Times of Puducherry
புதுச்சேரி அமைச்சராக பொறுப்பு வகிக்கும் மல்லாடி கிருஷ்ணராவ் ஒரு சமுதாய மக்களை தூண்டிவிட்டு சட்டசபை வளாகத்தில் போராட்டம் நடத்தியிருப்பது புதுச்சேரி சட்டமன்ற வரலாற்றில் இதுவரை இல்லாத நிகழ்வாக உள்ளது. இதற்கு முதலமைச்சரும் சபாநாயகரும் ஒரு முடிவு எடுக்க வேண்டும் என உருளையான் பேட்டை தொகுதி எம்எல்ஏ நேரு முதல்வர் மற்றும் தற்காலிக சபாநாயகருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட பெரிய மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்யும் ஒரு பெண் அதிகாலைவேளை தனது வயிற்று பிழைப்புக்காக வியாபாரம் செய்வதற்கு செல்லும்போது பாரதி வீதி அருகில் வந்தபோது அவரை உயிர்பயத்தை காட்டி மிரட்டி சீரழித்து நிர்வாணமாக வீதியில் ஓடவிட்டுள்ளான். இந்த கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு அரசாங்கத்தால் எந்த நிவாரணமும், உதவியும் இதுநாள் வரை கிடைக்கவில்லை என்று தெரிகிறது.
இது சம்பந்தமாக காவல்துறை எந்தவொரு தகவலும் வெளிஉலகத்திற்கு தெரியப்படுத்தாமல் அதை மூடி மறைக்கும் விதமாக இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் யார் என்று வெளிகாட்டாமல் மூடி மறைத்து அவரை கைது செய்து சிறையில் அடைத்து இருப்பதாக தெரிகிறது.
இந்த நிகழ்வு எனது தொகுதிக்குட்பட்ட பெரிய மார்க்கெட் பகுதியில் வியாபாரம் செய்யும் வியாபார பெருமக்களையும், அப்பகுதி பொதுமக்களையும் பெரும் அச்சத்தையும், பீதியையும் இச்சம்பவம் ஏற்படுத்தியது. இந்த சம்பவம் சம்பந்தமாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் பொதுமக்கள் என்னிடம் முறையிட்டதின்பேரில் நான் இந்த செயலை கண்டித்து பொதுமக்களுடன் கடந்த 30.09.2026 தேதி அன்று சட்டமன்றத்திற்கு வெளியே போராட பொதுமக்களுடன் அங்கு வந்திருந்தேன்.
அந்த சமயத்தில் சுற்றுலா மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சராக இருக்கும் மல்லாடி கிருஷ்ணராவ் நான் பொதுமக்களுடன் நின்றிருந்ததை மிக அருகிலிருந்து பார்த்தும் எங்களை ஏறெடுத்து கூட பார்த்து பேசாமல் கடந்து செல்ல முயன்றார். அப்போது நான் அமைச்சர் அவர்களை பார்த்து பொதுமக்களுடன் இங்கே நின்று கொண்டிருக்கிறேன். என்ன? ஏது? என்று கேட்காமல் கடந்து செல்கிறீர்களே? புதுச்சேரியில் நடக்கும் சம்பவங்கள் பற்றி ஏதாவது தெரியுமா? அல்லது தெரிந்துகொள்ள வேண்டாம் என்ற நோக்கத்தில் கடந்து செல்ல பார்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பினேன்.
அப்போது அவர் இதற்கெல்லாம் நேரம் இல்லை என்பதுபோல் உடல்அசைவு மற்றும் சைகை மொழியால் பதிலளிக்கும் விதமாக அவரது செயல் இருந்தது. உடனே நான் அவரை பார்த்து இந்த அமைச்சரவையில் ஒரு அமைச்சராக இருக்கும் உங்களுக்கு புதுச்சேரியில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளுக்கும் பதில்சொல்லக்கூடிய கூட்டுபொறுப்பு உள்ளது. இப்படி அலட்சியமாக நடந்துகொள்ளாதீர்கள் என்று கேள்விஎழுப்பியதால் சிறு வாக்குவாதம் ஏற்பட்டது.
அந்த சமயத்தில் அங்கிருந்த பொதுமக்கள் பொறுப்புள்ள அமைச்சர் இப்படி பேசுவது முறையற்ற செயல் என்று அவரை கண்டித்து கோஷமிட்டனர். அத்துடன் அந்த நிகழ்வு முடிந்தது. பிறகு இதுசம்பந்தமாக நான் சட்டமன்றத்தில் அவரிடம் மனுவை கொடுத்துவிட்டு நீங்கள் இப்படி பொறுப்பில்லாமல் அலட்சியமாக நடந்து கொண்டதால் சட்டசபை வளாகத்திற்குள்ளேயே போராட்டம் நடத்த வேண்டியதாகிவிட்டது. உங்களை எதிர்த்து குரல் கொடுக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது. நீங்கள் 2016-2021 ஆட்சிக்காலத்தில்; காலாவதி மருந்து வாங்கியதில் முறைகேடு செய்துள்ளீர்கள்.
அந்த ஊழலில் உங்களுக்கு சம்பந்தம் உள்ளது. நீங்கள் செய்த தவறால் சம்பந்தப்பட்ட மருத்துவத்துறை இயக்குநர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ஊழல் வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். நீங்கள் இப்படி பொறுப்பற்றதனமாக நடந்துகொண்டால் நாங்கள் ஒவ்வொரு பிரச்சனையும் கிளப்பி போராட நேரிடும். மக்கள் தொடர்பான பிரச்சனைகளில் நியாயம் கேட்டு தலையீடுவது எனது கடமை. அதை கேட்டு நிவர்த்தி செய்வது உங்களை போன்ற அமைச்சர்களின் பொறுப்பாகும்.
அதை உணர்ந்து செயல்படுங்கள் நீங்கள் தட்டிகழித்தால் சரியாக இருக்காது. அந்த ஊழல் வழக்கில் சிக்கினால் தொடர்ந்து நீங்கள் அமைச்சராக பதவி வகிக்கமுடியாது என்று கூறிவிட்டு நான் கொண்டு சென்ற மனுவை அவரிடம் கொடுத்துவிட்டு வந்தேன்.
அதன்பிறகு அவர் இந்த பிரச்சனைகளுக்கு சம்பந்தமே இல்லாத மீனவ சமுதாய பிரதிநிதிகளை அவருடைய அறைக்கு அழைத்து எனக்கு எதிராக போராட்டம் நடத்த தூண்டிவிட்டு இருக்கிறார். நான் அன்று காலை சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் பொதுமக்களுடன் போராட்டம் நடத்திய அதே சட்டமன்ற வாயில் படிக்கட்டில் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் தூண்டுதலின்பேரில் மீனவ சமுதாய பிரதிநிதிகள் அதே இடத்தில் அமர்ந்து எனக்கு எதிராக போராட்டம் நடத்தி அவதூறாக கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தினார்கள். அமைச்சராக பொறுப்பு வகிக்கும் இவரே இப்படி ஒரு சமுதாய மக்களை தூண்டிவிட்டு சட்டசபை வளாகத்தில் போராட்டம் நடத்தியிருப்பது புதுச்சேரி சட்டமன்ற வரலாற்றில் இதுவரை இல்லாத நிகழ்வாக உள்ளது. கடந்த கால புதுச்சேரி அரசியலில் இப்படிப்பட்ட ஒரு நிகழ்வு நடந்தது கிடையாது.
கடந்த 2021-2026 ஆட்சிக்காலத்தில் ஆதிதிராவிடர் சமுதாயத்தை சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் பதவியிலிருந்தனர். இடையில் அவர்கள் இரண்டு பேரும் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்கள். அந்தசமயத்தில் புதுச்சேரியில் இரண்டாவது பெரிய சமுதாயமாக இருக்கும் ஆதிதிராவிட சமுதாயத்தில் ஒருவருக்கு கூட அந்த அமைச்சரவையில் இடம்பெறவில்லை. ஆளுங்கட்சியில் ஆதிதிராவிடர் சமுதாயத்தை சேர்ந்த தகுதியானவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தபோதிலும் அந்த சமுதாயத்திற்கு அமைச்சர் பதவி வழங்காமல் மாற்று சமுதாயத்தை சேர்ந்த இரண்டு பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அப்போது பதவி இழந்தவர்கள் இந்த சமுதாயத்தை தூண்டிவிட்டு எந்த போராட்டமும் நடத்தவில்லை.
அதேநேரத்தில் ஆளுங்கட்சியில் தகுதியான ஆதிதிராவிடர் சமுதாயத்தை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்களும் அவர்கள் சார்ந்த இந்த சமுதாயத்தை தூண்டிவிட்டு எந்த போராட்டமும் நடத்தவில்லை. இதுதான் கடந்த கால புதுச்சேரி வரலாறு ஆனால் தற்போது அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவின் இந்த செயல் புதுச்சேரி அரசியலில் பெரும் ஆபத்தை விளைவிக்கும் அச்சுறுத்தும் செயலாக உள்ளது.
சமுதாய மக்களை தூண்டிவிட்டு அவருக்கு ஆதரவாக போராட வைத்து மற்றவர்களை பணிய வைக்க முயற்சிக்கும் இவரது செயல் புதுச்சேரி அரசியலில் தவறான முன்னுதாரணமாக மாறிவிடும். இது கண்டிக்கதக்கது. இதை யாரும் கண்டிக்காமல் வேடிக்கை பார்த்ததும் அபத்தமான செயலாக உள்ளது.
மேற்கண்ட மீனவ சமுதாய மக்களின் போராட்டம் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் தூண்டுதலாலே நடைபெற்றது என்பது சட்டமன்றத்தில் உள்ள அனைவருக்கும் கண்கூடாக தெரியும். ஆனால் இப்படிப்பட்ட செயலில் ஈடுபட்ட மல்லாடி கிருஷ்ணராவ் மீதும், அவரின் தூண்டுதலின் பேரில் போராட்டம் நடத்தியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்காமலிருந்தது வியப்பாக இருக்கிறது.
அதேநேரத்தில் சட்டமன்ற வளாகத்தில் நியாயம் கேட்டு போராடிய பொதுமக்கள் மீதும், என் மீதும் கடுமையான வழக்கு பதிவுசெய்யப்பட்டு இருக்கிறது. அதேபோல அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் அவர்கள் தூண்டுதல்பேரில் அதே இடத்தில் போராடியவர்கள் மீதும், அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் மீதும் வழக்கு பதிவு செய்யாமல் இருப்பது ஏன் என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஆகையால் இந்த சம்பவத்திற்கு காரணமாக இருக்கும் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் மீதும், அவருக்கு ஆதரவாக சட்டமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தி என்னை பற்றி அவதூறாக கோஷம் எழுப்பியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
மீனவ சமுதாய பிரதிநிதிகள் சட்டமன்ற வளாக வாயிற் படிக்கட்டு மற்றும் அண்ணாசதுக்கம் அருகே நடைபெற்ற போராட்டத்தின்போதும் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் யார்யாருக்கெல்லாம் போன் செய்து பேசி எனக்கு எதிராக போராட்டம் செய்ய தூண்டினார் என்பதை கண்டறிய இந்த குறிப்பிட்ட காலக்கட்டத்தில் அவர் மற்றும் அவரின் ஒரு சில ஆதரவாளர்களின் தொலைப்பேசி உரையாடல்களை கண்டறிந்தாலே இந்த ஆபத்தான அரசியல் பிண்ணனி பற்றி வெளியுலகிற்கு வெட்டவெளிச்சமாகும்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.