Times of Puducherry
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் 8,482 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொகுதியை கைப்பற்றினார் இந்த வெற்றியால் தட்டாஞ்சாவடி தொகுதி மீண்டும் ரங்கசாமியின் கோட்டையாகியுள்ளது.
புதுச்சேரியில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் தட்டாஞ்சாவடி மற்றும் மங்களம் தொகுதியில் முதலமைச்சர் ரங்கசாமி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதில் தட்டாஞ்சாவடி தொகுதியை ராஜினாமா செய்த நிலையில் கடந்த 6-ம் தேதி தட்டாஞ்சாவடி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் என்.ஆர்.காங்., சார்பில் அசோக் ஆனந்த், காங்., சார்பில் விநாயகம், தி.மு.க., சார்பில் சேதுசெல்வம், இந்திய கம்யூ., சலீம் உட்பட 11 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று புதுச்சேரி லாஸ்பேட்டை மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் எண்ணப்பட்டது, நான்கு சுற்றுக்களாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், நான்காவது சுற்று முடிவின்படி 13,358 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களையும் பின்னுக்கு தள்ளி, 8,482 வாக்குகள் வித்தியாசத்தில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் வெற்றி பெற்றார்,
அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் விநாயகம் 4876 வாக்குகளும், திமுக வேட்பாளர் சேது செல்வம் 2664 வாக்குகளும்,கம்யூனிஸ்டு வேட்பாளர் சலீம் 310 வாக்குகள், நாம் தமிழர் கட்சி 172 வாக்குகளும் பெற்றனர்.
இடை தேர்தலில் என்.ஆர் காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் வெற்றியால் தட்டாஞ்சாவடி தொகுதி ரங்கசாமியின் கோட்டை என்பது மீண்டும் நிரூபணம் ஆகி உள்ளது இதனை கொண்டாடும் வகையில் வாக்கு எண்ணிக்கை மையத்தின் வெளிய கூடியிருந்த அவரது ஆதரவாளர்கள் ஆட்டம் பாட்டத்துடன் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.