Times of Puducherry
தஞ்சாவூர் ரயில் நிலைய முகப்பு பகுதியில் பெரிய கோயில் மாதிரி முன்பு இந்தியில் பெயர்ப் பலகை வைக்கப்பட்டதைக் கண்டித்து போராட்டம் நடத்த திமுகவினர் திரண்ட நிலையில், அந்தப் பெயர்ப்பலகை அகற்றப்பட்டது. அதேபோல, தமிழ், ஆங்கில மொழியில் இருந்த பலகைகளும் அப்புறப்படுத்தப்பட்டன.
அம்ரித் பாரத் திட்டத்தில் தஞ்சாவூர் ரயில் நிலையம் ரூ.21 கோடியில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதில், ரயில் நிலைய முகப்பு பகுதி தஞ்சாவூர் பெரிய கோயில் மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு தஞ்சாவூர் சந்திப்பு என்ற பெயர்ப் பலகை தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய 3 மொழிகளில் வைக்கப்பட்டிருந்தது. இதில் பெரிய கோயில் மாதிரிக்கு முன்பு, இந்தி பெயர்ப்பலகையும், அதன் இரு புறமும் தமிழ் மற்றும் ஆங்கில பெயர்ப் பலகைகளும் பொருத்தப்பட்டிருந்தன.
இதையறிந்த தமிழ் ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் அங்கு திரண்டு, பெரிய கோயில் மாதிரி முன் தமிழ் பெயர்ப் பலகையைப் பொருத்தவேண்டும் என்றும், அங்குள்ள இந்தி பெயர்ப் பலகையை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரி நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி எம்.பி. ச.முரசொலி, எம்எல்ஏ துரை.சந்திரசேகரன், முன்னாள் எம்எம்ஏக்கள் டிகேஜி. நீலமேகம், மகேஷ் கிருஷ்ண சாமி, மேயர் (பொறுப்பு) அஞ்சுகம் பூபதி, முன்னாள் மேயர் சண்.ராமநாதன் உள்ளிட்ட திமுக வினர் ரயில் நிலையம் முன்பு திரண்டனர். இதையடுத்து, ரயில்வே தொழிலாளர்கள் இந்தி உட்பட 3 பெயர்ப் பலகைகளையும் அகற்றியதால், திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தாமல் கலைந்து சென்றனர்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.