Times of Puducherry
நாட்டில் சாகுபடி பரப்பளவு வெறும் 1.2 சதவிகிதம் முதல் 2 சதவிகிதம் வரை மட்டுமே சரிந்துள்ளது என்று கூறி, ஒட்டுமொத்த வேளாண் நெருக்கடியையும் மூடிமறைத்து நாடகமாடப் பார்க்கிறது மக்கள் விரோத மோடி-அமித் ஷா அரசு என காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத அளவில், நீண்டகால சராசரியை (LPA) விட 15 சதவிகித பருவமழை பற்றாக்குறை ஏற்பட்டு, நாட்டின் 734 மாவட்டங்களில் 48 சதவிகித மாவட்டங்கள் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளன. நாடு முழுவதும் பெறப்பட்ட 699.6 மிமீ மழையானது இயல்பான அளவை விட (822 மிமீ) மிகக் குறைவு. பஞ்சாப், அரியானா, ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு போன்ற முன்னணி நெல் உற்பத்தி மாநிலங்கள் 21 சதவிகிதம் முதல் 43 சதவிகிதம் வரை கொடிய மழைப் பற்றாக்குறையைச் சந்தித்துள்ளன. கடந்த 26 ஆண்டு கால வரலாற்றில், மழைப் பற்றாக்குறை நிலவிய 8 ஆண்டுகளில் காரிப் சாகுபடி பரப்பு சராசரியாக 0.9 சதவிகிதம் மட்டுமே சரிந்திருக்கிறது. எல் நினோ ஆண்டுகளிலும்கூட 1.9 சதவிகிதம் மட்டுமே குறைந்திருக்கிறது. சாகுபடி பரப்பில் பெரிய மாற்றம் தெரியாது என்பது தெரிந்திருந்தும், கள எதார்த்தத்தை மறைத்து விவசாயிகள் வயிற்றில் அடிக்கத் துடிப்பதுதான் இந்த பா.ஜ.க. அரசின் ‘விவசாயத் துரோக’ சாதனை.
உண்மையில் காரிப் பயிர் விளைச்சல் கடுமையான மழைப் பற்றாக்குறை ஆண்டுகளில் சராசரியாக 6.5 சதவிகிதம் சரிவடைகிறது. அதுவே எல் நினோ ஆண்டுகளில் 8.4 சதவிகிதம் வரை படுபாதாளத்திற்குச் செல்கிறது. வழக்கமான ஆண்டுகளில் 4 சதவிகிதம் முதல் 6 சதவிகிதம் வரை உயர வேண்டிய பயிர் விளைச்சல், இன்று கடுமையான நீர் பற்றாக்குறையாலும் வெப்ப அலைகளாலும் பாழாகிக் கிடக்கிறது. இதனால் காரிப் உற்பத்தி மழைப் பற்றாக்குறை ஆண்டுகளில் 7 சதவிகிதம் முதல் 7.2 சதவிகிதம் வரை சரிவதோடு, எல் நினோ காலகட்டத்தில் 10 சதவிகிதம் வரை பேரழிவைச் சந்திக்கிறது. நெல் சாகுபடி பரப்பு 3.7 சதவிகிதம் குறைந்துள்ள நிலையில், நெல் உற்பத்தி 10 மில்லியன் டன்னுக்கு மேல் படுவீழ்ச்சியடையும் அபாயம் உருவாகியுள்ளது.
அன்று 2002-ல் வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில் ஏற்பட்ட வறட்சியின் போது, காரிப் உணவு தானிய உற்பத்தி 22.2 சதவிகிதம், நெல் 21.7 சதவிகிதம், பயறு வகைகள் 14.2 சதவிகிதம், எண்ணெய் வித்துக்கள் 32.1 சதவிகிதம் சரிந்த வரலாற்றுப் பாடத்தை இப்போதுள்ள மோடி அரசு முற்றிலுமாக மறந்துவிட்டது. அன்று முதல் இன்று மோடி வரை பா.ஜ.க. ஆட்சியில் விவசாயிகள் வஞ்சிக்கப்படுவதே வாடிக்கையாகிவிட்டது.
கார்ப்பரேட் முதலாளிகளின் கோடிக்கணக்கான கடன்களை அள்ளித் தள்ளுபடி செய்யும் மோடி-அமித் ஷா கூட்டணி, இந்த கொடூரப் பயிர் இழப்பால் தவிக்கும் விவசாயிகளுக்கு என்ன நிவாரணம் தந்தது ?
நாட்டின் 178 முக்கிய நீர்த்தேக்கங்களில் ஒட்டுமொத்த நீர் இருப்பு வெறும் 68.6 சதவிகிதம் (126.7 BCM) மட்டுமே உள்ளது. இது கடந்த ஆண்டின் நீர் இருப்பை விட 24 சதவிகிதம் குறைவு. இதில் 39 சதவிகித நீர்த்தேக்கங்கள் மட்டுமே 80 சதவிகித கொள்ளளவைக் கொண்டுள்ளன. குறிப்பாக தென் மாநிலங்களில் உள்ள 50 முக்கிய அணைகளில் நீர் இருப்பு வெறும் 44.3 சதவிகிதமாகவும் (24.8 BCM), வட மாநிலங்களில் 57.5 சதவிகிதமாகவும் அபாயகரமான அளவுக்குச் சரிந்துள்ளதால், வரவிருக்கும் ரபி (Rabi) பருவ சாகுபடியும், 178 மில்லியன் டன் இலக்கும் முற்றிலும் கேள்விக்குறியாகிவிட்டது. மேலும் 2027 ஜூன் வரை குடிநீர் தட்டுப்பாடும் பூதாகரமாக வெடிக்கும் அபாயம் சூழ்ந்துள்ளது. இன்றும் நெல் சாகுபடி பரப்பில் 70 சதவிகிதம் மட்டுமே நீர்ப்பாசன வசதி பெறுகிறது. பருப்பு வகைகளோ வெறும் 35 சதவிகித பாசன வசதியுடன் வானம் பார்த்த பூமியாகவே தத்தளிக்கிறது.
விளைச்சல் வீழ்ச்சி ஒருபுறமிருக்க, வழக்கமான ஆண்டுகளில் 4 சதவிகிதம் முதல் 5 சதவிகிதம் வரை உயரும் நாட்டின் ஒட்டுமொத்த வேளாண் மதிப்பு, மழைப் பற்றாக்குறை காலங்களில் 0.3 சதவிகித சரிவையும், எல் நினோ காலத்தில் 1 சதவிகித வீழ்ச்சியையும் சந்திக்கிறது. இதையெல்லாம் விடக் கொடுமை என்னவென்றால், கிராமப்புற உழைப்பாளர்களின் ஊதிய வளர்ச்சி வழக்கமான 1.8 சதவிகிதம் என்பதிலிருந்து சுருங்கி, எல் நினோ ஆண்டுகளில் 0.9 சதவிகிதமாகவும், மழைப் பற்றாக்குறை காலங்களில் வெறும் 0.5 சதவிகிதமாகவும் முடங்கிப் போயுள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில் விவசாயக் கூலி வளர்ச்சி வெறும் 0.3 சதவிகிதம் மட்டுமே. கிராமப்புற உழைப்பாளர்களின் கூலியை அழித்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைச் சீரழித்து, ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் படுகுழியில் தள்ளிவிட்ட மோடி-அமித் ஷா அரசே, வெற்றுப் புள்ளிவிவர மாயைகளை நிறுத்திவிட்டு, உடனடியாக முழுமையான வறட்சி நிவாரணத்தையும், விவசாயிகளுக்கான நேரடி நிதி இழப்பீட்டையும் போர்க்கால அடிப்படையில் வழங்கிட வேண்டும்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.