. பல்லாயிரக்கணக்கான   பக்தர்கள் கலந்து கொண்டு அன்னாபிஷேகத்தை தரிசனம் செய்தனர்.

இதேபோல் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், திருவானைக்கோவில் ஜம்புகேஸ்வரர் உடனுறை அகிலாண்டேஸ்வரி திருக்கோயில், திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் திருக்கோயில் என தமிழகத்தில் உள்ள பல்வேறு சிவாலயங்களில் இன்று காலை முதல் ஐப்பசி அன்னாபிஷேகம் நடைபெற்று வந்தாலும், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரருக்கு நடைபெறும் அன்னாபிஷேகம் பிரசித்தி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top